சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் சீட்டில் மாற்றமில்லை! சபாநாயகர் அப்பாவு திட்டவட்டம்!
சென்னை: தமிழக சட்டசபையில் எதிர்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில் மாற்றமில்லை என சபாநாயகர் அப்பாவு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் இதனைக் கூறினார்.

ஆர்.பி உதயகுமாரை எதிர்கட்சித்துணைத் தலைவராக அதிமுக தேர்வு செய்துள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் இருக்கை மாற்றப்படாது என்பதை அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி அருகில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளதால் இந்தக் கூட்டத் தொடரிலும் இருவரும் அருகருகே அமர வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே அதிமுகவில் யார் பெரியவர் என்ற அதிகார மோதல் நடைபெற்ற நிலையில் அதில் எடப்பாடி பழனிசாமி கை ஓங்கியுள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை தேர்வு செய்து அது தொடர்பான கடிதத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு சபாநாயகர் அப்பாவுவிடம் ஏற்கனவே வழங்கியுள்ளது.
இதனிடையே அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்குகளை சுட்டிக்காட்டி ஓபிஎஸ் சபாநாயகருக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கடிதம் எழுதியிருந்தார். அதற்கு சற்றும் சளைக்காமல் இருக்கையை மாற்றுமாறு எடப்பாடி பழனிசாமியும் சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இருவரின் கோரிக்கைகளில் யார் கோரிக்கையை சபாநாயகர் அப்பாவு ஏற்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இந்தப் பஞ்சாயத்து நீடித்தாலும் கூட சபாநாயகர் அப்பாவு இதன் மீது எந்த முடிவும் எடுக்கவில்லை.
இதனால் அருகருகே அமர்ந்தாலும் கூட ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக்கொள்ள கூட மாட்டார்கள். இதனை திமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்குள் கிண்டல் செய்து கொள்வார்கள்.
இந்த முறையும் ஒரு வேளை தனது கோரிக்கையை சபாநாயகர் ஏற்காவிட்டால் சட்டசபை கூட்டத் தொடரை புறக்கணிக்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications