நல்ல பாம்பை வணங்கும் சென்னை இருளர் பெண்கள்.. வீட்டு வாசலில் வந்ததுமே பரவசம்.. தலையில் அதென்ன மஞ்சளா

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாம்பு எடுத்து வந்திருக்கோம் என்று வீட்டு வாசலில் சத்தம் கேட்டதுமே, கற்பூரத் தட்டுடன் பெண்கள் வீட்டிலிருந்து வெளியே ஓடிவருகிறார்கள்.. அதற்கு பிறகு நடப்பதுதான் ஆச்சரியமான சம்பவம்.. நம்முடைய காஞ்சிபுரம் மாவட்டத்தில்தான் இப்படி ஒரு நிகழ்வு நடக்கிறது.. அதுவும் வருடா வருடம் நடந்து வருகிறது.. இதற்கு என்ன காரணம் தெரியுமா? இந்த விநோத செய்தியை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்...!!

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே உள்ளது சாத்தனஞ்சேரி என்ற கிராமம்.. இங்கு ஏராளமான பழங்குடியினர்கள் பல தலைமுறைகளாக வசித்து வருகிறார்கள்... பழங்குடி மக்களின் உணவுப்பழக்கம், வழிபாடுகள், சடங்குகள் எப்போதுமே வித்தியாசமாக இருக்கும்..

வாசலில் பாம்பு

இதில் மிக முக்கியமானது, பாம்புகளை வழிபாடு செய்வது இவர்களின் வழக்கமான சடங்காக உள்ளது.. தனித்துவமான கிராமிய பாரம்பரியமாகவே இங்குள்ளவர்கள் இதனை செய்து வருகிறார்கள்.. பொங்கல் பண்டிகையின்போது பாம்புகளுக்கு வழிபாடு செய்வது, கட்டாயமான முறையாகும்..

இதற்காக இந்த கிராமத்தில் வசிக்கும் இருளர் பழங்குடியினர்கள், தைப்பொங்கல் பண்டிகைக்கு 4 நாட்களுக்கு முன்பேயே அருகிலுள்ள காடுகள் மற்றும் கழனி பகுதிகளுக்குச் சென்று விஷ பாம்புகளை பிடிப்பார்கள்.. நல்லபாம்புகள் தான் பெரும்பாலும் இவர்களது சாய்ஸ்..

பாம்புடன் வந்துட்டோம்

பாரம்பரிய முறைகளின் அடிப்படையில், எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் அந்த பாம்புகளை லாவகமாக பிடித்து, தங்களது வீட்டிற்கு கொண்டு வருவார்கள்.. சில நாட்கள் தங்களது குடும்ப உறுப்பினராகவே கருதி பாதுகாப்பாக அந்த பாம்பை பராமரிப்பார்கள்..

பிறகு பொங்கல் பண்டிகையின்போது பாம்பின் தலையில் மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து பொட்டு வைத்து , சிறப்பு வழிபாடு நடத்துவார்கள்.. இந்த சடங்கின் முக்கிய அம்சமாக, அந்த பாம்பை ஊர் முழுவதும் உள்ள வீதிகளுக்கு கொண்டு சென்று ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் வழிபாடு செய்வார்கள்.. அதாவது ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் நின்று, “பாம்பு எடுத்துவந்திருக்கோம்” என்ற குரல் கொடுப்பார்கள்..

பாம்பு தலையில் மஞ்சள்

உடனே வீடுகளில் உள்ள பெண்கள் கற்பூரம், தீபாராதனை தட்டுடன் வெளியே வந்து, உயிருள்ள பாம்பிற்கு தீபம் காட்டி பக்தியுடன் வணங்குவார்கள்.. குடும்ப நலனுக்கும், விவசாய செழிப்புக்கும், தீய சக்திகளிலிருந்து பாதுகாத்து கொள்வதற்கான வழிபாடு என்று இதனை கிராம மக்கள் நம்புகிறார்கள்..

இந்த வழிபாட்டின்போது, பழங்குடியினருக்கு அரிசி அல்லது தங்களால் இயன்ற சிறு தொகையை காணிக்கையாக வழங்குவதும் வழக்கமாக உள்ளது. அனைத்து சடங்குகளும் முடிந்ததும், அந்த பாம்பிற்கு எந்தவித சேதமும் ஏற்படாத வகையில், அது பிடிக்கப்பட்ட அதே காட்டு பகுதிக்கு மீண்டும் பாதுகாப்பாக கொண்டு சென்று விடுவிக்கின்றனர்.

பெண்கள் - வழிபாடு

இன்றும் தொடர்ந்து இந்த வினோதமான பாம்பு வழிபாடு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.. இயற்கையுடன் இணைந்த பழங்குடியினரின் வாழ்வியல் நம்பிக்கையையும், பாம்புகளுக்கு அவர்கள் வழங்கும் மரியாதையையும் வெளிப்படுத்தும் ஒரு தனித்துவமான கிராமிய பண்பாட்டு சின்னமாகவே அது கருதப்படுகிறது.

அந்தவகையில் 2 நாட்களுக்கு முன்புகூட இந்த வழிபாட்டினை பழங்குடியினர் வெகு சிறப்பாக நடத்தியிருந்தனர்... தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் பாரம்பரியமான, வித்தியாசமான வழிபாடுகள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே உள்ள சாத்தனஞ்சேரி கிராமத்தில் நடக்கும் இந்த நிகழ்வானது, இணையத்தில் வைரலாகி வருகிறது..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+