தவெக ‘மெஜாரிட்டி’யை நிரூபிக்க இன்னும் 11 சீட் தேவை.. விஜய் கண் முன் இருக்கும் சான்ஸ் என்னென்ன?
சென்னை: தவெக 108 சீட்களை கைப்பற்றியுள்ள நிலையில், அதில் ஒரு தொகுதி எம்.எல்.ஏ பதவியை விஜய் ராஜினாமா செய்வார். அதன்பிறகு, மெஜாரிட்டியை நிரூபிக்க கூடுதலாக 11 இடங்கள் தேவை. அந்த சீட்களின் ஆதரவை எந்தக் கட்சியிடமிருந்து பெறுவார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆட்சி அமைக்கத் தேவையான 118 என்ற மேஜிக் எண்ணைத் தொடுவதில் இன்னும் சவால்கள் நீடிக்கின்றன.

தற்போது நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தலில் தவெக அதிக இடங்களில் வென்றுள்ள கட்சி என்ற முறையில், அந்தக் கட்சிக்கே ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார். ஆனால் தவெக எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்கவில்லை என்ற நிலையில், திமுக அல்லது அதிமுக கூட்டணிகளை சேர்ந்த கட்சிகள் ஆதரவு அளிக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் 234 தொகுதிகள் உள்ள நிலையில், தனிப்பெரும்பான்மைக்கு 118 இடங்களில் வெற்றி பெறவேண்டும். தவெக 108 இடங்களில் வென்றுள்ளது. இதில் விஜய் வென்ற ஒரு தொகுதியில் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும். இதையடுத்து 107 சீட்கள் தவெக கைவசம் இருக்கும்.
கூடுதலாக 11 எம்.எல்.ஏக்கள் தேவை.
காங்கிரஸ் 5
விசிக 2
சிபிஐஎம் 2
சிபிஐ 2
இந்த 4 கட்சிகள் ஆதரவளித்தால் floor testல் வெற்றி பெற முடியும்.
அல்லது,
காங்கிரஸ் 5
பாமக 4
சிபிஐஎம் 2
சிபிஐ 2
இந்த 4 கட்சிகள் ஆதரவளித்தால் விஜய் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும்.
விசிக , பாமக ஒரே அணிக்கு செல்வது குதிரைக்கொம்பு. அதேசமயம், வேறு எந்த மாற்றுக்கட்சியும் சீட்டோடு இல்லை. மதிமுக வைகோ நின்றது தனி சின்னத்தில் அல்ல. எனவே அவரால் தவெகவுக்கு ஆதரவு கொடுக்க இயலாது.
இந்த நிலையில் ஒரு கட்சி தவெகவுக்கு அளிக்கும் ஆதரவில் இருந்து பின்வாங்கினாலும் ஆட்சி கவிழும். ஆக இனி போதிய பெரும்பான்மையை விஜய் காட்ட அடுத்த கட்ட வேலைகளில் வரும் நாட்களில் ஈடுபடுவார்.
இதில் தேமுதிக பிரேமலதாவிடம் 1 சீட் உள்ளது. அவர் அமைச்சர் பதவி இல்லாமல் ஆதரவு தரமாட்டார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தவெகவுக்கு ஆதரவு அளிக்கக்கூடும். அதிமுக அல்லது திமுக வெளியில் இருந்து ஆதரவளிக்க நிச்சயம் ஒப்புக்கொள்ளாது.
எனவே, வரும் நாட்களில், திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவெகவுக்கு நிபந்தனையின்றி ஆதரவு அளிக்க இந்தக் கட்சிகள் முன்வருமா? அமைச்சரவையில் இடம் கேட்பார்களா? என்பதெல்லாம் தமிழக அரசியல் களத்தை இன்னும் பரபரப்பாக்கும் என்றால் மிகையில்லை.












Click it and Unblock the Notifications