ஜஸ்ட் மிஸ்! சென்னை தப்பியது! 'மதராஸ் மனதே' என அன்று முழக்கமிட்ட தெலுங்கர்கள்! தலைநகர் காத்த ம.பொ.சி
சென்னை: தமிழகமே கொண்டாடும் தலைநகர் சென்னையை ஆந்திரர்கள் 'மதராஸ் மனதே' என்ற முழக்கத்துடன் அன்று உரிமை கோரிய நிலையில், எல்லை காக்கும் போராட்டங்களால் அந்த முயற்சியை முறியடித்தவர் ம.பொ.சிவஞானம்.
அன்று ம.பொ.சி. மட்டும் இந்த விவகாரத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை முன்னெடுக்காமல் இருந்திருந்தால், சென்னை இந்நேரம் ஆந்திர மாநிலத்தில் இருந்திருக்கும்.
நினைத்துப் பார்க்க கூட முடியாத ஒரு பெரும் வரலாற்று பிழை நிகழவிருந்ததை தனது சூட்சுமங்களால் தவிடுபொடியாக்கினார் ம.பொ.சி.
இதனிடையே நாளை அவரது 117-ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் அவர் யார் அவரது பின்னணி என்ன என்பதை இன்றைய தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டியது காலத்தின் அவசியமாகும்.

மதராஸ் மனதே
சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திராவைப் பிரித்து, தனி ஆந்திர மாநிலம் அமைத்திடும் மத்திய அரசு முடிவுக்கு 'மதராஸ் மனதே' என்று ஆந்திரர்கள் எழுப்பிய குரலுக்கு ம.பொ.சி. அவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, "தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" என்று வீரமுழக்கமிட்டார். ம.பொ.சி.நடத்திய தீவிர எல்லைப் போராட்டத்தின் காரணமாக திருத்தணி ஆந்திரர்களின் ஆளுமைக்குச் சென்று விடாமல் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது.

தமிழ்நாடு
'சிலம்புச் செல்வர்' ம.பொ.சி. சட்டமன்ற மேலவை உறுப்பினராக, சட்டமன்ற மேலவைத் தலைவராக திறம்பட பணியாற்றியதோடு, "மெட்ராஸ் ஸ்டேட்" என அழைக்கப்பட்டு வந்த சென்னை மாகாணத்திற்கு "தமிழ்நாடு" என்று பெயர் சூட்ட வேண்டும் என்று முதன் முதலில் குரல் எழுப்பியவர் இவரே ஆவார். அதனைத் தொடர்ந்து அன்றைய முதலமைச்சர் அண்ணா 1968ஆம் ஆண்டு இதற்கான தீர்மானத்தை சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றினார். அன்று முதல் சென்னை மாகாணம் "தமிழ்நாடு'' என்று அனைவராலும் அழைக்கப்பட்டது.

சிலம்புச் செல்வர்
'சிலம்புச் செல்வர்' என்றழைக்கப்பட்ட ம.பொ.சிவஞானத்திற்கு சிலப்பதிகாரம் மேல் அப்படி என்ன காதலோ தெரியாது, பல சிலப்பதிகார மாநாடுகளையே நடத்தியிருக்கிறார். ஆங்கிலம் மற்றும் தெலுங்கு மொழிகளை நன்கு கற்றறிந்தவராக திகழ்ந்த போதும் தமிழுக்காக தன் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்போடு பங்காற்றியவர். நாகர்கோவிலில் நடந்த எழுத்தாளர் மாநாட்டில் தான் 'சிலம்புச் செல்வர்' என்ற பட்டத்தை ம.பொ.சிக்கு வழங்கப்பட்டது.

2 முறை சிறை
1927ஆம் ஆண்டு சாதாரணத் தொண்டராக காங்கிரசில் சேர்ந்து, இந்திய சுதந்திர விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று ஆங்கிலேயருக்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் ஆறு முறை சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், தமிழக வடக்கு எல்லைப் போராட்டத்தில் பங்கேற்ற காரணத்தினால் இரண்டு முறை சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications