பரவும் டெங்குவை பார்த்து பயம் வேண்டாம்.. சித்தாவில் வழியிருக்கு.. இந்த இலைகளை சாப்பிடுங்க!
சென்னை: டெங்கு காய்ச்சலால் ஏற்படும் மிக மோசமான பாதிப்புகளை கூட முறையான சித்த மருத்துவத்தின் மூலம் சுலபமாக சரி செய்துவிடலாம் என நம்பிக்கை அளிக்கின்றனர் சித்த மருத்துவர்கள்.
டெங்கு காய்ச்சல் போன்ற நோய்களுக்கு ஓர் உயிரைக் கூட பலி கொடுக்கக் கூடாது என்று கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகவே உறுதி எடுத்து வரும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் உயிரிழப்புகள் தொடர்ந்து கொண்டுத் தான் இருக்கிறது. நோயின் தாக்கத்தை பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் தாமதமாக அறிந்து கொள்வதால் தான் உயிரிழப்பு நேரிடுகிறது.

பொதுமக்கள் தங்கள் பகுதியில் தண்ணீர் தேங்கும் வகையில் உள்ள அனைத்துப் பொருட்களையும் அகற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒத்துழைக்க வேண்டும். ஆனால் பல இடங்களில் உள்ளாட்சி அமைப்பு அலுவலர்கள் ஆய்வும் நடத்துவதில்லை, கொசு உற்பத்தியாக கூடிய அடைசலான பொருட்களை மக்களும் அப்புறப்படுத்துவதில்லை.
இதன் விளைவாக டெங்கு பரவல் வேகமாக வருகிறது. இதனிடையே டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ முறையில் பிரதானமாக பரிந்துரைக்கப்படுவது கபசுரக் குடிநீர், நிலவேம்பு கஷாயம், பப்பாளி இலைச்சாறு ஆகிய மூன்றும் தான். மனிதனின் ரத்த தட்ட அணுக்கள் பல்லாயிரக்கணக்கில் குறைந்தாலும் கூட அதனை சித்த மருத்துவத்தின் மூலம் சரி செய்து விட முடியுமாம்.
கபசுரக் குடிநீர், நிலவேம்பு கஷாயம், பப்பாளி இலைச்சாறு என எதுவாயினும் 5 முதல் பத்து பதினைந்து மில்லி வரை தான் குடிக்க வேண்டுமாம். இதனிடையே டெங்கு பாதிப்பால் ரத்த தட்டணுக்கள் குறைந்து ரத்தக் கசிவு ஏற்படும் அளவுக்கு நிலைமை மோசமானால் சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி 'இம்பூரல்' மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல் இங்கு குறிப்பிட்டு கவனிக்க வேண்டிய தகவல் என்னவென்றால், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் மருத்துவர்களின் ஆலோசனையின்றி சித்த மருந்துகளை கொடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். வீட்டு வைத்தியம் என்ற பெயரில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோர் தாங்களாகவே சித்த மருந்துகளை வாங்கிக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் அவர்களுக்கு பாலில் சுக்கு, அதிமதுரம், மஞ்சள் உள்ளிட்டவைகளை கலந்துகொடுக்கலாம். அதே போல் இஞ்சித் தேன், தூதுவளை சூப், ஆடாதொடை சாறு உள்ளிட்டவற்றை அளவான முறையில் கொடுக்கலாம்.












Click it and Unblock the Notifications