சீமானுக்கு போட்டியாக தனிக்கட்சி..? ஒன்று கூடும் எதிர் கோஷ்டி! நவம்பர் 27 அன்று புதிய பூகம்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக, திமுக எனப் பல கட்சிகளிலிருந்து தனக்கு அழைப்புகள் வந்ததாக நாதக முன்னாள் நிர்வாகி வெற்றிக்குமரன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியை வெற்றிபெறவிடாமல் தடுக்க சில சதிகள் நடைபெற்றதாகப் புகார்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக தமிழ்நாட்டில் முகவரியே இல்லாத ஒரு கட்சிக்கு தேர்தல் ஆணையம் கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கியது. அதை எதிர்த்து குரல் எழுப்பினார் சீமான்.

ntk seeman

முதலில் வந்தவருக்கு வழங்கப்படும் உரிமையின் அடிப்படையில் கரும்பு விவசாயி சின்னம் அந்தக் குறிப்பிட்ட கட்சிக்கு கொடுக்கப்பட்டதாக ஆணையம் விளக்கம் அளித்தது. அதனையடுத்து புதியதாக மைக் சின்னத்தில் நாதக மக்களவை தேர்தலை எதிர்கொண்டது. அப்படி இருந்தும், 8% மேல் வாக்குகளைப் பெற்று கட்சிக்கான அங்கீகாரத்தைப் பெற்றார் சீமான்.

அவரது வெற்றியைப் பலரும் வியந்து பேசினர். அவரது பல தொகுதிகளில் நல்ல முன்னேற்றத்தைக் கண்டிருந்தது. ஒரு பக்கம் மாநிலத்தை ஆளும் திமுக கூட்டணி, மற்றொரு பக்கம் மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி, இடையில் பெரிய கட்சியான அதிமுக கூட்டணியைக் கடந்து சீமான் தனது கட்சி அங்கீகாரத்தைப் பெற்றதை அரசியல் சார்பற்று பலரும் சுட்டிக்காட்டிப் பேசினர். ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு சமீபகாலமாக அக்கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் தொடர்ச்சியாக வெளியேறி வருகின்றனர். மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் எனப் பலர் சீமானை எதிர்த்துக் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இதனிடையே கட்சிக்குள் செல்லவாக்கு மிக்க காளியம்மாள் போன்றவர்கள் ஓரங்கட்டப்படுவதாகத் தகவல் பரவியது. அது உண்மைதான் என்று சொல்லும் அளவுக்கு ஆடியோ பதிவுகள் வெளியாகின. அதில் காளியம்மாளைச் சீமானே 'சின்ன பிசிறு. தட்டிவிட்டுவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்' என்று பேசி இருந்தார். அது தொடர்பாக சீமான் விளக்கமும் அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சில நாட்கள் முன்னதாக மீண்டும் ஒரு ஆடியோ வெளியானது. கட்சிக்குள் சீமான் ஜனநாயகமாகச் செயல்படவில்லை என்று வெளியேறிய பலரும் பேட்டிக் கொடுத்து வருகின்றனர்.

கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் என்று தனியாக ஒரு சமூக வலைத்தளம் இயங்கி வருகிறது. அவர்கள் மீண்டும் கட்சிக்குள் நுழைய முயற்சிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் சில மாதங்கள் முன்னதாக நாதகவின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த வெற்றிக்குமரன் வரும் நவம்பர் மாதம் 27 ஆம் தேதி சீமானுக்கு எதிரான சக்திகளை ஒருங்கிணைத்து ஒரு கூட்டம் நடத்த இருக்கிறார். அதில் பல முடிவுகளை எடுக்க உள்ளனர்.

இந்தக் கூட்டம் எதற்கு? அதன் நோக்கம் என்ன? அதைப் பற்றி வெற்றிக்குமரன் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், "கட்சியை விட்டு நீக்கிய பிறகு நான் எதற்காக சீமானிடம் பேச வேண்டும்? அதற்கான தேவை என்ன இருக்கிறது? நான் என்ன தவறு செய்தேன்? ஏன் என்னை நீக்க வேண்டும்? எனக்கு இன்னும் திமிர் இருக்கிறது. நான் நல்லவன். நான் இந்தக் கட்சிக்கு, கோட்பாட்டிற்கு 100% உண்மையானவன். நான் 5 பைசா கட்சி காசை வாங்கி தின்று இருக்கிறேனா? உங்கள் காசை வாங்கி செலவழித்தேனா? நான் இந்தக் கட்சிக்காக, இனத்திற்காகச் செலவழித்தவன்.

ntk seeman

காளியம்மாள் பிரச்சினை கட்சிக்குள் இருப்பதை சீமானே ஒப்புக் கொண்டுள்ளார். அவரே மறுக்கவில்லை. 'நாங்கள் அப்படிப் பேசிக் கொள்வது இயல்புதான்' என்று சொல்லி இருக்கிறார். நான் கட்சியிலிருந்து விலகிய பிறகு காளியம்மாள் அவரது குடும்ப நிகழ்ச்சிகள் தொடர்பாக அழைப்பிதழ் வைத்தார். நான் இந்த மாதிரியான சந்தர்ப்பத்தில் அவரை சந்திப்பது சரியல்ல என்று நிகழ்ச்சிக்குப் போகாமல் தவிர்த்துவிட்டேன்.

கட்சியில் என்னைப் போன்றவர்கள், காளியம்மாளைப் போன்றவர்கள் வளர்ந்து வருவது சீமானுக்குச் சிக்கலாக இருக்கிறது. 2024 தேர்தலில் காளியம்மாள் போட்டியிடுவார் என அறிவித்தபோது அவருக்குக் கிடைத்த ஆதரவு, கைதட்டல் கூட சீமானுக்குப் பிடிக்காமல் போய் இருக்கலாம். சீமானுக்கு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும், மக்களிடம் தரும் வாக்குறுதிகளை நிறைவேற்றப் பதவிக்கு வரவேண்டும் என்பது உண்மையான நோக்கமாக இல்லை. அப்படி நினைக்கும் யாரும் அடுத்த கட்ட தலைவர்களைச் சகட்டு மேனிக்குக் கட்சியை விட்டுத் தூக்கி எறியமாட்டார்கள்.

நான், காளியம்மாள், கல்யாணசுந்தரம், ராஜீவ்காந்தி போன்றோர் கட்சியைவிட்டுப் போவதால் நாதகவுக்கு இழப்பு இல்லை என்று சிலர் யூடியூபில் பேசுகிறார்கள். வாக்கு சதவீதம் கூடிக் கொண்டுதான் இருக்கிறது பிரச்சினை இல்லை என்று சொல்கிறார்கள். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு நாதக ஓட்டுச் சதவீதம் கூடி இருப்பதாகத் தெரிகிறது. அது உண்மைதான். வெளியேறிப் போனவர்கள் கட்சிக்குள் இருந்திருந்தால் இன்னும் பல மடங்கு கூடி இருக்குமா? இல்லையா?

கட்சியில் தீவிரமாக செயல்பட்ட பலர் இன்று அமைதியாக ஒதுங்கிப் போய்விட்டனர். நான் கூட வெளியே விமர்சித்து அதிகம் பேசுவதில்லை. என் வேலை அது அல்ல. இப்போது சீமான் பலரிடம் வலுக்கட்டாயமாக மன்னிப்புக் கடிதம் பெற்று கட்சியில் சேர்த்து வருகிறார். யாராவது வற்புறுத்தி மன்னிப்புக் கடிதம் வாங்கி கட்சியில் சேர்ப்பார்களா? அதைச் சீமான் செய்கிறார். கட்சி ஒரு கூட்டுத் தலைமைக்கு வர வேண்டும். சீமான் மட்டுமே இருந்தால் நான் மீண்டும் இணைய மாட்டேன். கட்சியும், கொள்கையும்தான் தலைமை. தனிநபர் அல்ல.

ஆகவே வரும் நவம்பர் 27 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள நாதக அதிருப்தியாளர்களை ஒருகிணைந்து ஒரு கூட்டம் நடத்த உள்ளோம். அங்குக் கலந்தாலோசனை நடக்க உள்ளது. அப்போதுதான் தனி அமைப்பாகச் செயல்படலாமா? இல்லை எனில் முன்பே இருக்கும் ஏதேனும் ஒரு அமைப்பில் இணைந்து வலுப்படுத்துவதா? வரும் 2026இல் தனித்து நிற்பதா? இல்லை எனில் கூட்டணியை ஆதரிப்பதா? என முடிவு எடுக்க உள்ளோம்.

எனக்கு எல்லா கட்சிகளிலும் இருந்து அழைப்பு வந்தது. நான் அதை ஏற்காமல் மென்மையாகச் சொல்லி நிராகரித்துவிட்டேன். நான் வழக்கமான அரசியல்வாதி அல்ல. ஈழப் பிரச்சினை காரணமாக ஒரு விபத்தாக நாதகவுக்குள் வந்தேன். புலி வாலைப் பிடித்த கதைதான். அதை விடமுடியாமல் இவ்வளவு காலம் அரசியலிலிருந்தேன். இனி என்ன என்பது நவம்பர் கூட்டம் தீர்மானிக்கும்" என்கிறார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+