எதிர்க்கட்சி துணை தலைவர் அதிமுகவில் யார்? உதயநிதிக்கு இடம் எங்கே தெரியுமா? சபாநாயகர் அப்பாவு பதில்!
சென்னை : 2023ஆம் ஆண்டுக்கான முதல் தமிழக சட்டசபை கூட்டத் தொடர் வருகின்ற ஜனவரி 9ஆம் தேதி நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்திருக்கும் நிலையில், எதிர்க் கட்சி துணை தலைவர் விவகாரம் மற்றும் புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எங்கே இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் பதிலளித்துள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இந்த ஆண்டு தலைமைச் செயலகத்தில் நடைபெறும் காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இந்தாண்டின் கூட்டத்தொடர் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்கும் .
ஜனவரி 9ஆம் தேதி காலை 9:55 மணிக்கு ஆளுநர் ரவியை சபாநாயகர் அப்பாவு மற்றும் சட்டசபை செயலாளர் வரவேற்றபின் சபாநாயகர் இருக்கையில் அமரும் ஆளுநர் தனது உரையை தொடங்குவார். தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்ட பிறகு ஆளுநர் ரவி உரை நிகழ்த்த இருக்கிறார் .

தமிழக சட்டசபை கூட்டத் தொடர்
அவரது உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தவுடன் அன்றைய சட்டசபை நிகழ்வுகள் நிறைவடையும். அதனைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் அவரது அறையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெறும் இந்த கூட்டத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தினை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

சபாநாயகர் மு.அப்பாவு
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் 2023ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் குறித்து சபாநாயகர் மு.அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், 2023 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் ஜனவரி 9ம் தேதி ஆளுநர் உரையுடன் காலை 10 மணிக்கு தொடங்குகிறது.அன்றைய தினமே அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு எத்தனை நாட்கள் கூட்டத்தை நடத்தலாம் என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

எதிர்கட்சித் துணைத்தலைவர்
அதிமுக எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக கடந்த கூட்டத்தொடரின் போது அவர்களுக்கு குறிப்பு உரை வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் இரு தரப்பில் இருந்தும் எவ்வித தகவலும் வரவில்லை. அதனால் எதிர்கட்சித் துணைத்தலைவர் இருக்கையை பொறுத்தவரை இதற்கு முந்தைய அதே நிலை (எதிர்கட்சித் துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் நீடிப்பது) தொடரும். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில் ஓபிஎஸ் அமர்வார் என மறைமுகமாக தெரிவித்தார்.

கொரோனா கட்டுப்பாடுகள்
அண்மையில் கொரோனா தொற்று பரவல் தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறியுள்ள படி அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்கிற வழிகாட்டுதல் பின்பற்றப்படும். சட்டமன்ற கூட்டத்துடன் நடைபெறும் பொழுது சட்டமன்ற உறுப்பினர்கள் முக கவசம் அணியலாம் கட்டாயம் கிடையாது.

உதயநிதி ஸ்டாலின்
புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோருக்கு இடையே இருக்கை ஒதுக்கபட்டுள்ளது. அரசு தரப்பில் விசாரணை ஆணையம் அறிக்கைகளை பேரவையில் நிறைவேற்றி தருமாறு கூறினால் அந்த ஆணைய அறிக்கைகளை சட்டப்பேரவைகளில் வைத்து நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார். இதன் மூலம் இந்தாண்டு கூட்டத் தொடரிலும் ஓபிஎஸ்ஸே அதிமுக எதிர்கட்சி துணை தலைவராக சபை நிகழ்வுகள் கலந்து கொள்ள இருப்பது உறுதியாகியுள்ள நிலையில், எடப்பாடி தரப்பு கடும் அதிருப்தி அடைந்துள்ளது.












Click it and Unblock the Notifications