அப்பாவை துண்டு துண்டாக வெட்டி.. டிரம்மில் வைத்து புதைத்த கொடூர மகன் - சென்னையில் ‘பகீர்’ சம்பவம்!
சென்னை: சென்னை வளசரவாக்கம் பகுதியில் ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர் மாயமான நிலையில், அவரது மகனே தந்தையை கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தந்தையை யாருக்கும் தெரியாமல் புதைக்க மகன் குணசேகரன் சமீபத்தில் ராணிப்பேட்டை அருகே 3 ஏக்கரில் இடம் வாங்கி வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தலைமறைவான மகனை போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். சொத்து பிரச்சனை காரணமாக இந்தக் கொலை நடந்ததா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வளசரவாக்கம்
சென்னை வளசரவாக்கம், ஆற்காடு சாலை பகுதியை சேர்ந்தவர் குமரேசன். 78 வயதான இவர் ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர். இவரது மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களது மகன் குணசேகரனுக்கும் மகள்கள் மூவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
கணவரை இழந்த மூத்த மகள் காஞ்சனா மாலா, வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் 2வது தளத்தில் தந்தை குமரேசனுடன் வசித்து வந்தார். அதே வீட்டில் உள்ள முதல் தளத்தில் குமரேசனின் மகன் குணசேகரன் மனைவி மற்றும் 2 மகன்களுடன் வசித்தார்.

குமரேசன் மாயம்
காஞ்சனா மாலா, கடந்த 15ஆம் தேதி மந்தைவெளியில் உள்ள வீட்டிற்கு சென்றுவிட்டார். வீட்டில் அவரது தந்தை குமரேசன் மட்டும் தனியாக இருந்துள்ளார். காஞ்சனா மாலா திரும்பி வந்தபோது வீட்டின் கதவு வெளிப்புறம் பூட்டிக் கிடந்துள்ளது. தந்தை குமரேசன் அங்கு இல்லை.
இதையடுத்து காஞ்சனா மாலா, கீழ்வீட்டில் வசிக்கும் தம்பி குணசேகரனுடன் வளசரவாக்கம், வடபழனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தந்தை குமரேசனை தேடியுள்ளார். அப்போது உடன் வந்த குணசேகரனும் திடீரென மாயமாகியுள்ளார்.

சந்தேகம்
குமரேசனுக்கு தொடர்பு கொண்டபோது அவரது செல்போனும் ஸ்விட்ச் ஆக் ஆகியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த காஞ்சனா மாலா அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பூட்டிய கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது குமரேசனின் படுக்கை அறை முழுவதும் ரத்தக் கறையாக இருந்துள்ளது. மேலும், அங்கு அதிக துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து அச்சமடைந்த அவர் வளசரவாக்கம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

விசாரணை
போலீசார் வந்து, மோப்பநாய் உதவியுடன் விசாரணை நடத்தினர். மாயமான குணசேகரனின் மனைவியிடம் விசாரித்தபோது, அவர் நேற்று முன் தினம் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள அவரது நண்பரை பார்க்கச் சென்றது தெரியவந்தது. அவரிடம் விசாரித்ததில் குணசேகரன் அப்பகுதியில் கடை கட்டுவதற்காக சமீபத்தில் தான் வாங்கிய நிலத்தில் இடம் பார்த்துவிட்டுச் சென்றதாகத் தெரிவித்துள்ளார்.

டிரம்மில் வைத்து
பின்னர், நேற்று காலை ஒரு மினி வேனில் டிரம் மற்றும் மண்வெட்டியுடன் அங்கு சென்ற குணசேகரன், அவரது நண்பரை அங்கிருந்து போகச் சொல்லிவிட்டு அப்பகுதியை சுத்தம் செய்வது போல் நடித்துள்ளார். பின்னர், டிரம்மில் துண்டு துண்டாக வெட்டி வைத்திருந்த தனது தந்தையின் உடலை அங்கு புதைத்துள்ளார்.
தந்தையை கொலை செய்து புதைப்பதற்காகவே காவேரிப்பாக்கம் பகுதியில் 3 ஏக்கரில் குணசேகரன் சமீபத்தில் இடம் வாங்கி இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சொத்து பிரச்சனை
தந்தையை துண்டு துண்டாக கொலை செய்துவிட்டு தலைமறைவான குணசேகரனை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். சொத்து பிரச்சனை காரணமாக இந்தக் கொலை நடந்ததா என்றும் போலீசார் அவரது குடும்பத்தினரிடம் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் வளசரவாக்கம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications