நாட்டிலேயே தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்.. கொள்கைகள் தான் பெஸ்ட்! தங்க மகன் சரத் கமல் பளீச்
சென்னை: காமன்வெல்த் போட்டிகள் பதக்கங்கள் வென்று திரும்பிய டெபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கடந்த ஜூலை 28ஆம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டிகள் ஆகஸ்ட் 8ஆம் தேதி நிறைவடைந்தது.
இதில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர்கள், 22 தங்கம்,16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்று, பதக்கப் பட்டியலில் 4ஆவது இடத்தை பிடித்தது.

டேபிள் டென்னிஸ்
இதில் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழக வீரர் சரத்கமல் 3 தங்கம், 1 வெள்ளி பதக்கங்களை வென்றார். இன்று இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்பிய டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் சரத் கமலுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

பதக்கம்
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத் கமல், "இது தான் எனது மிகச் சிறந்த தொடர் என்றே கூறலாம். 2006இல் இரு தங்கம் வென்று இருந்த நிலையில், இந்த முறை மூன்று தங்கம், ஒரு வெள்ளி வென்று உள்ளேன். இதற்கு நான் எனது பயிற்சியாளர்களிடம் நன்றி சொல்ல விரும்புகிறேன். சென்னை விமான நிலையத்தில் இன்று எனக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். ரொம்பவே மகிழ்ச்சியாக உள்ளது. நல்ல சாதனைக்கு நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர். அடுத்து வரும் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்.

கொள்கைகள்
இங்கிலாந்தில் அவரது சொந்த வீரரை வீழ்த்தியது மகிழ்ச்சி தான். அங்கும் இந்தியர்கள் நமக்கு நல்ல ஆதரவை கொடுத்தனர். இந்தியாவிலேயே தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கொள்கைகள் தான் சிறப்பாக உள்ளது. மற்ற மாநிலங்கள் கூட நமது விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கொள்கைகளை அடிப்படையாக வைத்தே கொள்கைகளை வகுக்கின்றனர்.

விளையாட்டு வீரர்கள்
நமது மாநிலத்தில் நட்சத்திர வீரர்களுக்கு மட்டுமின்றி, வளரும் வீரர்களையும் கண்டறிந்து அவர்களுக்கு முழு ஆதரவு கொடுத்து வருகின்றனர். இதற்காக பல்வேறு திட்டங்களை வைத்துள்ளனர். மேலும், மாநில வேலைவாய்ப்பில் 2% விளையாட்டு வீரர்களுக்கு என தனியாக ஒதுக்கப்பட்டு உள்ளது. இப்படி விளையாட்டு வீரர்களுக்கு பல உதவி திட்டங்கள் உள்ளன.

முக்கியத்துவம்
இன்னும் கூட நிறைய விளையாட்டு மைதானங்களை கட்டி, உட்கட்டமைப்பை வலுவாக்கினால் இன்னும் கூட நாம் பல்வேறு பதக்கங்களை வெல்லலாம். படிப்பிற்கு நாம் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறோம். ஆனால் அதே அளவு விளையாட்டு துறைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.. இந்த வயதிலும் என்னால் சிறப்பாக விளையாட முடிய ஒரே காரணம் ஃபிட்னஸ் தான். நேற்று தான் விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர், கிரண் ரிஜிஜூவை சந்தித்தேன். அவர்கள் காமன் வெல்த் போட்டிகள் தொடர்பாக கேட்டறிந்தனர்" என்றார்.












Click it and Unblock the Notifications