டோட்டல் கன்பியூசன்! 2 தேர்வு.. ஒரே ரேங்க் லிஸ்ட்-இது அநீதி! சர்வேயர் தேர்வு எழுதியவர்கள் கொந்தளிப்பு
டிஎன்பிஎஸ்சியின் நில அளவர், வரைவாளர் பணிகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட்ட தேர்வுகளுக்கு ஒரே தரவரிசை பட்டியலை வெளியிட்டதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை: டிஎன்பிஎஸ்சி நடத்திய நில அளவர், வரைவாளர், சமூக அலுவலர் பணிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகி மதிப்பெண் தரவரிசை பட்டியல் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்ட நிலையில், தனித்தனியாக நடத்தப்பட்ட தேர்வுகளுக்கு ஒரே மதிப்பெண் பட்டியலை வெளியிட்டதால் அதை எழுதியவர்கள் அதிர்ச்சியடைந்து இருக்கின்றனர்.
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி சார்பில் நில அளவையர் (Field Surveyor), வரைவாளர் (Draftsman), உதவி வரைவாளர் (Surveyor Cum Draughtsman) என மொத்தம் 1,338 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு அறிவிக்கப்பட்டது.

வயது வரம்பு
நில அளவையர் மற்றும் வரைவாளர், உதவி வரைவாளர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 32 வயதுக்குள் இருக்க வேண்டும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. எஸ்சி, எஸ்சி(ஏ), எஸ்டி, எம்பிசி/டிசி, பிசி(ஓபிசிஎம்) மற்றும் பிசிஎம், கணவரை இழந்த பெண்கள் உள்ளிட்டவர்களுக்கு வயது வரம்பு கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

படிப்பு
நில அளவையர் மற்றும் வரைவாளர் பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் டிப்ளமோ சிவில் என்ஜினீயரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது சம்மந்தப்பட்ட தொழில் துறைகளில் (Surveyor, Draftsman) தேசிய தொழிற் பயிற்சி கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் பெற்றவர்களாக இருப்பது அவசியம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்தது.

29,882 பேர் எழுதிய தேர்வு
உதவி வரைவாளர் பணிக்கு விண்ணப்பிப்போர் மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் திருத்தப்பட்ட பாடத்திட்டத்தின் கீழ் டிராப்மேன் ஷிப்(சிவில்) முடித்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதி 29,882 பேர் இந்த தேர்வை எழுதி இருக்கின்றனர்.

தேர்வு முடிவுகள்
தேர்வுக்கான விடைத்தால் மதிப்பீடு செய்யப்பட்டு கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி தேர்வு முடிவுகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. அதில் தேர்வு மதிப்பெண்கள், மதிப்பெண் தரவரிசை ஆகியவற்றை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு இருக்கிறது. இதனை பார்த்த மாணவர்கள் தேர்ச்சியடைந்தும், அதில் இருந்த குழப்பங்களின் முழுமையாக மகிழ்ச்சியடைய முடியவில்லை என வேதனை தெரிவித்து உள்ளனர்.

ஒரே தரவரிசைப் பட்டியல்
நில அளவையர், வரைவாளர் பணிகளுக்கு தனித்தனி வினா தாள்கள் வழங்கப்பட்ட நிலையில் ஒரே தரவரிசை பட்டியலில் வெளியிட்டு இருப்பதாக தேர்வு எழுதியவர்கள் குற்றம்சாட்டி இருக்கிறார்கள். இதுகுறித்து நம்மிடம் தேர்வு எழுதிய நபர் தெரிவிக்கையில், "விண்ணப்பிக்கும்போது ஏதேனும் ஒரு வேலைக்கு மட்டுமே விண்ணப்பம் செய்ய முடியும் என்று இருந்தது.

தனித்தனியாக நடந்த தேர்வு
தேர்வின் போது சர்வேயர் பணிக்கு தனி வகை வினா தாளும், டிராஃப்ட்ஸ்மேன் பணிக்கு தனி வினாத்தாளும் வழங்கப்பட்டன. பாடத்திட்டமும் இரு தேர்விற்கும் வேறு வேறு. தேர்வின் முடிவில் சர்வேயர் வினாத்தாள் கடினமாகவும், டிராஃப்ட்ஸ்மேன் வினாத்தாள் மிகவும் எளிய முறையிலும் கேட்கபட்டு உள்ளன.

தேர்வு எழுதியவர்களுக்கு அநீதி
அதனால் சர்வேயர் தேர்வு எழுதியவர்கள் குறைந்த மதிப்பெண்களையும், டிராஃப்ட்ஸ்மேன் தேர்வை எழுதியவர்கள் அதிக மதிப்பெண்களையும் பெற்று உள்ளனர். தற்போது விண்ணப்பிக்கும்போது தேர்ந்தெடுக்காத சர்வேயர் வேலைக்கும் செல்லும் வகையில் ஒருங்கிணைந்த தரவரிசை பட்டியல் வெளியிட்டு அநீதி இழைத்து உள்ளனர். இதனால் சர்வேயர் வேலைக்கென விண்ணப்பித்து படித்தவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளோம்." என்றார்.

கடினமான சர்வேயர் தேர்வு
தேர்வு எழுதிய மற்றொரு நபரிடமும் இதே கருத்துதான் வெளிப்பட்டது. அதில், "நாங்கள் தனித்தனி பாடத்திட்டங்களில் தேர்வை எழுதினோம். சர்வேயர் தேர்வுக்கான பாடத்திட்டம் என்பது டிராப்ட்ஸ்மேன் பாடத்திட்டத்தை விட பெரியது. டிராப்ட்ஸ்மேன் தேர்வு வினாத்தாளும் சர்வேயர் தேர்வு வினாத் தாளை விட எளிதாக இருந்தது.

மாணவர்கள் வேதனை
இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட தேர்வு முடிவில் 2 தேர்வுகளை எளிதியவர்களுக்கும் தனித்தனி தரவரிசை பட்டியலை வெளியிடாமல் ஒரே தரவரிசையை வெளியிட்டு உள்ளார்கள். இதனால் தேர்வு எழுதிய பலர் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்." என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற குரூப் 2 வினாத்தாளில் குளறுபடி ஏற்பட்ட நிலையில் இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications