கையில் வாக்கி டாக்கி .. சென்னையில் ஓசியில் ஸ்வீட் வாங்கிய எஸ்ஐ மகன்.. ஒரே அசிங்கமா போச்சு குமாரு
சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் கையில் போலி வாக்கி டாக்கியுடன் வந்த ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் மகன், போலீஸ் போல் நடித்து இனிப்பு கடையில் ஓசியில் தின்பண்டங்களை பார்சல் வாங்கி சென்ற புகாரில் கைது செய்யப்பட்டார்.
சென்னை வளசரவாக்கம் பகுதியில் பிரபலமான ஸ்வீட் ஸ்டால் இயங்கி வருகிறது. இங்கு சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அருண்குமார் என்பவர் வேலைபார்த்து வருகிறார். கடந்த செவ்வாய்கிழமை அன்று கையில் 'வாக்கி-டாக்கி'யுடன் ஒருவர் இனிப்பு கடைக்கு வந்திருக்கிறார். வந்தவர் சிப்ஸ் உள்ளிட்ட தின்பண்டங்களை பார்சல் வாங்கி உள்ளார்.

ஆனால் அவர் பணம் கொடுக்காமல் அங்கிருந்து செல்ல முயன்றுள்ளார். அப்போது அருண்குமார் அவரிடம், வாங்கிய பார்சலுக்கு பணம் தரும்படி கேட்டார். அதற்கு அவர் "நான் இந்த ஏரியா போலீஸ். என்னிடமே பணம் கேட்கிறாயா?" என மிரட்டும் தோணியில் பேசிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அருண்குமார், இதுபற்றி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன் அடிப்படையில் சென்னை வளரசவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து , உடனடியாக நேரில் வந்து கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்திருக்கிறார்கள். அப்போது நடுத்தர வயதுடைய ஒருவர் ஓசியில் ஸ்வீட் வாங்கிக் கொண்டு போனது தெரிந்தது. அவரை பற்றி போலீசார் விசாரித்த போது, போரூர் அடுத்த காரம்பாக்கத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 45) என்பதும் தனியார் கட்டுமான நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்து வருபவர் ஆவார். இவரது தந்தை ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஆவார்.
ரமேசை கைது செய்த வளசரவாக்கம் போலீசார், அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள், ஒரு போலி 'வாக்கி-டாக்கி', ரூ.35 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். ரமேஷ் இதேபோல் பல்வேறு இடங்களில் போலீஸ் என கூறி பணம் எதுவும் கொடுக்காமல் ஓசியில் பொருட்களை வாங்கி சென்றதும் தெரிய வந்திருப்பதால் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். அரை கிலோ ஸ்வீட் ஓசியில் வாங்க ஆசைப்பட்டு ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் மகன் வளசரவாக்கத்தில் கைதாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications