சென்னை மக்களுக்கு குட் நியூஸ்.. மின்சார ரயில் சேவை வழக்கம் போல் இயங்கும்! தென்னக ரயில்வே அறிவிப்பு!
சென்னை: சென்னையில் எழும்பூர் சென்ட்ரலுக்கு அடுத்து முக்கிய ரயில் நிலையமான தாம்பரத்தில் ரயில்வே பணிமனை பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்திருந்த நிலையில் தற்போது அந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ரயில் சேவை வழக்கம் போல் இயங்கும் என்பதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் தினமும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மின்சார ரயில் சேவையை பொதுமக்கள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு குறைந்த செலவில் வேகமாக சென்று வர பயன்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக வேலை, கல்லூரிக்கு செல்லும் மக்கள் மின்சார ரயில்களால் அதிகம் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் தான் சென்னையில் 55 மின்சார ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில்," தாம்பரம் யார்டு ரயில்வே ஸ்டேஷனின் 2ம் கட்ட புனரமைப்பு பணியுடன் சேர்ந்து தாம்பரம் யார்டுவில் பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதி கிடைத்துள்ளது. பயணிகள் மற்றும் ரயில்களின் பாதுகாப்பு கருதி இந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பணியின் காரணமாக ஜூலை 23ம் தேதி முதல் ஆகஸ்ட் )14-ம் தேதி வரை 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளது.
அதன்படி ஜூலை மாதம் 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே தினமும் காலை 9.30, 9.56, 10.56, 11.40, மதியம் 12.20, 12.40, இரவு 10.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்கள் 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது." என அறிவிக்கப்பட்டது. இதனால் மின்சார ரயில் சேவையை பயன்படுத்தி வந்த மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
இதனையடுத்து பொதுமக்கள் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்துத் துறை அறிவித்தது. இந்நிலையில் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்திருந்த நிலையில் தற்போது அந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டிருக்கிறது. மேலும், மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும் நேர அட்டவணையில் மாற்றம் செய்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்," சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் 23ஆம் தேதி முதல் 26ஆம் தேதி மற்றும் 29ஆம் தேதி முதல் ஆகஸ்டு 2ஆம் தேதி வரை பகல் நேர மின்சார ரெயில் சேவை வழக்கமான கால அட்டவணையின்படி இயக்கப்படும். 23ஆம் தேதி முதல் ஆகஸ்டு 2ஆம் தேதி வரை இரவு 10.30 மணி முதல் நள்ளிரவு 2.30 மணி வரை ஏற்கனவே அறித்திருந்தது போல் மின்சார ரெயில்கள் இயங்காது.
அதற்கு மாறாக ஏற்கனவே அறிவித்தது போல சென்னை கடற்கரை - பல்லாவரம், பல்லாவரம் - சென்னை கடற்கரை, கூடுவாஞ்சேரி - செங்கல்பட்டு, செங்கல்பட்டு - கூடுவாஞ்சேரி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். வரும் 27ஆம் தேதி மற்றும் 28ஆம் தேதி ஆகிய 2 நாட்கள் மின்சார ரெயில் சேவைகள் காலை மற்றும் இரவு நேரங்களில் முன்னதாக வெளியிட்ட அறிவிப்பின்படி ரத்து செய்யப்படுகிறது. ஆகஸ்ட் 3ஆம், தேதி முதல் 14ஆம் தேதி வரை மின்சார ரயில் சேவைகள் சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏற்கனவே அறிவித்தது போலவே பகல் மற்றும் இரவு நேரங்களில் ரத்து செய்யப்படுகிறது. அதற்கு மாற்றாக ஏற்கனவே அறிவித்திருந்தது போலவே பகல் மற்றும் இரவு நேரங்களில் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும்." என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications