செந்தில் பாலாஜி வழக்கில் அமைச்சர் பதவியா, ஜாமீனா? சாய்ஸ் கொடுத்த சுப்ரீம் கோர்ட்! நாளை கிளைமாக்ஸ்
சென்னை: செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வேண்டுமா, ஜாமீன் வேண்டுமா என்பதை நாளை மதியத்திற்குள் தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வேலை வாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் அவர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.

சிறையில் இருந்த போது பல முறை ஜாமீன் கோரியும் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. அவர் அமைச்சராக பதவி வகித்து வருவதால் சாட்சிகளை மிரட்டி வழக்கை திசை திருப்ப முடியும் என அமலாக்கத் துறை எதிர்ப்பு தெரிவித்தது.
இதையடுத்து ஜாமீன் கிடைக்க வேண்டி செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்தும் ஜாமீனுக்கு பல்வேறு தடைகள் ஏற்பட்டு ஒரு வழியாக ஜாமீன் கிடைத்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி விடுதலையானார்.
அவ்வாறு விடுதலையான இரு நாட்களில் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சரவையில் இணைக்கப்பட்டார். இதற்கு பெரும் எதிர்ப்பு எழுந்தன. அமைச்சர் பதவியில் இல்லை என்பதால்தான் ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் இவர் மீண்டும் அமைச்சரவையில் இணைந்துவிட்டார் என எதிர்ப்பு காட்டப்பட்டது.
இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் போது செந்தில் பாலாஜிக்கு ஜாமீனை வழங்கி பெரும் தவறு இழைத்துவிட்டோம் என உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.
மேலும் அமைச்சர் பதவி வேண்டுமா, ஜாமீன் வேண்டுமா என்பதை நாளை மதியத்திற்குள் முடிவு செய்து தெரிவிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா செய்யலாம் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் அவர் ராஜினாமா கடிதத்தை முதல்வருக்கு அனுப்பி விட்டதாகவும் அதை இன்றைய தினம் ஆளுநர் ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் அனுப்பி வைப்பார் என்றும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications