செந்தில் பாலாஜிக்கு திட உணவு.. நடை பயிற்சி.. 20 நாட்களுக்கு சிகிச்சை.. காவேரி மருத்துவமனை
சென்னை: செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் ஆபரேசன் செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் தற்போது திட உணவு வழங்கப்படுவதாகவும் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. 20 நாட்களுக்கு மருத்துவர்களின் கண்காணிப்பில் செந்தில் பாலாஜி இருக்க வேண்டும் எனவும் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பலரிடம் பணம் பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கடந்த 14ஆம் தேதி அதிகாலை கைதுசெய்தனர். அப்போது, நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ரத்த நாளத்தில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, உயர்நீதிமன்ற உத்தரவின்படி, காவேரி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு இதய நோய் சிறப்பு மருத்துவர்கள் குழுவினரால் கடந்த 21ஆம் தேதி செந்தில் பாலாஜிக்கு 5 மணி நேரம் பைபாஸ் ஆபரேசன் செய்யப்பட்டது. 4 ரத்த நாளங்களில் அடைப்பு இருந்த நிலையில் அந்தப் பகுதிகளில் 4 ரத்தக் குழாய்கள் பொருத்தப்பட்டன.

இதனைத் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, வென்டிலேட்டர் கருவி பொருத்தி மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர். அறுவை சிகிச்சைக்குப் பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நிலை சீராக இருப்பதாகவும், ரத்த அழுத்தம் மற்றும் ரத்த ஓட்டம் சீராக இருப்பதாகவும் காவேரி மருத்துவமனை தெரிவித்தது.
சனிக்கிழமையன்று சென்னை காவேரி மருத்துவமனையில் 7வது தளத்தில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் இருந்து, 4-வது தளத்தில் உள்ள அறை எண் 435க்கு அமைச்சர் செந்தில்பாலாஜி மாற்றப்பட்டுள்ளார். செந்தில்பாலாஜியின் உடல்நிலை தொடர் கண்காணிப்பில் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
பைபாஸ் ஆபரேசன் செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு திரவ உணவு மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் திட உணவு அளிக்கப்படுகிறது. அவருக்கு நடை பயிற்சியும் அளிக்கப்படுவதாகவும் மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இன்னும் 20 நாட்களுக்கு மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் செந்தில் பாலாஜி இருக்க வேண்டும் எனவும் காவேரி மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications