சோப்பு, சீப்பு, எண்ணெய் எல்லாம் விலை உயரபோகுது.. வார்னிங் கொடுக்கும் ரிப்போர்ட்!
சென்னை: ஈரான் - அமெரிக்கா போரின் காரணமாக உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவது, இந்தியாவில் பணவீக்கம் அதிகரிக்கும் அச்சம் உருவாகியிருக்கிறது. இதன் நேரடி தாக்கமாக பெட்ரோல், டீசல் விலைகள் ஏற்கனவே எதிரொலித்துள்ள நிலையில், தற்போது மக்கள் தினமும் பயன்படுத்தும் நுகர்வோர் பொருட்களில் எதிரொலிக்கும் என முன்னணி முதலீட்டு நிறுவனத்தின் ரிப்போர்ட் கூறுகிறது.
குறிப்பாக உணவு பொருட்கள், சோப்பு, சமைக்கும் எண்ணெய் போன்ற மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய FMCG பொருட்களின் விலைகளும் விரைவில் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. 2027 நிதியாண்டின் முதல் காலாண்டிலேயே இந்த விலை உயர்வு நடைமுறைக்கு வரும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளீட்டு செலவு அழுத்தம்: விலை உயர்வுக்கு முக்கிய காரணம்
நுவாமா இன்ஸ்டிட்யூஷனல் ஈக்விட்டீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கச்சா எண்ணெய் விலை உயர்வும், இந்திய ரூபாய் மதிப்பு குறைவதும் FMCG நிறுவனங்களின் உற்பத்தி செலவுகளை பெரிதும் பாதித்துள்ளது. குறிப்பாக, மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக நிறுவனங்களுக்கு தற்போதைய விலை நிலையை தக்க வைத்துக்கொள்வது கடினமாகியுள்ளது.
இந்த ஆய்வறிக்கையின்படி, தற்போதைய உற்பத்தி செலவுகளின் பாதிப்பு நீடித்தால், 2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் குறைந்தபட்சம் 3% முதல் 4% வரை விலை உயர்வு நிகழும் வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது.
FMCG நிறுவனங்கள் பொதுவாக 30 முதல் 45 நாட்களுக்கு போதுமான மூலப்பொருட்கள் மற்றும் தயாரிப்புகளை கையிருப்பில் வைத்திருக்கும். தற்போது அந்த கையிருப்பு பயன்படுத்தப்பட்டு குறைந்து வருவதால், புதிய பொருட்களை அதிக விலையில் வாங்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இதனால் விலை உயர்வை தள்ளிப்போட முடியாத சூழல் உருவாகியுள்ளது.
2026 நிதியாண்டின் இறுதி காலாண்டில் இந்த தாக்கம் குறைவாகவே இருந்தாலும், தற்போது கையிருப்பு குறையும் போது விலை உயர்வு தவிர்க்க முடியாத நிலை உருவாகியுள்ளது. விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு எரிபொருள் மீதான கலால் வரி உயர்வை கட்டுக்குள் வைத்துள்ளது. இதேபோல் உற்பத்தி துறைக்கு சாதகமாக பெட்ரோகெமிக்கல் பொருட்கள் மீதான வரியும் குறைக்கப்பட்டு உள்ளது.
பேக்கேஜிங் செலவுகள் உயர்வு
பொதுவாக FMCG நிறுவனங்களின் மொத்த செலவில் சுமார் 15% முதல் 20% வரை பேக்கேஜிங் செலவுகள் உள்ளன. கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 100 டாலருக்கு மேல் தாண்டியிருப்பதால், பாலிப்ரொப்பிலீன் மற்றும் பாலிஎதிலீன் போன்ற பெட்ரோ கெமிக்கல் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் பேக்கேஜிங் செலவுகள் கணிசமாக உயர்ந்துள்ளன.
இந்த செலவு உயர்வு நேரடியாக பொருட்களின் ரீடைல் விலையை பாதிக்கிறது. குறிப்பாக, சோப்பு, டிட்டர்ஜெண்ட், சமைக்கும் எண்ணெய் மற்றும் பெயிண்ட் தயாரிப்பு நிறுவனங்கள் அதிக பாதிப்பை எதிர்கொள்கின்றன.
மக்களுக்கு பாதிப்பு
உலகளாவிய எண்ணெய் சந்தை பதட்டம், ரூபாய் மதிப்பு சரிவு, மற்றும் உற்பத்தி செலவு உயர்வு ஆகியவை ஒன்றிணைந்து FMCG துறையில் விலை உயர்வைத் தவிர்க்க முடியாத நிலைக்கு தள்ளியுள்ளது. இதன் நேரடி தாக்கம் நாட்டின் அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்க உள்ளது.
இதேவேளையில் நிறுவனங்கள் இந்த விலை உயர்வை பொருட்களின் எடையை குறைத்தும் கட்டுப்படுத்தும். எப்படியானாலும் பாதிப்பு மக்களுக்கு தான்.












Click it and Unblock the Notifications