தவெக அமைச்சரவையில் பாமக.. இடைத்தேர்தலுக்கு பின் அமைச்சராகும் செளமியா அன்புமணி? விஜய் விருப்பம்!
சென்னை: சட்டசபை இடைத்தேர்தலுக்கு பின் தவெக அமைச்சரவையில் பாமக இணைவதற்கான வாய்ப்புகள் கூடி வந்துள்ளதாக தெரிகிறது. இடைத்தேர்தலில் பாமக எந்தக் கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்காததற்கு தவெகவின் வியூக வகுப்பு புள்ளி முக்கிய காரணம் என்றும், அவர் மூலமாக செளமியா அன்புமணியை அமைச்சரவையில் சேர்க்க பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் பாமக எந்தக் கட்சிக்கும் ஆதரவு கிடையாது என்று அறிவித்துவிட்டது. அன்புமணியின் இந்த முடிவுக்கு பின் அதிமுக மீதான அதிருப்தி ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும், வேறு சில காரணங்களும் இருக்கின்றன.

தவெக ஆட்சி அமைந்த நாள் முதலே, பாமக அவர்களுடன் நெருங்கிய நட்பில் இருக்கிறது. அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோரை அன்புமணி நேரடியாகவே சந்தித்தார். மறுபக்கம் அன்புமணி, ஜான் ஆரோக்கியசாமி மற்றும் முதல்வர் விஜய் ஆகியோர் ஒரு சந்திப்பை நடத்தினர். சட்டசபையிலும் செளமியா அன்புமணிக்கு தவெகவினரால் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இடைத்தேர்தலில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பாமகவிடம் ஆதரவு கோரி இருக்கின்றன. ஆனால் தவெக தரப்பில் வியூக வகுப்பு புள்ளி ஒருவர் நேரடியாக அன்புமணியிடம் பேசி இருக்கிறார். அப்போது செளமியா அன்புமணியை அமைச்சராக்க விஜய் விரும்புவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படியான சூழலில், தவெகவுக்கு எதிர் நிலைப்பாட்டை எடுக்க வேண்டாம்.
அது முதல்வரை அப்செட் செய்யக் கூடும் என்று கூறப்பட்டிருக்கிறது. நீண்ட காலமாகவே பாமக அதிகாரத்தில் இல்லாதர்தால், அன்புமணி அமைச்சரவையில் இணைய சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே தன்னுடைய பேச்சில் செளமியா அன்புமணியை தொடர்ச்சியாக பாராட்டியும், புகழ்ந்தும் வருவதாகவும் கூறப்படுகிறது.
இடைத்தேர்தலுக்கு பின் தவெக அமைச்சரவையில் பாமக இணையக் கூடும் என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கம்யூனிஸ்ட் கட்சிகள் உடன் கருத்து வேறுபாடு எழுந்திருக்கிறது. தொடர்ச்சியாக கம்யூனிஸ்ட்கள் பல்வேறு விமர்சனங்களை வைத்து வருவதால், ஆட்சிக்கு பின்னடைவை உருவாக்கி இருக்கிறது. கூட்டணியிலும் இணைய மறுத்துவிட்டார்கள்.
இதனால் கம்யூனிஸ்ட்கள் உடனான உறவை துண்டித்துவிட்டு அந்த இடத்தில் பாமகவை கூட்டணியில் சேர்த்து கொள்ளலாம் என்றும் கணக்கு போட்டிருக்கிறது தவெக தலைமை. ஆனால் பாமக கூட்டணிக்குள் வந்துவிட்டால், விசிகவை எப்படி சமாளிப்பார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதுதொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் பேசப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications
