‘திருப்பதி’க்கு போன சிவாஜி; பொங்கி எழுந்த திமுக? இன்று பழனி முருகன் மாநாடு நடத்துவது ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக அரசு முருகக் கடவுளுக்கு மாநாடு நடத்தி வருவது குறித்து சில விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அக்கட்சி நாத்திக கட்சியா? அதற்கும் ஆன்மிக அரசியலுக்கும் தொடர்பு இல்லையா?

'திராவிட மாடல்' திமுக முத்தமிழ் முருகன் மாநாட்டை நடத்தி வருகிறது குறித்துப் பல கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. உலக நாடுகளில் அதிகமாக வணங்கப்படும் தமிழ்க் கடவுள் முருகன்தான். இலங்கை, மலேசியா, மியான்மர், சிங்கப்பூர். ஆஸ்திரேலியா, மொரீசியஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து,தென்னாப்பிரிக்கா, கனடா, இந்தோனேசியா என பல நாடுகளில் விரவி கிடக்கும் தமிழர்கள் இத்தனை நாடுகளிலும் முருகனை வழிபடக் கோயில் கட்டி உள்ளனர். முருகனை நக்கீரர், குமரகுருபரர், அருணகிரிநாதர் என பலர் போற்றி பாடியுள்ளனர். வாரியார் வரை இந்தப் பக்தி பரவசம் தமிழ்நாட்டில் பரவலாக வளர்த்து எடுக்கப்பட்டுள்ளது. குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருப்பான் என்பது தமிழர் நம்பிக்கை. ஆகவேதான் இன்றும் நாளையுமாக மொத்தம் 2 நாட்கள் பழனியில் முருகன் மாநாடு நடத்தப்படுகிறது.

MK Stalin Dmk

பலரும் திமுகவை ஒரு நாத்திக இயக்கம் என்று நினைத்துக் குழப்பிக் கொள்கிறார்கள். அக்கட்சியின் அண்ணாதுரை நிறுவனர், 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற முழக்கத்தைத்தான் முன்வைத்தார். ஆனால், திமுகவுக்குள் சில நாத்திக தலைவர்கள் இருந்தனர். இன்னும் சொல்லப்போனால், திமுகவிலிருந்து வந்த சிவாஜி கணேசன் 1954இல் இயக்குநர் பீம்சிங்குடன் சேர்ந்து திருப்பதிக்குச் சென்று வந்தார் என்பதற்காகக் கட்சியினரால் மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். பெரியாரால் 'சிவாஜி' கணேசன் என்று அடைமொழி போட்டு அழைக்கப்பட்ட சிவாஜியை அன்றைய திமுகவினர் 'திருப்பதி' கணேசா என்று கிண்டல் செய்தனர். அவர் இறுதியில் நொந்துபோய் கட்சியிலிருந்து விலகிக் கொண்டார். திமுக அவரை கட்சியிலிருந்து வெளியேற்றியதாக நினைத்துக் கொண்டுள்ளனர். ஆனால், அவர் முறையாகக் கட்சியிலிருந்து விலக்கப்படவில்லை என்பதே உண்மை.

திமுக திரைப்படத்துறைக்குள் கால்வைத்த காலத்தில் கடவுள் மீதான விமர்சனத்தை முன்வைத்தது. அண்ணாதுரையின் 'வேலைக்காரி' தொடங்கி மு.கருணாநிதியின் 'பராசக்தி' வரை கடவுள் நம்பிக்கைக்கு எதிரான நாத்திக பிரச்சாரம் தீவிரமாக முன்வைக்கப்பட்டது. அண்ணாதுரையைவிட சினிமா ரீதியாகவும் கட்சி ரீதியாகவும் மு.கருணாநிதி நாத்திகக் கொள்கையை மிகத் தீவிரமாகக் கொண்டிருந்தார். அவர் மறைவதற்கு சில ஆண்டுகள் முன்னதாக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பாராட்டு விழாவில் கூட 'எமன் தன் உயிரைப் பறிக்க முடியாது' என்று நாத்திகம் பேசினார். விழுப்புரத்தில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் நெற்றியில் குங்குமம் வைத்ததைக்கூட அவர் விமர்சித்த விவகாரம் பெரிதானது. கூடுதலாகச் சேது கால்வாய் திட்டத்தின் போது 'எந்தக் கலேஜில் ராமர் இஞ்சினியரிங் படித்தார்' என்று கேலி பேசினார்.

நாத்திகம் பேசி வந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதிதான் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் முதலில் வேல் அரசியலைக் கையில் எடுத்தவர். எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த காலத்தில் 1982 ஆம் ஆண்டு திருச்செந்தூர் கோயில் வேலை காணவில்லை என ஒரு புகார் எழுந்தது. அதை யாரோ திருடிவிட்டார்கள் எனத் தகவல் பரவியது. அந்த வேலை மீட்பதற்காக நடைப்பயணம் சென்றவர் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி. வேல் பற்றி ஆராய ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அதுவும் ஆராய்ந்து அறிக்கை அளித்தது. ஆனால், அந்த அளிக்கையை எம்.ஜி,ஆர் அரசு வெளியிடவில்லை.

திமுகவுக்குப் பிறகு முருகக் கடவுளை அரசியல் ரீதியாகக் கையில் எடுத்தார் சீமான். காவடி எடுக்கும் ஒரு அரசியலை அவர் கையில் எடுத்தார். திமுக ஆட்சியில் கந்தசஷ்டி கவசம் சர்ச்சை எழுந்தது. அதை திமுக ஆதரவான சக்திகள் கையில் எடுத்ததாகச் சொல்லப்பட்டது. கறுப்பர் கூட்டம் என்ற பெயரில் கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகளில் உள்ள ஆபாச வார்த்தைகள் பற்றிய சர்ச்சைகள் எழுந்தன. இதைப் பயன்படுத்தி 2020 பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன், நவம்பர் மாதம் வேல் யாத்திரையைத் திருத்தணியிலிருந்து தொடங்கினார்.

குறிஞ்சி நிலத்தின் தெய்வமாக வணங்கப்படும் முருகன், அரசியலுக்காகப் பல வகைகளில் பயன்பட்ட ஆரம்பித்தார். அதன் தொடர்ச்சியாக இப்போது திமுக முருகன் மாநாட்டைக் கையில் எடுத்துள்ளது. இந்த முருகன் விவகாரத்தில் அதிமுகவும் தனக்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, தைப்பூச திருநாளுக்கு அரசு விடுமுறையை அறிவித்து முருக பக்தர்களின் மனங்களில் ஒரு குளிர்ச்சியை உண்டாக்கினார். கடந்த 2021 ஆம் ஆண்டு கோவையில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது அன்றைய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி, 'முருகன் வரம் அதிமுகவுக்குத்தான் கிடைக்கும். ஸ்டாலின் கையில் வேல் ஏந்துவது பகல் வேடம். அவருக்கு முருகன் வரம் தரமாட்டார்' என்று திமுகவைச் சாடி முருகனை தங்கள் கட்சியின் அடையாளமாக உரிமை கோரினார்.

MK Stalin Dmk

இப்போது திமுக அசுரப் பாய்ச்சல் கொண்டு பழனி மலையை தாண்ட முயற்சி மேற்கொண்டுள்ளது. அதன் அடையாளமாக முருகன் மாநாடு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், "ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை உள்ளது. அதில் உயர்வு தாழ்வு என்[அது இல்லை. அந்த நம்பிக்கைகளுக்குத் திராவிட மாடல் அரசு என்றைக்கும் தடையாக இருந்ததில்லை" என்று பேசி இருக்கிறார்.

திமுகவின் முருகக் கடவுள் மாநாடு பற்றி கருத்து கூறிய மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன், "இந்து சமய அறநிலையத்துறை என்பது கோயில் சொத்துகளைக் காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட சட்டரீதியான அமைப்பு. அதன் வேலையே மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதுதான். ஆகவே, அதை எந்தக் கட்சியுடனும் சேர்த்து வைத்துக் குழப்பிக் கொள்ளத் தேவையில்லை. ஒரு கட்சி தனிப்பட்ட வகையில் என்ன கொள்கையை வேண்டுமானாலும் கொண்டிருக்கலாம். ஆட்சி என்பது அந்தக் கட்சியின் கொள்கைக்கு மட்டுமானது இல்லை. அரசாங்க ரீதியான ஆட்சி. முருகக் கடவுளைத் தமிழ்க் கடவுள் என்றுதான் நாம் சொல்கிறோம். சங்க இலக்கியமான பத்துப்பாட்டில் முதலில் இடம்பெற்றுள்ளது 'திருமுருகாற்றுப்படை'தான். எனவே தமிழ்ப் பண்பாட்டு ரீதியாக முருகக் கடவுளுக்கு ஒரு மாநாட்டை ஒருங்கிணைக்கிறார்கள். அதன் மூலம் ஒரு தமிழ் வளர்ச்சியை மேற்கொள்கிறார்கள். அரசுக்காக மக்கள் இல்லை. மக்களுக்காகத்தான் அரசு" என்று விளக்கம் அளித்துள்ளார்.

திமுக நாத்திக கட்சியாக மு.கருணாநிதி தலையில் இயங்கிக் காலத்தில் தான் பார்க்கப்பட்டது. ஆனால், அதைத் தாண்டி அவர் ஓடாமல் நின்ற திருவாரூர் தேரை இயக்கினார். ராஜராஜனுக்கு விழா எடுத்தார். அனைத்து சாதியினரை அர்ச்சகராகச் சட்டம் போட்டார். கோயில் பூசாரிகளுக்கு மாநாடு நடத்தினார். ஸ்டாலின் தலைமையிலான இந்த திராவிட மாடல் அரசு காலகட்டத்தில்தான் ஆயிரக்கணக்கான கோயில்கள் கும்பாபிஷேகம் நடப்பட்டுள்ளது. கோயில் நிலங்கள் சுமார் 5513 ஏக்கர் மீட்கப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+