சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார் ஆளுநர் ஆர்என் ரவி
டெல்லி: சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவை ஜனாதிபதிக்கு ஆளுநர் ஆர் என் ரவி அனுப்பி வைத்துள்ளார். சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரலில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அப்போது மசோதாவில் 4 மாற்றங்களை ஆளுநர் கோரிய நிலையில், கடந்த அக்டோபரில் மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, இந்த மசோதாவை ஜனாதிபதிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தற்போது அனுப்பி வைத்துள்ளார். மசோதா முதல் முறையாக நிறைவேற்றப்பட்டு 3 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது ஜனாதிபதிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பி வைத்துள்ளார்.

தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று 2022 ஆம் ஆண்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதன்படி, மாதவரத்தில் 22 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இது தொடர்பான ஒப்புதல் பெறும் வகையில், தமிழக சட்டசபையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா தாக்கல் செய்யப்பட்டது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இந்த மசோதாவை கிடப்பில் போட்டு வைத்திருந்த ஆளுநர் ஆர்.என். ரவி, கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த மசோதாவை திருப்பி அனுப்பினார்.
மேலும், இந்த மசோதாவில் 4 மாற்றங்களை செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மசோதா தொடர்பாக ஆளுநர் தெரிவித்த கருத்துக்கள் நீக்கப்பட்டு மீண்டும் மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார்.
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், ஒரு சட்டமுன்வடிவு சட்டமன்றத்தில் விவாதிக்கப்படும் போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கே மட்டுமே அதில் திருத்தங்களை முன்மொழியவோ, விளக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் திருத்தங்களை திரும்பப் பெறவோ, இல்லையெனில் வாக்கெடுப்பு கோருவதற்கோ அதிகாரம் இருக்கிறது. சட்டமுன்வடிவு சட்டசபையால் நிறைவேற்றப்படும் முன்பு அதுகுறித்து கருத்து தெரிவிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்படவில்லை.
ஆளுநர் அனுப்பியுள்ள செய்தியில் இருக்கக்கூடிய அவரது கருத்துக்கள் மற்றும் மாண்பை குறைக்கக்கூடிய வார்த்தைகள் அடங்கிய பகுதிகளை இந்த பேரவை நிராகரிக்கிறது என்று தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்த தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, இந்த மசோதா உடனடியாக ஆளுநர் ஒப்புதலுக்கு தமிழக ஆளுநருக்கு அரசு அனுப்பி வைத்தது. இந்த நிலையில் தான், மசோதாவிற்கு அனுமதி அளிக்காமல் ஜனாதிபதிக்கு ஆளுநர் ஆர் என் ரவி அனுப்பி வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications