விதிமீறல்களுக்கு செக்! ரயில் பயணத்தில் மறந்தும் இந்த தப்பை பண்ணிடாதீங்க.. ஆக்ஷனில் இறங்கும் ரயில்வே
சென்னை: படிக்கட்டுகளில் நின்று கொண்டு பயணித்தால், பயணிகளுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது. தொலை தூரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் மின்சார ரயில்களில் சிலர் படிக்கட்டில் அமர்ந்தும், தொங்கியபடியும் சாகச பயணம் செய்வது ரயில்வே சட்டம் 1989 பிரிவு 156 கீழ் குற்ற செயல் ஆகும் என்றும் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் தினமும் ஆயிரக்கணக்கான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக தெற்கு ரயில்வே சார்பில் தினமும் 350 க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டும் இன்றி மின்சார ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. பணி நிமித்தமாகவும், தொழில் நிமித்தமாகவும் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த ரயில்களில் பயணம் செய்கிறார்கள்.

ஆயிரம் ரூபாய் அபராதம்
அதுபோக பள்ளி, கல்லூரி மாணவர்களும் அதிக அளவில் மின்சார ரயில்கள் உள்ளிட்டவற்றில் பயணம் செய்கிறார்கள். ரயில்களில் பயணம் செய்யும் போது சில நேரங்களில் சில பயணிகள் ஆபத்தான ரயில் பயணம் மேற்கொள்வதை பார்க்க முடிகிறது. படியில் தொங்கி கொண்டு ஆபத்தான பயணம் மேற்கொள்வது என விதி மீறல்களில் பயணிகள் ஈடுபடுவதை பார்க்க முடிகிறது. எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூட படிக்கட்டுகளில் அமர்ந்து கொண்டு பல நூறு கிலோ மீட்டருக்கு சில பயணிகள் பயணம் செய்வதையும் பார்க்க முடிகிறது.
இது போன்ற நேரங்களில் விபத்து ஏற்பட்டு உயிர் சேதமும் ஏற்படும் நிலை உள்ளது. இத்தகைய சூழலில்தான், இதுபோன்ற பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய நடவடிக்கை ஒன்றை ரயில்வே எடுத்துள்ளது. அதாவது, படிக்கட்டுகளில் நின்று கொண்டு பயணித்தால், பயணிகளுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
கண்காணிப்பு கேமராக்கள்
ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் நடைபெறும் குற்ற செயல்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. அதுபோல தொலை தூரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் மின்சார ரயில்களில் சிலர் படிக்கட்டில் அமர்ந்தும், தொங்கியபடியும் சாகச பயணம் செய்யும் நிகழ்வுகளும் நடக்கின்றது. இது ரயில்வே சட்டம் 1989 பிரிவு 156 கீழ் குற்ற செயல் ஆகும்.
எனவே இது போன்ற சாகச பயணத்தில் ஈடுபட்டால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் இதுபோன்ற ஆபத்தான பயணத்தில் ஈடுபடுவதை தடுத்து கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது" என்றனர்.
பயணிகள் கோரிக்கை
ரயில்வேயின் இந்த நடவடிக்கை வரவேற்புக்கு உரியது என்று ரயில் பயணிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில், நெரிசல் மிக்க நேரத்தில் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும்: அடிக்கடி காலதாமதமாக ரயில்கள் வருவதை தவிர்த்து சரியான நேரத்தில் ரயில்கள் வருவதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளையும் ரயில்வே எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
ஏனெனில் இதுபோன்ற கூட்டமான நெரிசலில் வேறு வழியின்றி பயணிகள் படிக்கட்டுகளில் தொங்கும் நிலை இருப்பதால், ரயில்வே கூடுதல் ரயில்களை இயக்கி கூட்ட நெரிசல் நேரங்களில் பயணிகளின் சிரமத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications