ராஜ்யசபா எம்பியாகிறாரா அண்ணாமலை! அதுவும் எந்த மாநிலத்தில் இருந்து தெரியுமா? அவங்க ஓகே சொல்வாங்களா?
சென்னை: தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை, மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக கூட்டணி கட்சியுடன் பாஜக தலைமை பேசி வருவதாகவும் சொல்லப்படுகிறது.
கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் அண்ணாமலை. இவர் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்தவர். இந்த நிலையில் அரசியல் மீது இருந்த ஈடுபாடு காரணமாக 2020 ஆம் ஆண்டு தனது ஐபிஎஸ் பணியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார்.

தமிழக பாஜகவில் சேர்ந்த அடுத்த ஆண்டே , அதாவது 2021 ஆம் ஆண்டே அவருக்கு தமிழக பாஜக தலைவர் பதவி கிடைத்தது. இந்த 4 ஆண்டுகளில் அண்ணாமலை தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வந்தார். அது போல் தனது பேச்சிலும் செயல்களிலும் அதிரடி காட்டி வந்தார்.
அதிரடி பேச்சு
இவரது அதிரடி பேச்சுகளால் அதிமுகவுடன் கூட்டணி முறிந்தது. இந்த நிலையில் அதிமுகவுடன் கூட்டணிக்கு பாஜக தலைமை விரும்பிய போதெல்லாம் அண்ணாமலைதான் அதற்கு இடைஞ்சலாக இருந்தார். மேலும் அண்ணாமலையை நீக்கினால்தான் கூட்டணி என்றும் அதிமுக திட்டவட்டமாக கூறியதாக தெரிகிறது.
தமிழக பாஜக
இவர் தலைவராக இருந்த போது தமிழகத்தில் பாஜக காலூன்றவும் நாடாளுமன்றத்திற்கு தமிழகத்திலிருந்து பாஜகவினர் இரட்டை இலக்கத்தில் செல்லவும் பாடுபட்டார். இதனிடையே பாஜகவில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிர்வாகிகள் புதிதாக தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற விதி இருக்கிறது.
அண்ணாமலை செயல்பாடுகள்
அண்ணாமலையின் செயல்பாடுகளால் அவர் அந்த பதவியில் நீடிக்கும் நிலை ஏற்பட்டது. ஆனாலும் கூட்டணி பேச்சுவார்த்தையில் தொய்வு ஏற்பட்டதை அடுத்து அண்ணாமலையை மாற்ற டெல்லி தலைமை முடிவு செய்தது. அதன்படி கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டார்.
பாதயாத்திரை
இதனால் பாத யாத்திரை, சாட்டையடி போராட்டம், செருப்பு அணியாமல் இருந்தது என பல்வேறு போராட்டங்களை செய்த அண்ணாமலையின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியானது. அமித்ஷா சென்னை வந்திருந்த போதுகூட அண்ணாமலையின் சேவை தேவை என்பதை போல் தெரிவித்திருந்தார். அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்பு கொடுக்கப்படும் என்றார்.
மாநிலங்களவை எம்பி
இந்த நிலையில் அவருக்கு மாநிலங்களவை எம்பி பதவி கொடுக்கப்படும் என சொல்லப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்வு செய்யப்பட போவதாக சொல்லப்படுகிறது. இதற்காக தெலுங்கு தேசம் கட்சியுடன் பாஜக தலைமை பேசி வருவதாகவும் சொல்லப்படுகிறது.
விரைவில் அறிவிப்பு
இந்த தகவலை அறிந்த அண்ணாமலை ஆதரவாளர்கள், தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிகிறது. தமிழக பாஜகவில் தலைவர்களாக இருந்தவர்கள் தேசிய அளவிலோ, மத்திய இணையமைச்சர் பதவியிலோ அல்லது மாநில ஆளுநர் பதவிக்கோ நியமிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் அண்ணாமலை மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்படுவார் என தெரிகிறது. இதே போல்தான் அண்ணாமலைக்கு முன்பு தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டு பிறகு மத்திய இணையமைச்சரானார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications