"ஸ்டாப் பண்ணுங்க".. கவர்னரே நினைச்சாலும் முடியாது.. பாஜகவின் "ஒன் வே".. திமுகவின் "யூ-டர்ன்".. அடடே
சென்னை: செந்தில் பாலாஜி கேஸ் விஸ்வரூபமெடுத்து வரும் நிலையில், அதுகுறித்த ஸ்பெஷல் தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.. என்ன அது?
செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர தமிழக அரசு விரும்பியது.. ஆனால், இதற்கு ஆளுநர் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், "இலாகா இல்லாத அமைச்சராக" செந்தில் பாலாஜி தொடர்வார் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில்தான், திடீரென செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ரவி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.. இது மிகுந்த பரபரப்பை அரசியல் களத்தில் ஏற்படுத்தியிருந்தது.. முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சியினர் தரப்பில் இருந்து கடும் கண்டனம் எழுந்தது... குறிப்பாக சட்டரீதியான விமர்சனங்கள் இதற்கு குவிந்தன..
ஆனால், நாலாபக்கமும் விமர்சனம் எழுந்தநிலையில், செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை நள்ளிரவில் ஆளுநர் ரவி நிறுத்தி வைத்துள்ளார். உத்தரவு நிறுத்தப்பட்டுவிட்டாலும், ஆளுநரின் இந்த நடவடிக்கையானது, பல்வேறு விவாதங்களை அரசியல் களத்தில் ஏற்படுத்தியது.
"செந்தில் பாலாஜி விவகாரத்தில் இப்படி தன்னிச்சையாக செயல்பட ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை.. அமைச்சரவையில் ஏதாவது புதிதாக மாற்றம் செய்ய வேண்டும் என்றாலோ, அல்லது ஒரு அமைச்சரை நீக்க வேண்டும் என்றாலோ, அல்லது புதிதாக ஒருவரை அமைச்சராக்க வேண்டும் என்றாலோ, இதற்கெல்லாம் அமைச்சரவையின் தலைவராக உள்ள முதல்வருக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது..
இதுதொடர்பாக முதல்வர் எடுக்கும் முடிவுகளுக்குதான், ஆளுநர் கட்டுப்பட்டு நடக்க வேண்டுமே தவிர, அவரது இஷ்டம்போல யாரையும் புதிதாக அமைச்சரவையில் சேர்க்கவோ, அமைச்சரவையில் இருந்து நீக்கவோ அரசியலமைப்பு சட்ட ரீதியாக ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை" என்றனர்.
மற்றொரு சாராரோ, "முதல்வர் பரிந்துரைக்கும் அனைத்து விஷயங்களுக்கும் ஆளுநர் செவிசாய்க்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை... ஆளுநர் கையெழுத்திட்டால் மட்டுமே ஒருவர் அமைச்சராக முடியும்... ஒருவரை அமைச்சராக்க அதிகாரம் படைத்த ஆளுநரால், குறிப்பிட்ட காரணங்களுக்காக அமைச்சர் பதவியில் இருந்து ஒருவரை நீக்கவும் தனிப்பட்ட அதிகாரம் உண்டு. இதை அரசியலமைப்பு சட்டரீதியாக மறுக்க முடியாது.
அமைச்சர் என்ற பதவியில் நீடித்துக்கொண்டு அவர் எப்படி தனக்கு எதிரான குற்ற வழக்கை நேர்மையாக எதிர்கொள்வார்? ஒரு மாநிலத்தில் ஆட்சி சட்டத்துக்கு புறம்பாக எல்லை மீறி செல்கிறது என்றால், அந்த ஆட்சியை கவிழ்க்கவும் ஆளுநருக்கு பிரத்யேக அதிகாரம் உண்டு" என்று மாற்றுக்கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது" என்று மறுதரப்பில் எதிர்வாதம் முன்வைக்கப்பட்டது.
பரபர வாதங்கள்: இப்படி இருவேறு விவாதங்களின் பரபரப்பு இன்னமும் அடங்கவில்லை. செந்தில்பாலாஜி நீக்கத்தை நிறுத்தி வைப்பதாக கவர்னர் தெரிவித்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நகர்வுகள் என்னவாக இருக்கும் என்கிற பட்டிமன்றம் வழக்கறிஞர்கள் மத்தியில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில், இது குறித்து நாம் விசாரித்தபோது முக்கிய தகவல்கள் சில பிரத்யேகமாக நமக்கு கிடைத்துள்ளன.. நம்மிடம் சில சீனியர்கள் சொல்லும்போது, "அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜி நீக்கம் என்பது கவர்னரின் உத்தரவு. நிறுத்தி வைப்பது என எழுதப்பட்ட கடிதம் என்பது ஒரு தகவல்... நிறுத்தி வைப்பதாகவோ அல்லது திரும்ப பெறப்படுகிறது என்பதாகவோ கவர்னர் உத்தரவு போட முடியாது என்பதாலேயே கடிதம் மூலமாக நிறுத்திவைப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.
நிறுத்தி வைப்பு: அதாவது, ஏதாவது ஒரு முக்கிய விவகாரம் குறித்து கவர்னரிடமிருந்து ஒரு உத்தரவு போடப்பட்டு விட்டால், கவர்னரே நினைத்தாலும் அதை திரும்ப பெற முடியாது. அதனால் தான் "நிறுத்தி வைப்பு" என்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
அப்படியானால் செந்தில் பாலாஜி விவகாரத்தில் அடுத்த பாஸிபிலிட்டி என்ன இருக்கிறது? அமைச்சராக அவரை சேர்க்கிறோம் என மீண்டும் முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை செய்தால் அதனை கவர்னர் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.
ஆனால், நீக்கும் அதிகாரமே கவர்னருக்கு இல்லை என்கிறபோது, அவரது நீக்கத்தை மட்டும் முதலமைச்சர் எப்படி ஏற்பார்? அதனால் மீண்டும் பரிந்துரை என்பது நடக்கிற காரியம் இல்லை. அதனால் இதை மீண்டும் கிண்டினால், சட்டச்சிக்கல் தான் மேலும் அதிகரிக்கும்" என்கிறார்கள் அரசியல் வழக்குகளை கையாளும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள்.
மூத்த வழக்கறிஞர்கள்: இதனிடையே, கவர்னரின் செயல்களுக்கு எதிராக வழக்கு போடலாமா? என்று குற்றவியல் வழக்கறிஞர்களிடம் விவாதித்துள்ளாராம் முதல்வர் ஸ்டாலின். அரசின் நிர்வாகம் சார்ந்த விவகாரங்களில் கவர்னருக்கு எதிராக வழக்குப் போட முடியாது, வேண்டுமானால் கவர்னரின் செயலாளரை கோர்ட்டுக்கு அழைக்க முடியும் என முதல்கட்டமாக சில தகவல்களை முதல்வருக்கு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனராம்.
புயல்: அதேசமயம், கவர்னருக்கு எதிரான விவகாரங்கள் ஏதேனும் சுப்ரீம் கோர்ட்டுக்கு போயிருக்கிறதா? அதில் ஏதேனும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருக்கிறதா?என்பதை மூத்த வழக்கறிஞர்கள் ஆராய்ந்து வருகின்றனர். ஆகமொத்தம், செந்தில் பாலாஜியின் வழக்கு விசாரணை தமிழக அரசியலையும் தாண்டி, தேசிய அளவில் புயலடிக்க துவங்கிவிட்டது.












Click it and Unblock the Notifications