5 அதிமுக மாஜிக்கள் மீது ஊழல் புகார்.. ஆளுநர் கையெழுத்திடுவது எடப்பாடி கையில்!.. பாஜக நெருக்கடி
சென்னை: வரும் 18ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி கூட்டத்தில் அதிமுக கலந்து கொள்ளாவிட்டால் என்னவாகும் என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் ஆர். பிரியன் ஒன் இந்தியா அரசியல் களத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ஆளுநர் மூலம் திமுக அரசுக்கு பாஜக தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்தால் திமுகவுக்கு செல்வாக்கு கூடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

முதல்வர் ஸ்டாலின் பாஜகவை எதிர்ப்பதால் ஆட்சியே கவிழ்ந்தாலும் பரவாயில்லை என பேசியிருந்திருக்கக் கூடாது. அதற்கு பதில் அவர் வேறு வார்த்தைகளை பிரயோகித்திருக்க வேண்டும். இதனால் தொண்டர்கள் சோர்ந்து போவார்கள். ஆட்சி தொடரும் என்பதில் முதல்வருக்கே நம்பிக்கை இல்லை போல என்ற அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளால் விமர்சனங்கள் எழும்.
ஆளுநர் செய்வதெல்லாம் அரசியல் சட்டத்திற்கும் தமிழக மக்களுக்கும் விரோதமாக இருக்கிறது. அதை மக்கள் மன்றத்தில் வைப்பதை திமுக தங்களது கடமையாக நினைக்கிறார்கள். அண்ணாமலையே ஆளுநர் அரசியல் பேசுகிறார் என்கிறார். இந்தியாவில் ஒரே மதத்தை சார்ந்தது, திராவிடம் காலாவதியாகிவிட்டது என்கிறார், குழந்தை திருமணத்தை ஆதரிப்பது போல் பேசுகிறார். அப்படியிருக்கும் போது ஆளுநர் பேசுவதை மக்கள் மன்றத்தில் வைக்காமல் திமுக எப்படி சகித்துக் கொள்ளும்.
இந்த நியாயமான விஷயத்தை திமுக மக்களிடம் கொண்டு செல்வது அதன் கடமை. இதனால் பாஜக செல்வாக்கை இழக்கும் என நினைக்கிறேன். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை செயல்பட முடியாமல் ஆளுநர் செய்து வருகிறார். ஆளுநர் அரசியல் பேசக் கூடாது என அண்ணாமலை பதறுவதற்கு காரணமும் பாஜக மீது கெட்ட பெயர் வந்துவிடும் என்ற காரணமாக இருக்கலாம்.
அரசாங்கம் எழுதி கொடுப்பதை படிப்பதற்காகவே ஆளுநர் இருக்கிறார். கோவையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததுதான் இல்லை என சொல்லவில்லை. ஆனால் ஒரு சம்பவத்தை வைத்து எப்படி தமிழகம் அமைதிப்பூங்காவாக இல்லை என்பதை சொல்ல முடியும். வெளிநாடு போனால் முதலீடு வருமா என ஆளுநர் கேட்பது ஏதோ கட்சித் தலைவர் பேசுவது போல் இருக்கிறது.
செந்தில் பாலாஜியை நீக்குவதற்கான உரிமையே ஆளுநருக்கு கிடையாது. அவர் அரசியல் சட்டத்தை மீறி செயல்படுகிறார். பிறகு அந்த அறிவிப்பை அவரே நிறுத்தி வைக்கிறார். அப்படியென்றால் அவருக்கு அதிகாரம் இல்லை என்பதே அவரே ஒப்புக் கொள்கிறாரா, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுக்கிறார்.
வரும் 18ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம் நடைபெறுகிறது. இதற்கு எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்வாரா மாட்டாரா என தெரியவில்லை. ஒரு வேளை அவர் கலந்து கொள்ளாவிட்டால், 5 மாஜி அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அமித்ஷா கையெழுத்து போட்டு ஆளுநரிடம் கொடுத்தாலும் கொடுப்பார். பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் முதல்வராக இருந்த போது அங்கிருந்த பெண் ஆளுநரை விமர்சித்தாரே. அப்போது ஆளுநருக்கு எந்த உரிமையும் இல்லை என சொன்னார்களே. இப்போது மட்டும் எப்படி ஆளுநருக்கு உரிமை இருக்கும்?
பாஜக ஆளும் மாநிலங்களில் இந்துத்துவாவை எதிர்த்து ஆளுநர் பேசினால் பாஜக சும்மா வேடிக்கை பார்க்குமா? சனாதனத்திற்கும் வள்ளலாருக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. தமிழ்நாட்டையும் தமிழக மண்ணையும் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் கொஞ்சம் கூட புரிந்து கொள்ளாமல் ஆளுநர் சனாதனம் என்ற வார்த்தையை வைத்தே விளையாடி கொண்டிருக்கிறாரே.
அண்ணாமலை எதிர்க்கட்சி, அவர் என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் ஆளுநர் எப்படி முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்தெல்லாம் பேசலாம். ஆளாளுக்கு அரசியல் பேசும் போது ஆளுநரும் அரசியல் பேசலாம் என தமிழிசை சவுந்திரராஜன் கூறுகிறார். ஆனால் அரசியல் சட்ட அடிப்படையில் பொறுப்பில் இருப்பவர்கள் நேரடியாக அரசியல் விமர்சனத்தில் இறங்க வேண்டிய அவசியம் இல்லை.
50 , 60 ஆண்டுகளாக தமிழகத்தில் திராவிடம் எனும் தத்துவம் இருக்கும் போது அந்த தத்துவத்தின் மீது நேரடியாக நீங்கள் ஏன் அடிக்கிறீர்கள். ஆளுநரின் பணி என்ன, முதல்வரின் தலைமையில் உள்ள கேபினெட் கொடுக்கும் விஷயங்களை ஏற்க வேண்டியதுதான் அவருடைய பணி. ஆளுநர் பண்பாட்டு ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் சர்ச்சைகளை உருவாக்குகிறார். தமிழக மக்களை பிரிப்பது போல் பேசுகிறார்.
ஜி.யு.போப் மொழிபெயர்த்த திருக்குறளில் தவறு இருக்கிறது என ஆளுநர் பேசுகிறார். வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவர் நம் திருக்குறள் மீதான பற்றால் அதை மொழிபெயர்த்து வெளிநாட்டினரும் படிக்க ஏதுவான விஷயத்தை செய்துள்ளார். இன்று உலகம் முழுவதும் திருக்குறள் போற்றப்படுவதற்கு ஜி.யு.போப் திருக்குறளை மொழிபெயர்த்ததும் ஒரு காரணம் ஆகும். கிறிஸ்துவ மிசனரிகள் இங்கு வந்து எத்தனையோ மருத்துவ சேவைகளை செய்துள்ளார்கள்.

மணிப்பூரில் இரு பழங்குடியினருக்கு இடையே நடந்த மோதலில் எத்தனையோ தேவாலயங்கள் இடிக்கப்பட்டன. அவற்றை இடிக்க பாஜக அரசு ஏன் அனுமதித்தது. அண்ணாமலையை பொருத்தமட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. அப்படி கொடுத்தால் வரும் 2026 இல் எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என கருதுகிறார்.
அவருக்கு தமிழகத்தில் பெரிய செல்வாக்கு இல்லை என்ற எண்ணம் அண்ணாமலைக்கு இருக்கிறது. பாஜகவை விட்டு திமுகவிலிருந்து வரும் கூட்டணி கட்சிகளுடன் தனி அணியாக 20254 இல் போட்டியிடலாம் என எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். இப்படி தனி அணி அமைத்தால் பாஜகவும் தோற்கும், அதிமுகவும் தோற்கும். இருவரும் இணைந்து போட்டியிட்டால்தான் 4 அல்லது 5 சீட்டுகளிலாவது வெல்ல வாய்ப்பிருக்கிறது. வரும் 18 ஆம் தேதி நடக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் அதிமுக கலந்து கொள்ளாவிட்டால் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பி வி ரமணா, சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், கே சி வீரமணி உள்ளிட்டோரின் ஊழல் புகார் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் கையெழுத்திடுவார். இவ்வாறு ப்ரியன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications