வீக்கெண்ட்.. வெளியூர் செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கம்! சென்னையில் இருந்து எத்தனை ஸ்பெஷல் பஸ்கள்?
சென்னை: வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். வரும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கும், பிற பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசின் போக்குவரத்து கழகம் சார்பாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. வார விடுமுறை நாட்களையொட்டி கூடுதல் பயணிகள் வெளியூருக்கு பயணிப்பார்கள் என்ற காரணத்தால் வாரந்தோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் எந்த, எந்த இடங்களில் இருந்து எந்த ஊருக்கு எத்தனை பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என்பது தொடர்பாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாளை 09/08/2024 (வெள்ளிக்கிழமை) 10/08/2024 (சனிக்கிழமை) 11/08/2024 (ஞாயிறு) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம். கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 09/08/2024 (வெள்ளிக்கிழமை) அன்று 275 பேருந்துகளும், 10/08/2024 (சனிக்கிழமை) 315 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் சென்னை கோயம்பேட்டிலிருந்து ஓசூர், பெங்களூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய இடங்களுக்கு 08/08/2024 வெள்ளிக் கிழமை அன்று 55 பேருந்துகளும் 09/08/2024 சனிக்கிழமை அன்று 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாதவரத்தில் இருந்து ஆகஸ்ட் 9 அன்று அன்று 20 பேருந்துகளும் ஆகஸ்ட் 10 அன்று 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 8,739 பயணிகளும் சனிக்கிழமை 3,414 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 8,107 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications