4 இடங்களில் கூடி “சதி” திட்டம் தீட்டிய அஞ்சலை.. பகீர் வாக்குமூலம்.. ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஷாக் தகவல்!
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலையிடம் போலீசார் நேற்று இரவு முதல் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வது தொடர்பாக அஞ்சலை 4 இடங்களில் சதி ஆலோசனை கூட்டங்கள் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜூலை 5 ஆம் தேதி சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங், புதிதாக கட்டப்பட்டு வரும் அவரது வீட்டுக்கு முன்பாகவே படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜய், சிவசக்தி ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

என்கவுண்டர்: சிறையில் அடைக்கப்பட்ட 11 பேரையும் காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், மாதவரம் ரெட்டேரில் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை கைப்பற்ற அழைத்துச் செல்லும்போது ரவுடி திருவேங்கடம் போலீசாரிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்றதால் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதையடுத்து நடந்த தொடர் விசாரணையில் இந்த வழக்கில் மேலும் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மலர்க்கொடி சேகர், ஹரிஹரன் மற்றும் சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சிக்கிய வழக்கறிஞர்கள்: சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞரும் அதிமுகவில் இருந்து தற்போது நீக்கப்பட்டவருமான பெண் தாதா மலர்க்கொடி சேகர், மற்றொரு வழக்கறிஞரும் தமாகா நிர்வாகியாக இருந்தவருமான ஹரிஹரன், திருநின்றவூரைச் சேர்ந்த அருளின் கூட்டாளியும் திமுக பிரமுகரின் மகனுமான சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதன் மூலம் கைது எண்ணிக்கை 14 ஆனது.
புளியந்தோப்பு அஞ்சலை: ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஆற்காடு சுரேஷின் தோழியும், பெண் தாதாவுமான புளியந்தோப்பு அஞ்சலை சம்பந்தப்பட்டிருப்பது போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் தெரியவந்தது. வடசென்னை மேற்கு மாவட்ட பாஜக மகளிர் அணி துணை செயலாளராக பொறுப்பு வகித்து வந்த அஞ்சலையை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் அவரும் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
பெண் தாதா அஞ்சலை: புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த அஞ்சலை, கஞ்சா வியாபாரம், கந்துவட்டி போன்ற பல தொழில்களை செய்து வந்துள்ளார். புளியந்தோப்பு அஞ்சலை, ஆற்காடு சுரேஷின் தோழி. ஆம்ஸ்ட்ராங் கொலையில், பொன்னை பாலு மற்றும் வழக்கறிஞர் அருள் உடன் சேர்ந்து அஞ்சலை முக்கிய பங்காற்றியுள்ளதாக கூறப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்ததில் பண பரிவர்த்தனை செய்ததில் முக்கிய நபராக இருந்துள்ளார் அஞ்சலை.
அஞ்சலை கைது: நேற்று இரவு ஓட்டேரி பகுதியில் பதுங்கி இருந்த அஞ்சலையை கைது செய்த தனிப்படை போலீசார், ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் விடிய விடிய விசாரணை நடத்திய நிலையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்காகவே தான் பண உதவி செய்ததாக அஞ்சலை வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
பணம் கொடுத்த அஞ்சலை: ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த கொலையாளிகளுக்கு பணம் கொடுத்ததுடன் அவர்களுக்கு தங்குமிடமும் ஏற்பாடு செய்ததாக அஞ்சலை பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து அஞ்சலை வங்கி கணக்குகளின் விவரங்களை எடுத்து போலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதன் மூலமாக அஞ்சலைக்கு பின் இருப்பவர்கள் யார் என்ற தகவல் தெரிய வரும் என கூறப்படுகிறது.
அஞ்சலை பரபரப்பு வாக்குமூலம்: மேலும், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வது தொடர்பாக பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை, 4 இடங்களில் பொன்னை பாலு உள்ளிட்டோருடன் சதி ஆலோசனை நடத்தியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளாராம். புழல், அரக்கோணம், திருநின்றவூர் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூரில் பொன்னை பாலு உள்ளிட்டோருடன் அஞ்சலை சதி ஆலோசனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், பல்வேறு அதிர்ச்சி தகவல்களை அஞ்சலை, போலீசாரிடம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சிலரின் பெயர்களையும் அஞ்சலை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி அஞ்சலையை இன்று இரவு 7 மணிக்கு நீதிபதி முன்பு ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications