நான் பாடிய பாடல் அதிமுக உடையது.. அரசு என்னை கொலை செய்ய பார்த்தது - சாட்டை துரைமுருகன் பேட்டி
சென்னை: கைதாகி விடுவிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகி என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்றும், நான் பாடிய பாடல் சமூக வலைத்தளத்தில் இருக்கிறது என்றும், அதிமுக கடந்த 31 ஆண்டுகளாக தேர்தல் பிரசாரத்தின் போது பாடும் பாடல் என்று கூறினார். மேலும் திட்டமிட்டு என் மீது பொய் வழக்கை போட்டு முடக்க நினைக்கிறார்கள் என்றும் கூறினார்.
தென்காசி மாவட்டம் குற்றாலத்திற்கு குளிக்க வந்திருந்த போது நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகனை திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறு பரப்பியதாக திமுக ஐடி விங் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தார். வன் கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகனை காவலில் அனுப்ப நீதிபதி மறுத்துவிட்டார். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், காவலில் அனுப்ப கோர்ட் மறுத்துவிட்டது. இதையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து கைதாகி வெளியே வந்த சாட்டை துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தொடர்ச்சியாக திமுக அரசாங்கம் என் மீது 11 வழக்குகளை போட்டு முடக்க நினைத்தது. இப்போது மீண்டும் ஒரு பொய் வழக்கை போட்டு கொல்ல திட்டமிட்டது. கடந்த 14 ஆண்டுகால நாம் தமிழர் அரசியலில், பட்டியலினத்தவர்களுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் தான் அரசியல் செய்கிறோம். வேங்கை வயல், நாங்குநேரி, சங்கரன்கோவில் சாதிய பிரச்சினைகளில் அந்த மக்களுக்கு ஆதரவாக தான் நான் நின்றேன்.
தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தான ஆதரவாக தான் நின்றேன். ஆனால் என்னை பிசிஆர் சட்டத்தில் ஒடுக்க நினைத்தது இந்த திமுக அரசு. இது அப்பட்டமான சட்டத்திற்கு புறம்பான வழக்கு. நான் சாதி இல்லை என்று சொல்லி தான் சாதி மறுப்பு திருமணம் செய்திருக்கிறேன். நான் பாடிய பாடல் அதிமுக உடையது. 31 ஆண்டுகளாக அதிமுக தேர்தல் பிரசாரங்களில் பாடப்படுகின்ற பாடல் தான் இது.
சமூக வலைத்தளங்களில் இருக்கின்ற பாடல். இதனை மேற்கோள் காட்டி, தான் நான் பாடினேன். நான் எந்த சமூகத்தையும் இழிவுபடுத்தி பேசவில்லை. குறிப்பாக சண்டாளன் என்கிற சொல் ஒரு சாதிய சொல் என்று எனக்கு தெரியாது. அதனை இன்றைக்கு தான் புரிந்துகொண்டேன். நீதியரசர் நேரமையில் நின்று இந்த வழக்கு செல்லாது என்று தெரிவித்துவிட்டார்.
இந்த வழக்கு பதிவு போட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிவிட்டார். பாஜகவை பார்த்து பாசிம் என்று சொல்லும் திமுக என்னை கைது செய்ததன் பெயர் என்ன? குற்றாலத்தில் இருந்த என்ன தலைமறைவாக இருக்கிறேன் என்று சொல்லி என்னிடம் இருந்த 2 செல்போனையும் பறித்தனர். இந்த வழக்குக்குன் என் செல்போனுக்கும் என்ன சம்பந்தம். நான் மேடையில் தான் பேசினே.
என் காரிலேயே என்னை அழைத்து வந்தனர். அவர் தூக்கத்தில், முழு போதையில் இருந்தார். அவர் என் காரை ஓட்டிக்கொண்டு என்னை அழைத்து வந்தார். திட்டமிட்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே விபத்துக்குள்ளாக பார்த்தார்கள். ஆனால் என்னுடைய டிரைவர் பின்னால் இருந்து எச்சரித்தார். அதன்பிறகு மதுரை விலாங்குளம் டோல்கேட் பக்கத்தில் வரும்போது என்னை கொலை செய்ய பார்த்தனர்.
வேண்டும் என்றே அந்த டிரைவர் ஒரு கார் மீது மோத வைத்தார். பின்னால் லாரி வந்து எங்க காரில் மோதுகிறது. எனக்கு முதுகில் அடிபட்டது. என் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. முழுக்க முழுக்க இந்த அரசு என்னை கொலை செய்ய பார்க்கிறது. இந்த அரசிடம் என் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. என் உயிருக்கு நீதிமன்றம் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications