Tamil nadu Assembly: யாருடைய கவனத்தை ஈர்க்க இப்படி பேசுகிறீர்கள்? நிர்மல் குமாரை கண்டித்த சபாநாயகர்
சென்னை: கர்நாடகாவில் கொல்லப்பட்ட 3 தமிழர்கள் விவகாரம் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய அமைச்சர் நிர்மல்குமாரை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கண்டித்தார். "யாருடைய கவனத்தை ஈர்க்க நீங்கள் பேசுகிறீர்கள் என எனக்கு தெரியவில்லை" என்று சபாநாயகர் கண்டனம் தெரிவித்தார்.
கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகரை ஒட்டிய வனப்பகுதிக்குள் தங்களது கால்நடைகளை தேடிச் சென்ற மூன்று தமிழர்களை, மான் வேட்டைக்கு வந்ததாக கருதி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஆந்திராவில் 2015 ஆம் ஆண்டு முன்பு சேஷாசலம் வனப்பகுதிக்குள் செம்மரங்களை கடத்தியதாக 20 தமிழர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இதுவரை இந்த 10 ஆண்டுகளில் 23 தமிழர்கள் கர்நாடகா, ஆந்திரா மாநில அரசுகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து தமிழக சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன் மீது அதிமுக, பாமக, திமுக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் பேசின.
இந்த தீர்மானத்தை முதலில் கொண்டு வந்த திமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் பேசுகையில், கர்நாடகாவில் கால்நடை தேடிச்சென்ற 3 தமிழர்கள் கர்நாடக வனத்துறையால் போலி என்கவுண்ட்டர் செய்யப்பட்டுள்ளனர். அப்பாவி விவசாயிகளை வனத்துறை சுட்டுக்கொன்றது மனித உரிமை மீறல். பாதிக்கப்பட்ட தமிழர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலையும் நிவாரணமும் வழங்க வேண்டும் என்றார்.
இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் தனது கால்நடை தேடிச்சென்ற 3 தமிழர்கள் சுட்டுக்கொலை, ஒருவர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். மான் வேட்டையில் ஈடுபட்டதாக 3 தமிழர்களை குற்றம்சாட்டி கொன்றுள்ளது கர்நாடக வனத்துறை.
2 மாநில எல்லை பகுதியில் கொலை நடைபெற்றுள்ளதால் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை. வனத்துறை சுட்டுக் கொன்ற தமிழர்களுக்கு ரூ 5 லட்சம் மட்டுமே இழப்பீடு அறிவிப்பு, தமிழக அரசு கூடுதலாக நிதி தர வேண்டும்.
இது போன்ற சம்பவங்கள் மீண்டும் தொடராத வகையில் கர்நாடகா அரசுடன் தமிழக அரசு பேச வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அது போல் பாமக எம்எல்ஏ கணேஷ் குமார் பேசுகையில், கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். தற்காப்புக்காக கொலை, இதில் உரிமை மீறல் ஏதும் இல்லை எந கர்நாடகா வனத்துறை அமைச்சர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். தமிழர்களுக்கான நியாயம், நிவாரணம், நீதி கிடைக்க சிபிஐ விசாரணை நடத்த வேண்டியது அவசியம். பாதிக்கப்பட்ட தமிழர்களின் குடும்பத்தினருக்கு ரூ 1 கோடி நிதி வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில் இதற்கு பதிலளிக்க நிர்மல் குமார் எழுந்தார். அப்போது உலகம் முழுவதும் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களின் ஒரே நம்பிக்கை விஜய் என கூறிவிட்டு திமுகவை விமர்சிக்கும் வகையில் ஒரு கருத்தை தெரிவித்தார்.
அதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே குறுக்கிட்ட சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், அமைச்சர் நிர்மல் குமாரை கண்டித்தார். அப்போது அவர், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை ஒட்டி மட்டுமே பேச வேண்டும். தேவையற்றதை பேச அனுமதிக்க மாட்டேன். இது சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம், நீங்கள் யாருடைய கவனத்தை ஈர்க்க இப்படி பேசுகிறீர்கள் என எனக்கு புரியவில்லை என சபாநாயகர் கோபத்துடன் நிர்மல் குமாரை கண்டித்தார்.


Click it and Unblock the Notifications
