அரை சதம்.. 50ஆவது முறையாக செந்தில் பாலாஜிக்கு காவல் நீட்டிப்பு! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 50வது முறையாக நீட்டிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, புழல் சிறையில் இருந்து வரும் நிலையில், நீதிமன்றக் காவலை நாளை வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன. ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.

அண்மையில் நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார் செந்தில் பாலாஜி. ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காணொலி காட்சி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜூலை 29 ஆம் தேதி, அதாவது இன்று வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இன்றுடன் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் முடிவடையும் நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 50வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. புழல் சிறையில் இருந்து இன்று காணொளிக் காட்சி மூலம் நீதிபதி அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார் செந்தில் பாலாஜி.
இதைத்தொடர்ந்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நாளை (ஜூலை 30) வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. ஏற்கனவே செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 49 முறை நீட்டிக்கப்பட்ட நிலையில் இன்றைய உத்தரவின் மூலமாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 50வது முறையாக நீட்டிக்கப்பட்டு உள்ளது.
செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது அமலாக்கத்துறை தரப்புக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications