அஜித் குமார் கொலை.. போலீசுக்கு எதிரான கேசில் இதுதான் ரொம்ப முக்கியம்.. பாயிண்டை பிடித்த கோர்ட்!
சென்னை: அஜித் குமார் உடலின் பிரேதப் பரிசோதனை அறிக்கை அதிர்ச்சியாக உள்ளது. உடலில் ஒரு பாகத்தையும் விடாமல் தாக்கப்பட்டுள்ளார். பதவி ஆணவத்தில் காவலர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். அஜித் குமார் இறக்கும் வரை, அவர் எதற்காக விசாரிக்கப்பட்டார் என்பதற்கு FIR பதிவு செய்யப்படவில்லை என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. அதிலும் வழக்கில் FIR போடாமலே.. ஒரு நபரை சந்தேகத்தின் பெயரில் அழைத்து கொடுமைப்படுத்தி கொலை செய்ததை கோர்ட் கண்டித்துள்ளது.
சிவகங்கை திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் மரண வழக்கினை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் காவலர்கள் என்பதால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட காவலர்கள் 5 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் மரண வழக்கு தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட காவலாளி அஜித் குமார் என்ற இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்தார். போலீசார் தாக்கியதால்தான் உயிரிழந்ததாக உறவினர்கள் போராட்டம் செய்தனர். தொடர்ந்து நேற்று பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியானதன் அடிப்படையில் 5 போலீசார் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வழக்கு விசாரணை
இன்று மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. திருப்புவனம் நீதிமன்ற நடுவர் வெங்கடாபதி பிரசாத், கோயில் உதவி ஆணையர், மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி டீன் ஆகியோர் ஆஜர் ஆகி வாக்குமூலம் கொடுத்தனர். அஜித் குமார் உடலின் பிரேதப் பரிசோதனை இடைக்கால அறிக்கையை மருத்துவக் கல்லூரி டீன் தாக்கல் செய்தார்.
இதில் நீதிபதிகள் தமிழக அரசுக்கும் , போலீசாருக்கும் சரமாரி கேள்விகளை எழுப்பினர். அதில், அஜித் குமார் கொலை வழக்கை உணர்வுப் பூர்வமாக எடுத்து, சிபிசிஐடியின் சிறப்புக் குழு நியாயமான முறையில் விசாரிக்க வேண்டும். காரணமான உயரதிகாரிகள் முதல் தொடர்புடைய அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அஜித் குமார் உடலின் பிரேதப் பரிசோதனை அறிக்கை அதிர்ச்சியாக உள்ளது. உடலில் ஒரு பாகத்தையும் விடாமல் தாக்கப்பட்டுள்ளார். பதவி ஆணவத்தில் காவலர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். அஜித் குமார் இறக்கும் வரை, அவர் எதற்காக விசாரிக்கப்பட்டார் என்பதற்கு FIR பதிவு செய்யப்படவில்லை.
அஜித் குமார் காவலர்களால் தாக்கப்படும் வீடியோ காட்சியை எடுத்தவர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கிறார் வீடியோ எங்கிருந்து எடுக்கப்பட்டது? யார் அங்கு இருந்தனர்?" என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு தமிழக அரசு தரப்பு, அஜித் குமார் கொலை வழக்கில் தொடர்புடைய அனைத்து உயரதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க அரசு தயாராக உள்ளது என்று கூறியது. இது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு 2 நாட்கள் அவகாசம் வழங்கியது உயர் நீதிமன்றம்.
வருங்காலங்களில் எந்த இடத்திலும் காவல்துறையினர் இதுபோல நடந்து கொள்ளக்கூடாது . கல்வியறிவு அதிகமுள்ள தமிழ்நாடு போன்ற மாநிலத்தில், இதுபோன்ற நிகழ்வு ஆபத்தானது என்று நீதிபதிகள் விமர்சனம் வைத்தனர்.
வழக்கின் முக்கிய விஷயம்
இதில் அஜித் குமார் இறக்கும் வரை, அவர் எதற்காக விசாரிக்கப்பட்டார் என்பதற்கு FIR பதிவு செய்யப்படவில்லை என்று கோர்ட் கடுமையாக கண்டித்துள்ளது. ஒருவர் மீது எப்ஐஆர் போடாமல் விசாரித்ததோடு அல்லாமல்.. அவரை கொடுமைப்படுத்தி கொலையும் செய்துள்ளதை கோர்ட் கடுமையாக கண்டித்துள்ளது.












Click it and Unblock the Notifications