30 ஆண்டு கால கனவுங்க.. சிங்கபெருமாள் கோவில் - தாம்பரம் ரூட் கிளியர்.. ரயில்வே மேம்பாலம் நாளை திறப்பு
சென்னை: சிங்கபெருமாள் கோவில் ரயில்வே மேம்பாலப் பணிகள் தற்போது 80 சதவீதம் அளவுக்கு முடிந்துள்ள நிலையில், தாம்பரம் மார்க்க பாதை நாளை திறக்கப்பட உள்ளது. இந்த பாதை திறக்கப்பட்டால் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என்பதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் இருந்து சுமார் 50 கிமீ தொலைவில் உள்ள நகரம் சிங்க பெருமாள் கோவில். சென்னையின் நுழைவு வாயில் என்று சொல்லும் அளவுக்கு சிங்கபெருமாள் கோவில் அசுர வளர்ச்சியை பெற்றுள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து வரும் பல ஆயிரக்க்கணக்கான வாகனங்கள், சென்னைக்குள் நுழையவும் வெளியேறவும் வாகனங்கள் சிங்க பெருமாள் கோவில் வழியாகவே செல்கின்றன. இதனால், எப்போதும் பரப்பாகவே சிங்கபெருமாள் கோவில் காணப்படும்.

ரயில்வே மேம்பாலம்
சிங்க பெருமாள் கோவிலை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள், தாம்பரம், செங்கல்பட்டு பகுதி மக்கள் என பலரும் சிங்கபெருமாள் கோவில் பகுதிகளுக்கு தினமும் பல்வேறு காரணங்களுக்காக வந்து செல்கிறார்கள். இதனால், சிங்கபெருமாள் கோவில் பகுதியில் எப்போதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. குறிப்பாக சிங்கபெருமாள் கோவில், ஸ்ரீபெரும்புதுார் சாலையிலுள்ள ரயில்வே கேட் வழியாக, தினமும் பல ஆயிரம் வாகனங்கள் செல்கின்றன.
முழுவீச்சில் நடந்த பணிகள்
ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் பகுதியில் கார் உற்பத்தி, செல்போன் உற்பத்தி தொழிற்சாலைகள் என பல தொழிற்சாலைகள் உள்ளன. இதனால், இந்த தொழிற்சாலைகளுக்கு செல்லும் வாகனங்கள் அதிக அளவில் இந்த ரயில்வே கேட் சாலை வழியாகவே செல்கின்றன. இதனால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுவதால் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக கடந்த 2008 ஆம் ஆண்டு அப்போதைய திமுக அரசால் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கின.
எனினும், அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் 2021-ல் ஏற்பட்ட நிலையில் மீண்டும் புதிதாக டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கின. 138.27 கோடி மதிப்பில் இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்து 2021 நவம்பர் பூமி பூஜை நடைபெற்றது. அதன்பிறகு முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வந்தன. 30 மாதங்களுக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டது.
நாளை திறக்கப்படுகிறது
எனினும் குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகள் முடிவடைவதில் தாமதம் ஏற்பட்டது. இருந்த போதிலும் தற்போது தாம்பரம் மார்க்கத்தில் மேம்பால பணிகள் முடிந்துள்ளன. இதனால், தாம்பரம் மார்க்க மேம்பாலத்தை முதல் கட்டமாக திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இந்த மேம்பாலத்தை நாளை அமைச்சர் ஏவ வேலு, தாமோ அன்பரசன் ஆகியோர் திறந்துவைக்க உள்ளனர்.
வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
தாம்பரம் மார்க்கத்தில் ரயில்வே மேம்பாலம் திறக்கப்பட்டால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் 50 சதவீதத்திற்கும் மேல் குறையும் என வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 30 ஆண்டுகால கனவு தற்போது நிறைவேறியுள்ளதாகவும் இனி சிங்கபெருமாள் கோவில் தாம்பரம் மார்க்கத்தில் நெரிசல் கணிசமாக குறையும் என்பதால் பயண நேரம் வெகுவாக குறையும் என்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications