வந்தே பாரத் ரயில் சேவையில் மேஜர் மாற்றம்.. எங்கேன்னு பாருங்க.. ட்ரிப் போகுறதுக்கு முன்னாடி இத படிங்க
சென்னை: சென்னையிலிருந்து கர்நாடகா மாநிலம் மைசூருக்கு புதன்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ரயில் சேவையில் ரயில்வே நிர்வாகம் சில மாற்றங்களை அறிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய ரயில் சேவையில் இந்தியன் ரயில்வே முதன்மையானதாகும். ஏறத்தாழ 130 ஆண்டுகள் பழமையான இந்தியன் ரயில்வேயில் அவ்வப்போது சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 12 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுடன் இயங்கும் இந்தியன் ரயில்வே ஆண்டுக்கு சுமார் 500 கோடி பயணிகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சேர்க்கிறது. இந்நிலையில் ரயில் சேவையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்ல சமீபத்தில் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்த ரயில் முக்கிய நகரங்களை இணைக்கும். அதேபோல அதிவேகம் மற்றும் நவீன வசதிகளை கொண்டிருப்பதால் மக்கள் மத்தியில் இந்த ரயில் சேவைக்கு பெரும் வரவேற்பு இருந்தது. முதன் முதலாக டெல்லியிலிருந்து 759 கி.மீ தொலைவில் உள்ள உத்தரப் பிரதேசத்தின் வாரணாசிக்கு இயக்கப்பட்டது. இதனையடுத்து ஐந்தாவது ரயில் சென்னையிலிருந்து மைசூருக்கு இயக்கப்பட்டது. சென்னைக்கும் மைசூருக்கும் இடையேயான தூரம் மொத்தம் 496 கி.மீ ஆகும். இந்த தொலைவை வந்தேபாரத் ரயில் 6 மணிநேரம் 30 நிமிடத்தில் கடந்துவிடும்.
மொத்தம் 16 பெட்டிகளை கொண்ட இந்த ரயிலில் இருக்கை வசதி மட்டுமே இருக்கும். எடை குறைவான இந்த ரயில் கவாச் ரயில் பாதுகாப்பு தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த ரயில் இயக்கப்பட்டதால் அதேபோல மிகுந்த வரவேற்பையும் பெற்றிருக்கிறது. சராசரியாக 76 கி.மீ வேகத்தில் இயங்கும் இந்த ரயில் காட்பாடி மற்றும் பெங்களூரு ரயில் நிறுத்தத்தில் மட்டுமே நின்று செல்லும். இந்நிலையில் இந்த ரயில் சேவையில் தெற்கு ரயில்வே சில மாற்றங்களை செய்திருப்பதாக அறிவித்திருக்கிறது. அதாவது சென்னை சென்ட்ரல் - மைசூரு இடையிலான வந்தே பாரத் ரயில் (வண்டி எண்: 20607/20608) மே 15-ஆம் தேதி முதல் சென்னை சென்ட்ரலில் வழக்கம் போல் காலை 5.50 மணிக்கு புறப்படும்.
ஆனால் இது காட்பாடி ரயில் நிலையத்துக்கு வழக்கம்போல் காலை 7.21 மணிக்கு வருவதற்கு பதிலாக 8 நிமிஷங்கள் முன்கூட்டியே வரும். அதேபோல காட்பாடியிலிருந்து புறப்படும் நேரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது காலை 7.25 மணிக்கு பதிலாக 10 நிமிஷங்கள் முன்பாக 7.15 மணிக்கு காட்பாடியிலிருந்து புறப்பட்டுச் செல்லும். மேலும், மறுமாா்க்கமாக மைசூரில் இருந்து காட்பாடிக்கு வழக்கம்போல் மாலை 5.36 மணிக்கு பதிலாக மாலை 5.33 மணிக்கு வந்தடையும். அங்கிருந்து மாலை 5.40 மணிக்கு பதிலாக 5 நிமிஷங்கள் முன்பாக 5.35 மணிக்கு புறப்படும்.
இந்த மாற்றங்கள் காரணமாக சென்ட்ரலுக்கு வழக்கம்போல் இரவு 7.30 மணிக்கு வந்தடைவதற்கு பதிலாக 10 நிமிஷங்கள் முன்பாக இரவு 7.20 மணிக்கு வந்தடையும். வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் வேகம்தான். ஏற்கெனவே சென்னை-மைசூரு இடையே இயக்கப்பட்டு வந்த சதாப்தி ரயிலும் ஏறத்தாழ இதே வேகத்தில்தான் (மணிக்கு 70 கி.மீ) இயக்கப்பட்டு வந்தது. இப்படி இருக்கையில் வந்தே பாரத் ரயில் குறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. சதாப்தியில் கட்டணம் குறைவு. ஆனால் வந்தே பாரத் ரயிலில் கட்டணம் அதிகம் என்று சொல்லப்பட்டது. எனவே தற்போது வந்தே பாரத் ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
வந்தே பாரத் மட்டுமல்லாது ஹவுரா ரயில் சேவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது சென்னை சென்ட்ரலில் இருந்து மேற்கு வங்கம் மாநிலம் ஹவுரா செல்லும் அதிவிரைவு ரயில் (வண்டி எண்: 12840) மே 15-ஆம் தேதி முதல் சென்னை சென்ட்ரலில் இருந்து வழக்கமாக இரவு 7.15 மணிக்கு செல்வதற்கு பதிலாக 5 நிமிஷங்கள் தாமதமாக இரவு 7.20 மணிக்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications