எஸ்பி வேலுமணிக்கு சிக்கல்.. 2 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்குப்பதிய மத்திய அரசு கிரீன் சிக்னல்
சென்னை: மிக நீண்ட இழுபறிக்கு பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இரு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி வழங்கப்பட்டு விட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக செயல்பட்டு வந்தவர் எஸ்பி வேலுமணி. தற்போது அதிமுக எம்எல்ஏவாக உள்ளார்.
எஸ்பி வேலுமணி நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக இருந்தபோது சென்னை, கோவை உள்பட பல்வேறு மாநகராட்சிகளில் பணி ஒதுக்கீடு செய்ததில் ரூ.98 கோடி அளவுக்கு டெண்டர் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக அறப்போர் இயக்கம் சார்பில் புகார் செய்யப்பட்டது. அதில் டெண்டர் முறைகேட்டில் எஸ்பி வேலுமணிக்கு, ஐஏஎஸ் அதிகாரிகளான அப்போதைய கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், நகராட்சி நிர்வாகத்துறையில் பணியாற்றிய கேஎஸ் கந்தசாமி ஆகியோரும் உடந்தையாக இருந்ததாக கூறப்பட்டு இருந்தது.
இந்த புகார் அடிப்படையில் எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்றத்தின் உத்தரவை லஞ்ச ஒழிப்பு துறை பின்பற்றவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. கடந்த செப்டம்பர் மாத விசாரணையின்போது வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் அப்போதைய கோவை மாநகராட்சி ஆணையராக இருந்த விஜயகார்த்திகேயன் மற்றும் நகராட்சி நிர்வாகத்துறையில் பணியாற்றிய கேஎஸ் கந்தசாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்வதற்கான அனுமதியை 2 மாதத்துக்குள் முடிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து இன்று மீண்டும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சி துறையின் இணை செயலாளர் சார்பில்'' 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தமிழக அரசு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்வதற்காக மத்திய அரசு கொடுத்த அனுமதி தொடர்பான ஆவணங்கள் தங்களின் கைகளுக்கு கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அதை கேட்ட நீதிமன்றம், ''மத்திய அரசின் அனுமதி தொடர்பான ஆவணங்களை பெற்ற பிறகு ஐஏஎஸ் அதிகாரிகளான கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகேயனுக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த நடைமுறையை விரைந்து முடிக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டது.
அதுமட்டுமின்றி வழக்கின் அடுத்தக்கட்ட முன்னேற்றத்திற்காக இந்த வழக்கை நீதிமன்றம் கண்காணிக்கும் என்று கூறிய நீதிமன்றம் அடுத்தக்கட்ட விசாரணையை டிசம்பர் 4ம் தேதிக்கு தள்ளிவிட்டார். அதோடு இந்த வழக்கில் எதிர்மனுதாரராக மத்திய அரசு சேர்க்கப்பட்டதை நீக்க உத்தரவிட்ட நீதிமன்றம் குற்ற வழக்குகளில் எப்படி கையாளப்படுகிறது? என்பதற்கு இது உதாரணம். ஏழை மக்களுக்கு எதிராக அரசு இயந்திரங்களின் சக்கரம் வேகமாக சுழலும் நிலையில் நிர்வாக அதிகாரிகளுக்கு எதிராக அரசு இயந்திரங்களின் சக்கரங்களை பிடித்து தள்ள வேண்டி உள்ளது என்று நீதிமன்றம் கவலை தெரிவித்தது.


Click it and Unblock the Notifications
