செங்கோட்டையனுக்கு மாநில பதவி தரப்படாதது ஏன்? விஜய் பக்கம் செல்லும் 4 தலைவர்கள்! புது அரசியல் கணக்கு
சென்னை: அதிமுகவில் பல ஆண்டுகளாக இருந்த மூத்த தலைவரான செங்கோட்டையன் இன்று தவெகவில் இணைந்தார். இருப்பினும், இது செங்கோட்டையன் உடன் முடியாதாம். வேறு சில தலைவர்களும் கூட தவெகவில் இணைய வாய்ப்பு இருப்பதாக முன்னாள் எம்பி கேசி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், செங்கோட்டையனுக்கு மாநில பதவி தரப்படாதது ஏன் என்பது குறித்தும் அவர் விளக்கியுள்ளார்.
அதிமுக மூத்த தலைவரான செங்கோட்டையன் சமீபத்தில் தான் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதிமுகவை இணைப்பேன் என சொல்லி அவர் டிடிவி தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோரைச் சந்தித்த நிலையில், கட்சிக்கு எதிராகச் செயல்படுவதாகச் சொல்லி செங்கோட்டையனை எடப்பாடி பழனிசாமி நீக்கினார். இதனால் செங்கோட்டையன் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பதில் பெரிய கேள்வி எழுந்தது.

செங்கோட்டையன்
இந்தச் சூழலில் தான் அவர் தவெகவில் இணையவுள்ளதாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் பரவியது. நேற்றைய தினம் அவர் தனது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். இந்தச் சூழலில் தான் செங்கோட்டையன் இன்று தவெகவில் இணைந்தார். பனையூர் கட்சி அலுவலகத்திற்குத் தனது ஆதரவாளர்களுடன் சென்ற செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார். அவருக்கு 4 மேற்கு மாவட்டங்களுக்கான அமைப்புச் செயலாளர் பதவி தரப்பட்டுள்ளது. இதற்கிடையே செங்கோட்டையனை தொடர்ந்து மேலும் சில தலைவர்கள் தவெகவில் ஐக்கியமாகலாம் என்று மாஜி எம்பி கேசி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கேசி பழனிசாமி
இது தொடர்பாக கேசி பழனிசாமி தந்தி டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில், "தவெகவில் முதல் முறையாக ஒரு வேஷ்டி கட்டிய தலைவர் இணைந்துள்ளார். முதலில் அவரது அரசியல் பத்திரமாக இருக்க வேண்டும். அடுத்து அவருக்கு ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுத்துள்ளனர். அதிமுகவை ஒருங்கிணைப்பதற்கு அவர் முயற்சி செய்தார்.. அப்படிச் சொல்லிவிட்டு, அதிமுகவினரை தவெகவில் ஒருங்கிணைக்கும் பணியைத் தான் செங்கோட்டையன் செய்துள்ளார். இந்த வேலையை தான் செங்கோட்டையனுக்கு விஜய் வழங்கி இருந்தார் போல!

4, 5 தலைவர்கள்
பீகார் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவினர் மத்தியில் ஒரு எழுச்சி ஏற்பட்டு இருந்தது. எப்படியும் அடுத்த தேர்தலில் வென்றுவிட முடியும் என நம்பினர். ஆனால் செங்கோட்டையனின் இந்த நடவடிக்கையால் அதிமுக தொண்டர்களிடையே ஒரு சோர்வு ஏற்பட்டுள்ளது. அதை நாம் மறுக்க முடியாது. திமுகவை வீழ்த்தி தவெகவினர் வென்று ஆட்சியைப் பிடிப்பார்களா எனத் தெரியாது. ஆனால், அதிமுக வெற்றியைத் தடுக்கும் பணியைத் தான் அவர்கள் செய்ய முயல்வார்கள்.
செங்கோட்டையனுக்கு நான்கு மாவட்ட பொறுப்புகள் தரப்பட்டுள்ளது. இன்னும் குறைந்தபட்சம் 4 முதல் 5 முக்கியஸ்தர்கள் விஜயோடு பயணிக்கத் தயாராக இருக்கிறார்கள். ஏற்கனவே தென் மாவட்டங்களுக்குத் தினகரன், ஓபிஎஸ் போன்றவர்கள் இருக்கிறார்கள். டெல்டாவில் வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் இருக்கிறார்.
மாநில பதவி இல்லாதது ஏன்
செங்கோட்டையனுக்கு மாநில பதவி தராமல் இருக்க இதுவும் காரணம். 4 மாவட்டங்களுக்கான பதவியை மட்டும் செங்கோட்டையனுக்கு கொடுத்ததன் மூலம் மற்றவர்களும் வாய்ப்பு இருக்கிறது வாருங்கள் என்றே விஜய் சொல்ல வருகிறார். இது ஒரு மறைமுக அழைப்பாகக் கூட இருக்கலாம். ஆனால், அதிமுக தொண்டர்களுக்கும் தொண்டர்களுக்கும் செங்கோட்டையனுடைய முடிவு வருத்தமானது துரதிருஷ்டமானது.. அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
அதேநேரம் இதனால் கட்சி பாதிக்கப்படுகிறதே.. இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.. நாம் ஆட்சி அமைக்கிற வாய்ப்புகள் பறிபோகிறதே என்று ஒரு கலக்கம் ஏற்பட்டுள்ளதை மறுக்க முடியாது" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications