சிங்கப்பூராக மாறும் சென்னை! பக்கிங்காம் கால்வாயில் பாய போகும் வாட்டர் மெட்ரோ.. இதோ டெண்டர் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாட்டர் மெட்ரோ சென்னைக்கு வரப்போகிறது.. டிட்டோ சிங்கப்பூர் போலவே நம்ம தமிழகத் தலைநகர் சென்னையும் மாற போகிறது. ஆமாம், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், நகரின் உள்கட்டமைப்பை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் நோக்கிலும் ஒரு அதிரடி திட்டத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கையில் எடுத்துள்ளது. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

சென்னை என்றாலே டிராபிக் பிரச்சனைதான் முதலில் வந்து நிற்கிறது.. நாளுக்கு நாள் பெருகி வரும் வாகனப் போக்குவரத்தும் அதனால் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலும் பொதுமக்களைப் பெரும் அவதிக்குள்ளாக்கி வருகின்றன.

Buckingham Canal

டிட்டோ சிங்கப்பூர் போல சென்னையிலும்

இந்த நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்தான், புதிய முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது. அந்தவகையில், ஆசியாவின் முன்னணி நவீன நகரமான சிங்கப்பூரில் இருப்பதை போலவே. சென்னையின் மையப் பகுதியில் பாய்ந்தோடும் வரலாற்றுச் சிறப்புமிக்க பக்கிங்காம் கால்வாயை பயன்படுத்தி "வாட்டர் மெட்ரோ':" எனப்படும் அதிநவீன நீர்வழிப் போக்குவரத்து சேவையை தொடங்குவதற்கான முதற்கட்டப் பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளன.

இதன் ஒரு பகுதியாக, இந்த திட்டத்தின் சாத்தியக்கூறு ஆய்வறிக்கை மற்றும் விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கான அதிகாரப்பூர்வ டெண்டர் அறிவிப்பை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ளது.. இந்த செய்திதான், தலைநகர் மக்களிடையே பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

வாட்டர் மெட்ரோ திட்டம்

சென்னை பெருநகர பகுதியின் அடுத்த 25 ஆண்டுகளுக்கான மிகப்பெரிய எதிர்காலப் போக்குவரத்துத் தேவைகளையும், உள்கட்டமைப்பு வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையம் பல்வேறு ஒருங்கிணைந்த திட்டங்களை வகுத்துள்ளது. இதில் ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா? பயன்பாடு இல்லாமல் இருக்கும் நகர்ப்புற நீர்வழித்தடங்களை புதுப்பித்து அதில் நவீன பயணிகள் படகுப் போக்குவரத்தை ஏற்படுத்துவது சேர்க்கப்பட்டுள்ளதாம்.

கேரள மாநிலம் கொச்சியில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் வாட்டர் மெட்ரோ திட்டத்தின் மாதிரியைப் பின்பற்றி, சென்னையிலும் அதே போல பக்கிங்காம் கால்வாயை தூர்வாரி, தேவையான இடங்களில் நீர்வழித்தடத்தை சீரமைத்து, சொகுசுப் படகு சேவையை தொடங்குவது இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

நேப்பியர் பாலம் - நீர்வழிப்பாதை

வடசென்னையின் முக்கிய பகுதியான எண்ணூர் பகுதியில் தொடங்கி, நகரின் மையப்பகுதியான சென்னை நேப்பியர் பாலம், தகவல் தொழில்நுட்ப மண்டலமான சோழிங்கநல்லூர் வழியாக தென் பகுதியில் உள்ள வரலாற்று சுற்றுலாத் தலமான மாமல்லபுரம் வரை சுமார் 53 கிலோமீட்டர் தொலைவுக்கு இந்த நீர்வழிப் பாதையை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஒருவேளை இந்த திட்டம் மட்டும் செயல்பாட்டுக்கு வந்துவிட்டால், தினமும லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் சாலைப் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறைவதுடன், பயண நேரமும் வெகுவாக மிச்சமாகும்... முக்கியமாக ஐடி கம்பெனிகள் நிறைந்த ராஜீவ் காந்தி சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலைகளில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு இது மிகச்சிறந்த மாற்றாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் டெண்டர்

இப்போது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள டெண்டர் அறிவிப்பின்படி, தகுதியுள்ள உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்கள் வரும் செப்டம்பர் 18-ம் தேதிக்குள் தங்களது ஒப்பந்தப் புள்ளிகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில், பக்கிங்காம் கால்வாயின் இப்போதுள்ள ஆழம், நீர்வழித்தடத்தின் நிலை, தேவைப்படும் நவீன படகு நிலையங்கள், இயக்கப்பட வேண்டிய மின்சார அல்லது நவீன படகுகளின் எண்ணிக்கை, பயணிகள் பயன்பாட்டு அளவு உள்ளிட்ட அனைத்து டெக்னிக்கல் காரணிகளும் அக்குவேறாக ஆய்வு செய்யப்பட உள்ளன.

நீர்சார் சுற்றுலா மேம்பாடு

அதுமட்டுமல்ல, வெறும் படகுப் போக்குவரத்தோடு நின்றுவிடாமல், பக்கிங்காம் கால்வாயில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மற்றும் கால்வாயின் 2 பக்கமும் நீர்சார் சுற்றுலா மேம்பாட்டு திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளும் இதில் ஆராயப்பட இருக்கின்றன.

இந்த ஆய்வறிக்கை தயார் செய்யப்பட்டு அரசின் முழுமையான ஒப்புதல் பெறப்பட்டதுமே, இத்திட்டம் அடுத்த கட்ட கட்டுமான மற்றும் செயலாக்க நிலைக்குக் கொண்டு செல்லப்படுமாம்.

மொத்தத்தில் இந்த திட்டம் முழுமையாக நிறைவேறினால், இந்தியாவிலேயே நீர்வழி போக்குவரத்தை சிறப்பாக ஒருங்கிணைத்த உலகத்தர நகரங்களின் லிஸ்ட்டில் நம்ம சென்னையும் மிக கம்பீரமாக இடம்பெறும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+