அண்ணியின் கற்பை டெஸ்ட் செய்த நாத்தனார்.. அதுக்கு இப்படியா? இவரும் ஒரு பெண்ணா? இந்த நாடு எங்கே போகுது
சென்னை: இந்தியாவில் நாளுக்கு நாள் மூடநம்பிக்கைகள் பெருகி கொண்டிருக்கின்றன.. உலகளவில் மூட நம்பிக்கைகள் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும், இதற்கு பலியாகுவோர் எண்ணிக்கைகள் இந்தியாவிலும் அதிகரித்து வருவது கவலையை உருவாக்கி வருகிறது. ஏற்கனவே நரபலி போன்ற பயங்கரங்களை தடுக்க முடியாமல் திணறி கொண்டிருக்கும்போது, இதுபோன்ற மூட நம்பிக்கைகளில் ஈடுபடுவது அதைவிட வேதனையை நமக்கு தந்து கொண்டிருக்கிறது.. இதோ குஜராத்தில் ஒரு பெண்ணுக்கு நடந்த கொடுமையை கேட்டு, பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
வட மாநிலங்களில் பெரும்பாலானோர் மூடநம்பிக்கைகளில் இன்னமும் மூழ்கி போயுள்ளனர்.. பாட்டி, மகள், தங்கை, சிறுமி என பாகுபாடு இல்லாமல் சீரழிக்கப்படும் நிலையில், மூடநம்பிக்கைகளின் கொடுமைகளும் தலைதூக்கி வருகின்றன..

காவல்துறை, நீதிமன்றம் இருந்தாலும்கூட, ஊர்ப் பஞ்சாயத்துகளையே வடமாநில கிராம மக்கள் நாடும் போக்கு தொடர்கிறது. இதனால், சம்பந்தப்பட்ட பெண்களை ஊருக்கு நடுவே நிற்க வைத்து மானத்தை வாங்குவதும், அவர்களை இழிவாக நடத்தப்படுவதும் தொடர்கதையாகிவிட்டது.
பழங்குடி பெண்ணின் பரிதாபம்
இதில் பெரும்பாலும் இதில் சிக்கி கொள்வது பழங்குடி மற்றும் தலித் பெண்களாக இருப்பது அதைவிட வருத்தத்துக்குரியது. ராஜஸ்தானில் சன்சி நாடோடி சமூகத்தில் கல்யாணம் ஆனதுமே, அந்த புதுமண பெண்ணுக்கு கன்னித்தன்மை சோதனை செய்கிறார்கள். கன்னி கழியாமல் பெண் இருந்தால் மட்டுமே அவரை வாழ கணவனுடன் அனுமதிக்கிறார்களாம்.
சமீபத்தில்கூட, ராஜஸ்தானில் ஒரு சம்பவம் நடந்தது.. பில்வாரா மாவட்டத்தை சேர்ந்த 24 வயது பெண், பக்கத்து வீட்டு நபரால் ஏற்கனவே பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்.. இதுதொடர்பாக பக்கத்து வீட்டுக்காரர்மீது போலீசில் ஏற்கனவே புகாரும் தரப்பட்டுள்ளது.
இந்நிலையில், 24 வயது பெண்ணுக்கு திருமணமாகி, மாமியார் வீட்டுக்கு வந்துள்ளார்.. தான் புதிதாக வாழ போகும் இடத்தில், எதையும் மறைக்க கூடாது என்பதற்காக, மாமியாரிடம் நடந்த சம்பவத்தை மணப்பெண் ரகசியமாக சொல்லி உள்ளார்.. உடனே அன்றைய தினம் இரவே, கன்னித்தன்மை சோதனையை மாமியார் நடத்தினாராம்.
கன்னித்தன்மை சோதனை
மணமகள் ஏற்கனவே கன்னித்தன்மையை இழந்துவிட்டதால், ரூ.10 லட்சம் இழப்பீடு தரவேண்டும் என்று மாமியார் கேட்டிருக்கிறார்.. இதையே உள்ளூர் பஞ்சாயத்தும் தீர்ப்பாக கூறியது. இதனால் வேறு வழியின்றி அந்த பெண் போலீசுக்கு புகாருடன் வந்தார்..
அதில், "என்னை கட்டாயப்படுத்தி கன்னித்தன்மை சோதனை செய்தனர், அதில் நான் தோல்வி அடைந்ததும் அடித்து விரட்டி, கொடுமைப்படுத்துகின்றனர்" என்று புகார் தந்த சம்பவம் அப்போது மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டது நினைவிருக்கலாம்.
கொதிக்கும் எண்ணெய்
இப்போது, குஜராத்தில் ஒரு கொடுமை நடந்துள்ளது.. விஜப்பூர் பகுதியில் கெரிடா என்ற கிராமத்தில் மனுபாய் தாக்கூர் என்பவருடன் வசித்து வருகிறார் 28 வயது இளம்பெண்.. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்..
கணவரின் தங்கையின் பெயர் ஜமுனா.. இவருக்கு தன்னுடைய அண்ணி மீது அடிக்கடி நடத்தையில் சந்தேகம் வருமாம்.. ஒருநாள் தன்னுடைய அண்ணியின் கற்பை பரிசோதிக்க முடிவு செய்தார். இதற்காக சமையலறையில் அடுப்பில் எண்ணெய்யை ஊற்றி கொதிக்க செய்தார். பிறகு அண்ணியை அழைத்து, அந்த கொதிக்கும் எண்ணெய்யில் கையை விட்டு கற்பை நிரூபிக்க சொன்னார்.
அண்ணியின் கற்பை சோதித்த நாத்தனார்
கொதிக்கும் எண்ணெய்யில் கை வெந்துபோய்விட்டால், அண்ணிக்கு கற்பு இல்லை என்று அர்த்தமாம்.. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அண்ணி, எண்ணெய்யில் கையை விட முடியாது என்று சொல்லி உள்ளார். இதனால் நாத்தனாருக்கு மேலும் ஆத்திரம் அதிகமானது.
உடனே துணைக்கு 2 பேரை அழைத்த நாத்தனர், அண்ணியை தரதரவென கிச்சனுக்கு இழுத்து சென்று, அவரது கைகளை கொதிக்கும் எண்ணெய்க்குள் கட்டாயப்படுத்தி அழுத்தியுள்ளார். இதனால் வலி தாங்க முடியாமல், அண்ணி அலறி துடித்தார்..
அண்ணி வாக்குமூலம்
அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் ஓடிவந்து, அண்ணியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.. அதற்குள் இதுகுறித்து தகவலறிந்து போலீசாரும் மருத்துவமனைக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.. பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தையும் பெற்றனர்..
தற்போது இந்த வழக்கில் எப்ஐஆர் தாக்கல் செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், அவரது சகோதரி உள்ளிட்ட மேலும் 2 பேரை குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அதற்குள் மற்றவர்கள் தலைமறைவாகிவிட்டதால் அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications