தமிழ்நாட்டின் வரலாற்றில், இதற்கு முன் எப்போதும் நடந்திராத ஒன்று.. திக வீரமணி ட்வீட் பதிவு
சென்னை: ''மாற்றம்... மாற்றம் ஏற்பட்டுவிட்டது'' என்று கூத்தாடினாலும்கூட, அந்த மாற்றம் நிலைத்து நீடிக்கும் வளர்ச்சிக்கு வழிவகுக்கக்கூடியதா என்பது, நாட்டு நலன்பற்றிய பொறுப்பாளர்களின் தெளிவான கேள்வி என்று திராவிடர் கழக தலைவர் வீரமணி கூறியுள்ளார். தமிழ்நாட்டின் வரலாற்றில், இதற்கு முன் எப்போதும் நடந்திராத வகையில், பதவியேற்பு நாள் குறிப்பிடப்பட்டு, அதுவும் முறையான வகையில் செய்யப்படாததால், ரத்து செய்யப்பட்டது என்றும் விமர்சித்துள்ளார்.
திராவிடர் கழக தலைவர் வீரமணி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், " "மாற்றம் ஏற்பட்டுவிட்டது'' என்று கூத்தாடினாலும்கூட, அந்த மாற்றம் நிலைத்து நீடிக்கும் வளர்ச்சிக்கு வழிவகுக்கக்கூடியதா? இப்போது தேவை தமிழ்நாட்டு வளர்ச்சிக்குத் தேவையான நிலையான, நிம்மதிமிக்க ஆட்சியே!

'திராவிட மாடல்' ஆட்சிமூலம், குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது அய்ந்தாண்டு கால ஆட்சியின்மூலம் கிடைத்துள்ள கல்வி வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சிகளும், மதக் கலவரமற்ற அமைதிப் பூங்காவாகவே தொடரவும், தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சாதனைகளும் - மக்கள் நல வளர்ச்சிப் பணிகளும், புதிய புதிய தொழிற்சாலைகள் அமைந்ததால் பெருகிய வேலை வாய்ப்புகளும் தற்போது ஏற்பட்டுள்ள ''தொங்கு சட்டமன்றம்'' தீர்ப்பின்மூலம் என்னாகுமோ? என்ற அச்சம் தமிழ்நாட்டில் இன்று விவரம் அறிந்தவர்களின் மிகப்பெரிய கவலையாகும்!
நாட்டு நலன்பற்றிய பொறுப்பாளர்களின் தெளிவான கேள்வி!
''மாற்றம்... மாற்றம் ஏற்பட்டுவிட்டது'' என்று கூத்தாடினாலும்கூட, அந்த மாற்றம் நிலைத்து நீடிக்கும் வளர்ச்சிக்கு வழிவகுக்கக்கூடியதா என்பது, நாட்டு நலன்பற்றிய பொறுப்பாளர்களின் தெளிவான கேள்வியாகும்! வெற்றி பெற்றுள்ள த.வெ.க. என்ற விஜய் கட்சிக்கு இதுவரை அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை; மேலும், 118 என்ற ஆட்சி அமைக்கத் தேவைப்படும் ஆதரவு கிடைப்பதற்கே அவர்கள் தரப்பு அரும்பாடுபடுகிறது! அரசியல் அனுபவம் இல்லாத காரணத்தால், தமிழ்நாட்டின் வரலாற்றில், இதற்கு முன் எப்போதும் நடந்திராத வகையில், பதவியேற்பு நாள் குறிப்பிடப்பட்டு, அதுவும் முறையான வகையில் செய்யப்படாததால், ரத்து செய்யப்பட்டது.
அனுபவின்மையும், அரசியல் அபிலாஷைகளும்தான்!
முதலமைச்சராகப் பொறுப்பு ஏற்கவிருக்கும் த.வெ.க.வின் தலைவருக்கு அளித்த பாதுகாப்பு முதல் பல விஷயங்களில் குளறுபடி என்பது எதைக் காட்டுகிறது? அனுபவின்மையும், அரசியல் அபிலா ைஷகளும்தானே காரணம்! ஓட்டுக் கண்ணோட்டத்தில் வெற்றி; ஆனால், நாட்டு நலக் கண்ணோட்டத்தில், முன்னுதாரணம் இல்லாத மிக மோசமான செயல்பாடுகள் அல்லவா இவை? வெளிநாட்டிலிருந்து முதலீடு செய்து வந்தவர்களும், வரவிருக்கும் நாட்டோரும், இனி தமிழ்நாட்டில், தங்களது தொழிலைத் தொடங்க உற்சாகத்துடன் முன்வருவார்களா?
இதுபோன்று குறைந்த எண்ணிக்கை அரிது; மிகவும் கறாரான 118 கிடைத்தாலும்கூட, அது நிலையான ஆட்சியை ஏற்படுத்த உதவுமா? பொறுப்புள்ளவர்களும், தமிழ்நாட்டின் நலனின் உண்மையான அக்கறை உள்ளவர்களும் இந்த அரசியல் தேக்க நிலையை ஏற்பார்களா? ஏற்க முடியுமா? குதிரை பேரம் - பொது ஒழுக்கச் சிதைவுகள் நடைபெறலாம்!
அவையெல்லாவற்றையும் அடங்கா பதவிக்காக அரசியல் பிழைத்தோரும், கொள்கை அரசியலைத் துறந்து, தேர்தல் - பதவி வேட்டை அரசியலுக்குப் பாய்ந்து, முன்பு சொன்னதை மறந்து, 'தொழுத கையுள்ளும் படையொடுங்கும்' என்ற குறளுக்கு இலக்கியமாகி உள்ள பொல்லா நிலைக்குச் சென்றுள்ளதால், கட்சித் தாவல், 'ஆயாராம் காயாராம்' என்ற குதிரை பேரம் - பொது ஒழுக்கச் சிதைவுகள்கூட நடைபெறலாம் என்ற கவலை எழுந்துள்ளது.
இவற்றைத் தமிழ்நாடு அதிகம் கண்டதில்லை. முன்பு 1952 இல் காங்கிரஸ் எதிர்ப்பை வைத்து, 'காமன்வீல்' கட்சி என்ற தனிக்கட்சி உருவாக்கியிருந்த அன்றைய கூட்டணியிலிருந்து, திடீர் முதலமைச்சரான ஆச்சாரியார் வீசிய வலையில் வீழ்ந்து, ராஜாஜி அணிக்கு மாறிய மாணிக்கவேல் நாயக்கர் 'மக்கள் துரோகி மாணிக்கவேலர்' என்றே அர்ச்சிக்கப்பட்டு, 'சைக்கிள் பெட்டி' சரிந்த கதை - இன்று தொடரக்கூடாது!
அணி மாறுவது சரியல்ல!
கூட்டணி அரசியல் தேர்தலுக்கு முன்னர் ஏற்பட்டு, அதன்படி பதவி வாங்குவதுதான் அறிவுச் சான்றாண்மையே தவிர, பற்றாக்குறைக்காக அணி மாறுவது சரியல்ல!
'அரசியல் பிழைத்தோருக்கு அறங்கூற்றம்' என்பது அறிவுரையானாலும், அதை மறந்து நடப்பது காலந்தோறும் தொடர்கிறது. இப்போது தேவை தமிழ்நாட்டு வளர்ச்சிக்குத் தேவையான நிலையான, நிம்மதிமிக்க ஆட்சியே! நாம் பயணித்து வந்ததில் முறிவு கூடாத ஒன்று! நம்பகத்தன்மையும் முக்கியமானது! இந்த நேரத்தில், இதைச் சொல்லவேண்டியதும், சுட்டிக்காட்ட வேண்டியதும் எங்களுடைய கடமை! காத்திருந்து பார்ப்போம், கவனச்சிதறல் இன்றி!" இவ்வாறு கூறியுள்ளார்.














Click it and Unblock the Notifications