தவெக மீட்டிங்கிற்கு வந்த பாம்பு.. மின்னல் வேகத்தில் பேக்கிற்குள் நுழைந்ததால் பரபரப்பு.. என்ன நடந்தது
சென்னை: விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழா இன்று மாமல்லபுரத்தில் நடந்தது. இந்த விழாவிற்கு பாஸ் வைத்திருந்த நிர்வாகிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட சூழலில் அழையா விருந்தாளியாக திடீரென்று பாம்பு நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கினார். தமிழக வெற்றிக் கழகம் என்று கட்சியின் பெயரை அவர் அறிமுகம் செய்தார். அதன்பிறகு விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். தற்போது மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமனம் செய்துள்ளார்.

இதன்மூலம் 2026ம் ஆண்டில் தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க அவர் முழுவீச்சில் தயாராகி விட்டார். இதனால் தமிழக அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
இந்நிலையில் தான் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா இன்று சென்னை அருகே மாமல்லபுரம் பூஞ்சேரியில் நடந்தது. இதில் கட்சியின் தலைவர் நடிகர் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரசார வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, மாவட்ட, மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த விழாவில் சுமார் 2,500 நிர்வாகிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்களுக்கு பாஸ் வழங்கப்பட்டது. பாஸ் இருப்பவர்கள் மட்டுமே விழா அரங்கத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். மற்ற நிர்வாகிகள் அனுமதிக்கப்படவில்லை. இப்படியான சூழலில் தான் நடிகர் விஜயின் மீட்டிங்கிற்கு அழையா விருந்தாளியாக பாம்பு ஒன்று நுழைந்தது.

அதாவது விழா நடந்த கட்டடத்துக்கு வெளியே செய்தியாளர்கள் தங்களின் பேக், கேமராக்களுடன் காத்து நின்றனர். அப்போது அங்கு பாம்பு வந்தது. கேமராவின் மீது ஊர்ந்து சென்ற பாம்பை செய்தியாளர்கள் பார்த்து சத்தம் எழுப்பினர். இதையடுத்து அந்த பாம்பு மின்னல் வேகத்தில் ஊர்ந்து சென்று இன்னொரு பேக்கின் அடியில் சென்றது. அதன்பிறகு அந்த பாம்பு அங்கிருந்து சென்றது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
இன்றைய விழாவில் நடிகர் விஜய் பேசும்போது, ‛‛1967, 1977 தேர்தல்களை போல ஒரு மிகப்பெரிய மாற்றத்தை நாங்கள் 2026 தேர்தலில் உருவாக்குவோம். இந்த அரசியலை பொறுத்தவரை யார், யாரை எதிர்ப்பார்கள் என்று கணிக்கவே முடியாது. இங்கு நிரந்தர நண்பனும் இல்லை. எதிரியும் இல்லை. அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்.
ஆனால் மக்களுக்கு ரொம்ப ரொம்ப பிடித்துப் போன ஒருவன் அரசியலுக்கு வருகிறான் என்றால், அதை நல்லவர்கள் எல்லாம் வரவேற்பார்கள். ஒரு சிலருக்கு மட்டும் கொஞ்சம் எரிச்சல் வரத்தானே செய்யும். இதுவரை நாம் சொன்ன பொய்யை நம்பி மக்கள் நமக்கு ஓட்டு போட்டார்களே, ஆனால் இவன் சொல்வது மக்கள் மனதுக்கு நெருக்கமாக உள்ளதே, இவனை எப்படி க்ளோஸ் செய்யலாம் என்று நினைக்கின்றனர்.

அதில் என்ன பேசுவதென்று தெரியாமல், வர்றவன் போறவன் எல்லாம் கட்சி ஆரம்பிக்கிறான் என்று சொல்கிறார்கள். ஆட்சியில் இருப்பவர்கள் நமக்கு எதிராக பேசுவதைப் போல. இப்படிப்பட்ட ஒரு அரசியல் களத்தில் கொஞ்சம் கூட பயம் இல்லாமல், வரும் எதிர்ப்புகளை இடது கையால் தள்ளிவிட்டு நம்முடைய தவெக இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. மக்களின் நலனை பற்றியோ, நாட்டின் நலனை பற்றியோ கவலையில்லாமல் வெறும் பணம் பணம் மட்டும்தான். இப்படிப்பட்ட எண்ணம் கொண்ட பண்ணையார்களை அரசியலை விட்டு அகற்றுவதுதான் நம்முடைய முதல் வேலை." என்று பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications