அரசியலில் தொடர் சறுக்கல்! கைக்கு எட்டாத அதிமுக.. ஜோதிடரின் அட்வைஸ்படி பெயரை மாற்றுகிறாரா சசிகலா?
சென்னை: சசிகலா அரசியலில் சோபிக்க அவரது பெயரை மாற்ற வேண்டும் என்றும் அவரது திநகர் வீட்டையும் மாற்ற வேண்டும் என ஜோதிடர்கள் ஆலோசனை கூறியதாக தெரிகிறது.
சொத்து குவிப்பு வழக்கில் சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா அதிமுகவை கைப்பற்ற அதிரடி காட்டக் கூடாது என்பதால் விட்டு பிடிக்கலாம் என முடிவு செய்தார். இதனால்தான் அரசியலிலிருந்து தற்காலிகமாக ஒதுங்குவதாக அறிக்கை விட்டிருந்தார்.
இதையடுத்து அதிமுகவின் சட்டசபை தேர்தல் தோல்வி, கோஷ்டி பூசல், இரு தலைமைகளுக்கிடையேயான பனிப்போர் உள்ளிட்டவைகளை பார்த்த சசிகலா, அதிமுகவை இனியும் கைப்பற்றாமல் விட்டு விட்டால் கட்சி நிலைமை மோசமாகிவிடும் என்பதால் அவர் தலையிட தொடங்கிவிட்டார்.

வளர்ச்சி
அதிமுகவை விட்டுவிட்டால் அதன் வளர்ச்சி கடுமையாக பாதிக்கும் என்பதால் அதிமுகவில் அதிருப்தியாளர்களை ஒன்றிணைக்க திட்டமிட்டார். அவர்களை சந்திப்பதற்காக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் ஆன்மீக சுற்றுப்பயணம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

ஆன்மீக சுற்றுப்பயணங்கள்
ஆனால் ஆன்மீக சுற்றுப்பயணங்கள் எதுவுமே சசிகலாவுக்கு கை கொடுக்கவில்லை. டெல்லி பாஜக தலைமையிடமும் இது தொடர்பாக சசிகலா தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் சொல்லப்பட்டது. ஆனாலும் பலன் கிடைக்கவில்லை. இது தொடர்பாக சசிகலா தனது ஆஸ்தான ஜோதிடரை அணுகியதாக தெரிகிறது.

சசிகலா ஜாதகம்
அப்போது அவர்கள் சசிகலாவின் ஜாதகத்தை அலசி ஆராய்ந்து ஒரு சில விஷயங்களை மாற்றுமாறு கூறியுள்ளார்.அதாவது சசிகலாவின் தந்தை விவேகானந்தன், தாயார் கிருஷ்ணவேணி ஆகியோரின் பெயரை தனது பெயருக்கு முன்னால் சசிகலா இனிஷியலாக பயன்படுத்தி வருகிறார். அதாவது விகே சசிகலா என பயன்படுத்தி வருகிறார்.

சசிகலாவின் பெயர்
ஆனால் ஜோதிடர்களோ சசிகலாவின் பெயருடன் அவரது கணவர் நடராஜனின் பெயரை இனிஷியலாக சேர்க்க வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார்கள். அதாவது சசிகலா நடராஜன் என்றோ, என் சசிகலா என்றோ, வி கே சசிகலா நடராஜன் என்றோ பெயரை மாற்றினால் அரசியலில் வெற்றி கிடைக்கும் என்றுள்ளார்கள். மேலும் சென்னை திநகரில் உள்ள வீட்டில் வாஸ்து தோஷம் இருப்பதால் அந்த வீட்டை விட்டு வேறு ஒரு வீட்டிற்கு உடனே குடியேற வேண்டும் என ஜோதிடர்கள் சசிகலாவுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்கள். இதனால் அவர் இது குறித்து தனது குடும்பத்தினருடன் ஆலோசனையில் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications