பேங்க் மேனேஜரிடம் குறுக்கு விசாரணை.. குடைந்து எடுத்த செந்தில் பாலாஜி.. மீண்டும் காவல் நீட்டிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 56வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறை வழக்கில் வங்கி மேலாளரிடம் செந்தில் பாலாஜி தரப்பில் இன்று குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. குறுக்கு விசாரணை இன்று நிறைவடையாத நிலையில், விசாரணை ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில், அமலாக்கத் துறையினரால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, கடந்த ஆகஸ்ட் மாதம் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன. வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், கடந்த ஆகஸ்ட் எட்டாம் தேதி செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டு பதிவை தொடங்கியது.

senthil balaji enforcement directorate chennai

குற்றச்சாட்டு பதிவின் போது, தன் மீதான வழக்கு பொய்யாகப் புனையப்பட்டது என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடரப்பட்ட பொய் வழக்கு என்றும், அமலாக்கத்துறை கைப்பற்றிய அவணங்கள் என்னுடையது அல்ல என்றும் செந்தில் பாலாஜி நீதிபதி அல்லியிடம் தெரிவித்தார். மேலும், சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.

செந்தில் பாலாஜி விடுத்த வேண்டுகோளை ஏற்று, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி. அதன்படி ஆகஸ்ட் 16 ஆம் தேதி, இந்த வழக்கில் முதல் சாட்சியமாக சேர்க்கப்பட்டுள்ள அப்போதைய கரூர் சிட்டி யூனியன் வங்கியின் தலைமை மேலாளர் ஹரிஷ்குமார் நேரில் ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை வழக்கறிஞர் விசாரணை நடத்தினார். செந்தில் பாலாஜி, அவரது மனைவி மேகலா, செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரின் வங்கி கணக்குகள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தார் ஹரிஷ் குமார்.

அப்போது வங்கி தலைமை மேலாளர் அளித்த பதில்கள் சிலவற்றுக்கு செந்தில் பாலாஜி தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் அசல் ஆவணங்கள் இல்லை என்றும், சில கூடுதல் ஆவணங்களை தற்போது புதிதாக தாக்கல் செய்து இருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வங்கி தலைமை மேலாளரிடம் செந்தில் பாலாஜி தரப்பு குறுக்கு விசாரணைக்காக ஆகஸ்ட் 22 ஆம் தேதிக்கு அதாவது இன்றைக்கு ஒத்திவைத்தார் நீதிபதி அல்லி.

இந்நிலையில், சாட்சிகளின் குறுக்கு விசாரணை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு இன்று நடைபெற்றது. கரூர் சிட்டி யூனியன் வங்கியின் தலைமை மேலாளர் ஹரிஷ்குமாரிடம் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் கெளதமன் குறுக்கு விசாரணை நடத்தினார். வங்கியின் ஆவணங்கள், கவரிங் லெட்டர் தொடர்பாகவும் பல்வேறு கேள்விகள் செந்தில் பாலாஜி தரப்பில் குறுக்கு விசாரணையில் கேட்கப்பட்டது.

ஆனால், குறுக்கு விசாரணை இன்று நிறைவடையாததால் வழக்கின் விசாரணையை வரும் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி எஸ். அல்லி, அதுவரை செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலையும் நீட்டித்து உத்தரவிட்டார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 56வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+