நேஷனல் டிரெண்டான செந்தில் பாலாஜி.. கார்கே டூ மம்தா! குவிந்த ஆதரவு - பாஜகவுக்கே பூமாராங்காகும் ரெய்டு
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனை தேசிய அளவில் டிரெண்டாகி பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைத்து உள்ளது. இது பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் அமைந்து உள்ளது.
கடந்த மாதம் தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

மத்திய துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் சென்னை அடையாறு பசுமை வழிச் சாலையில் இருக்கும் செந்தில் பாலாஜி வீடு, அவரது சகோதரர் தங்கியிருந்த வீடு மற்றும் அலுவலகங்களுக்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் தலைமை செயலகத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த போது ஓட்டுநர், நடத்துனர் பணிகளை வாங்கித் தருவதாக கூறி சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாகவே அமலாக்கத்துறை இந்த சோதனை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த சோதனையை விமர்சித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், "தன் வசம் இருக்கும் விசாரணை அதிகார அமைப்புகள் மூலமாகத் தனக்கு எதிரான அரசியல் சக்திகளை பா.ஜ.க. பழிவாங்கும். அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி இது மட்டும்தான் என்று நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன். இதற்கு இந்திய அளவில் எத்தனையோ எடுத்துக்காட்டுகள் சமீப காலங்களில் பல்வேறு மாநிலங்களில் நடந்துள்ளன.
இந்த நிலையில் மாண்புமிகு அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களது இல்லத்தில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். பா.ஜ.க.வின் மிரட்டல் அரசியலை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அரசியல்ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்களை, இதுபோன்ற புறவாசல் வழியாக அச்சுறுத்தப் பார்க்கும் அரசியல் செல்லுபடியாகாது என்பதை பா.ஜ.க. தலைமை உணர வேண்டும். அதனை அவர்களே உணரும் காலம் நெருங்கிக் கொண்டுதான் இருக்கிறது.'' என்று அவர் தெரிவித்து இருந்தார்.
அதேபோல், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் இதற்கு கண்டங்களை பதிவு செய்து உள்ளார். இதுகுறித்து அவர் விடுத்த அறிக்கையில், பாஜக அமலாக்கத்துறை தவறான வழியில் பயன்படுத்தி வருவதாகவும், விசாரணை அமைப்புகளின் மூலம் எதிர்க்கட்சிகளை ஒடுக்க மத்திய அரசு நினைப்பதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள கண்டனத்தில், "திமுக அரசுக்கு எதிரான பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டிக்கிறேன். பாஜக அரசு விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவது தொடர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் மதுவிலக்குத் துறை அமைச்சரின் அலுவலகம், அவரது இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவதை ஏற்க முடியாது" என்று தெரிவித்து உள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரி விடுத்த அறிக்கையில், "எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களின் அமைச்சர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை சோதனை நடத்துவதை நான் கண்டிக்கிறேன். மத்திய அரசுக்கு எதிரான குரலை நசுக்க மோடி அரசு அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது. செந்தில் பாலாஜி அலுவலக சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும்." என்றார்.
டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் இதுபற்றி தெரிவிக்கையில், "அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அலுவலகத்தில் நடத்திய சோதனை என்பது கண்மூடித்தனமான அரசியல் பழிவாங்கல். மத்திய விசாரணை அமைப்புகளை எதிர்க்கட்சிகளை பழிவாங்கவும், துன்புறுத்தவும் பாஜக அரசு பயன்படுத்துகிறது." என்று தெரிவித்துள்ளார்.
அதே போல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியும் தன்னுடைய கண்டனத்தை பதிவிட்டு உள்ளார். வரும் ஜூன் 23 ஆம் தேதி மத்திய பாஜக அரசுக்கு எதிரான மனநிலை கொண்ட கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் கூட உள்ளது.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனையை பல மாநிலங்களை சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்களும் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட தேசிய கட்சித் தலைவர்களும் கண்டித்து இருப்பது எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பை மேலும் வலுவடைய செய்து இருப்பதாக தெரிகிறது. ஆதரவு தெரிவித்த தலைவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ட்விட்டரில் நன்றி தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications