சென்னை வாசிகள் கவனத்திற்கு.. அனைத்து வீடுகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர்.. நிதியமைச்சர் வில்சன் அதிரடி!
சென்னை: சென்னை மாநகர எல்லைக்குட்பட்ட அனைத்து மின்நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2026-27ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்து உரையாற்றி வரும் நிதியமைச்சர் மரிய வில்சன், மின்சாரத் துறை நவீனமயமாக்கல், உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் ஜவுளித் தொழில் முன்னேற்றம் குறித்து பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக, சென்னையை உலகத் தரத்திலான உள்கட்டமைப்பு வசதிகளுடன் மறுசீரமைக்கவும், வீடு தோறும் நவீனத் தொழில்நுட்பத்தைக் கொண்டு சேர்க்கவும் பிரம்மாண்ட திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
சென்னை நுகர்வோர் அனைவருக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள்!
மின்நுகர்வு மற்றும் மின்கட்டணக் கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் நோக்கில், மின்சாரத் துறையில் மிகப் பெரிய டிஜிட்டல் புரட்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகர எல்லைக்குட்பட்ட அனைத்து மின்நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார். மேலும், சென்னையைத் தாண்டி மாநிலத்தின் பிற பகுதிகளில் இயங்கி வரும் 50 லட்சம் தொழில் மற்றும் வணிக நுகர்வோருக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின் விரயம் தடுக்கப்பட்டு, நுகர்வோர்கள் தங்களின் பயன்பாட்டைத் துல்லியமாகக் கண்காணிக்கும் சூழல் உருவாகும்.
வீட்டு மேற்கூரை சூரிய மின் திட்டம்: ரூ.1 லட்சம் வரை மானியம்!
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மரபுசாரா எரிசக்தி உற்பத்தியை ஊக்குவிக்கும் பொருட்டு வீட்டு மேற்கூரை சூரிய மின் மானிய திட்டம் புதிய வடிவில் அறிமுகம் செய்யப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் வீடுகளில் சூரிய மின்பலகை அமைக்கும் நுகர்வோருக்கு ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்காக முதற்கட்டமாக ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
5,904 சதுர கி.மீ சென்னை பெருநகர பகுதி: ரூ.25 கோடியில் மாஸ்டர் பிளான்
தலைநகர் சென்னையை சர்வதேச நகரங்களுக்கு இணையான உள்கட்டமைப்போடு உயர்த்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் ஒருபகுதியாக, 5,904 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் விரிவுபடுத்தப்பட்டுள்ள சென்னை பெருநகர பகுதிக்கு விரிவான முழுமையான மாஸ்டர் பிளான் திட்டத்தை முறைப்படி செயல்படுத்த ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து, குடிநீர், கழிவுநீர் அகற்றம் மற்றும் பசுமை மண்டலங்களை முறைப்படுத்த இத்திட்டம் வழிவகுக்கும்.
ஜவுளித் துறை மேம்பாடு: திருப்பூரில் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி மையம்
இந்தியாவின் ஜவுளித் தலைநகரமாகத் திகழும் திருப்பூரின் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை சர்வதேச அளவிற்கு உயர்த்த முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன:
டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி மையம்: திருப்பூரில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் நவீன டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி மையம் அமைக்கப்படும்.
தமிழ்நாடு ஆடை வடிவமைப்பு நிறுவனம்: ஆடை வடிவமைப்பு மற்றும் ஏற்றுமதித் திறனை அதிகரிக்கும் நோக்கில் ரூ.60 கோடி செலவில் பிரத்யேகமாக தமிழ்நாடு ஆடை வடிவமைப்பு நிறுவனம் கொண்டு வரப்படும்.
செயற்கை நுண்ணறிவு & IT துறைக்கு ரூ.398 கோடி!
மாநிலத்தின் அனைத்துத் துறைகளிலும் டிஜிட்டல் மாற்றத்தை வேகப்படுத்தும் நோக்கில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் துறைக்கு (AI & IT Department) ஒட்டுமொத்தமாக ரூ.398 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
