கார்த்தி சிதம்பரத்திற்கு திடீர் உடல்நலக்குறைவு.. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி..!
கார்த்தி சிதம்பரம் உடல்நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
சென்னை: திடீர் உடல் நலக்குறைவு காரணமாக, சிவகங்கை காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. அவருக்குச் சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர், பல்வேறு டெஸ்ட்டுகளை மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.
காங்கிரஸ் சார்பில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்று மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவர் கார்த்தி சிதம்பரம்..
சீனர்களுக்கு முறைகேடாக, விசா வழங்கியது தொடர்பாக, கார்த்தி சிதம்பரம் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இவருக்கு சொந்தமான 10 இடங்களில் கடந்த மே மாதம் சோதனை நடத்தப்பட்டது.

மனஉளைச்சல்
ஒரே நேரத்தில் சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை, பெரும் பரபரப்பை அப்போது ஏற்படுத்தியது.. இந்த ரெய்டு நடந்தபோது, ப.சிதம்பரம் ராஜஸ்தான் மாநிலத்திலும், கார்த்தி சிதம்பரம் லண்டனிலும் இருந்தனர்... இதற்கு பிறகு, லண்டனிலிருந்து நாடு திரும்பிய கார்த்தி சிதம்பரத்துடன் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்... "புலன்விசாரணை என்ற பெயரில் எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்த முயற்சி செய்வதாகவும், 6 முறை சோதனை நடத்தி எதை கண்டுபிடித்தார்கள்" என்றும் அப்போதே கார்த்தி சிதம்பரம் காட்டமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

பேரணிகள்
மற்றொருபக்கம், மத்திய அரசிற்கு எதிராக போராட்டங்களையும் அந்த சமயத்தில் நடத்தி வந்தார். குறிப்பாக, நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக ராகுல்காந்தி ஆஜரானபோது காங்கிரஸ் தலைவர்களுடன் சேர்ந்து பேரணியிலும், போராட்டத்தில் பங்கேற்றார்.. இப்படி பரபரப்பான அரசியலில் இயங்கிக் கொண்டிருந்த நிலையில், கார்த்தி சிதம்பரத்துக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

அட்மிட்
காய்ச்சல் அதிகம் இருந்த காரணத்தால் நேற்றிரவு, சென்னை அப்போலோ மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார்.. அங்கு அவருக்கு சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர், பல்வேறு உடற் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.. கொரோனா தொற்று காரணமாக அரசியல் தலைவர்கள், அடுத்தடுத்து தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு வரும் நிலையில், கார்த்தி சிதம்பரம் உடல்நிலை குறித்து அவரது ஆதரவாளர்கள் மத்தியில் திடீர் கவலையை ஏற்படுத்தியது.

காய்ச்சல்
இதனிடையே, கார்த்தி சிதம்பரத்துக்கு சாதாரண காய்ச்சல்தான் ஏற்பட்டிருப்பதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். எனினும், இன்று கூடுதலாக சில பரிசோதனைகளை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், சிகிச்சை முடிந்து நாளை வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பரிசோதனைகளை முடித்துவிட்டு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகும் கார்த்திக் சிதம்பரம், வருகிற 18ம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்ட தொடரில் பங்கேற்பதற்காக நாளை மாலை டெல்லி புறப்பட்டு செல்வார் என்றும் தகவல்கள் கூறுகின்றன..












Click it and Unblock the Notifications