கள்ளக்காதல், ஓரினச்சேர்க்கை தீர்ப்புகள் ரத்து ஆகுமா? உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் அதிரடி
சென்னை: டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு ஒரு மிக முக்கியமான வாதத்தை முன்வைத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, "கள்ளத்தொடர்பு என்பது குற்றமில்லை" என்றும், "தன்பாலின உறவு சட்டப்படி செல்லும்" என்றும் உச்ச நீதிமன்றம் இரண்டு அதிரடித் தீர்ப்புகளை வழங்கியது. இந்த இரண்டு முடிவுகளுமே இந்தியச் சமூகத்திற்குத் தவறான முன்னுதாரணங்கள் என்று மத்திய அரசு இப்போது பகிரங்கமாக சாடியுள்ளது.
இந்தத் தீர்ப்புகள் அனைத்தும் "அரசியலமைப்பு ஒழுக்கம்" என்ற பெயரில் வழங்கப்பட்டாலும், அவை இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் எதார்த்த வாழ்க்கைக்குப் பொருந்தாத "தவறான சட்டங்கள்" என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.

கள்ளத்தொடர்பு - தனிநபர் விருப்பம் அல்ல
குறிப்பாக, பழைய சட்டப் பிரிவுகளான 497 மற்றும் 377 ஆகியவற்றில் செய்யப்பட்ட மாற்றங்கள், திருமண வாழ்க்கையின் புனிதத்தையும், நமது குடும்பக் கட்டமைப்பையும் கேள்விக்குறியாக்கிவிட்டதாக அரசு கவலை தெரிவிக்கிறது.
மத்திய அரசின் இந்த வாதம் முழுக்க முழுக்க நமது குடும்ப முறையைப் பாதுகாப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. "கள்ளத்தொடர்பு" என்பது வெறும் தனிநபர் விருப்பம் கிடையாது, அதைத் தண்டனைக்குரிய குற்றமாகப் பார்க்காமல் விட்டால், அது சமூகச் சீரழிவிற்கு வழிவகுக்கும் என்று அரசு அஞ்சுகிறது.
தன்பாலின ஈர்ப்பு
அதேபோல, தன்பாலின ஈர்ப்பு தொடர்பான முடிவுகளும் இந்தியாவின் பாரம்பரிய குடும்பக் கொள்கைகளுக்கு நேர் எதிராக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கும்போது, மேலைநாட்டுக் கொள்கைகளை மட்டும் பார்க்காமல், இந்தியாவின் நீண்டகாலப் பண்பாட்டு விழுமியங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதே மத்திய அரசின் முக்கியக் கோரிக்கை. மக்களின் மனநிலைக்கும், நாட்டின் கலாச்சாரத்திற்கும் எதிரான சட்டங்கள் நீடிக்கக் கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. அதனால் சுப்ரீம் கோர்ட் தனது பழைய தீர்ப்புகளை மீண்டும் ஒருமுறை ஆழமாகப் பரிசீலனை செய்ய வேண்டும் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
சமூக ஒழுக்கம் - பெரும் விவாதம்
தற்போது இந்த விவகாரம் அரசியல் சாசன அமர்வின் முன் உள்ள நிலையில், சட்ட வல்லுநர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்திய அரசின் இந்த அதிரடித் திருப்பத்தை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
தனிமனித உரிமைக்கும் சமூக ஒழுக்கத்திற்கும் இடையே ஒரு சமநிலையை உருவாக்க வேண்டிய கட்டாயம் இப்போது நீதித்துறைக்கு ஏற்பட்டுள்ளது. அரசின் இந்த வாதம் ஏற்கப்பட்டால், அது ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல சட்டங்களில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரக்கூடும் என்றே தெரிகிறது.
எனினும், இந்த விவகாரம் இப்போது இந்தியா முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஒரு பக்கம் தனிமனித சுதந்திரம் பேசப்பட்டாலும், மறுபக்கம் சமூகப் பாதுகாப்பு மற்றும் குடும்ப மாண்புகளை அரசு வலியுறுத்துகிறது. வரும் நாட்களில் உச்ச நீதிமன்றம் எடுக்கப்போகும் முடிவுகள், இந்தியாவின் எதிர்காலச் சமுதாயம் எப்படி இருக்கப்போகிறது என்பதைத் தீர்மானிக்கும் ஒரு முக்கியத் திருப்பமாக அமையும்...!!












Click it and Unblock the Notifications