தலைமறைவான பல்லாவரம் எம்எல்ஏ மகன், மருமகளை பிடிக்க 3 தனிப்படை.. பெங்களூர் விரையும் போலீசார்!
சென்னை: 18 வயது பணிப்பெண்ணை கொடுமைப்படுத்திய விவகாரத்தில், தலைமறைவான பல்லாவரம் எம்.எல்.ஏவின் மகன், மகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த 18 வயதான 12ஆம் வகுப்பு படித்த இளம்பெண் ஒருவரை, குடும்பச் சூழல் காரணமாக அவரது பெற்றோர் சென்னை பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏவான இ.கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் வீட்டில், வீட்டு வேலை செய்ய 7 மாதங்களுக்கு முன்னர் அனுப்பி வைத்துள்ளனர். திருவான்மியூர், 7-வது அவென்யூவில் வசித்து வந்த ஆண்ட்ரோவும், அவரது மனைவி மெர்லினாவும் அந்த இளம்பெண்ணை வேலை வாங்குகிறோம் என்ற பெயரில் கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இளம்பெண்ணின் கை, கன்னம், முதுகு உட்பட பல்வேறு இடங்களில் சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளனர். இதனால், வீட்டில் இருந்து கிளம்பிய பெண்ணை மிரட்டி கட்டாயப்படுத்தி தங்க வைத்து மேலும் கொடுமை செய்துள்ளனர். பொங்கலுக்கு ஊருக்குச் சென்ற அந்தப் பெண், பெற்றோரிடம் நிலையைக் கூறி கதறி அழுதுள்ளார். இதையடுத்து, மருத்துவமனை சென்ற நிலையில், மருத்துவமனையில் இருந்து நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, சம்பந்தப்பட்ட இளம்பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இந்நிலையில், சென்னை திருவான்மியூர் மகளிர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
போலீசார் பதிவு செய்துள்ள எஃப்.ஐ.ஆரில், தனக்கு சமைக்கவும், துணி துவைக்கவும் தெரியாது என்று சொன்னால் பச்சை மிளகாயை கடித்து சாப்பிட சொல்லி துன்புறுத்தினார்கள். நான் என் அம்மாவை பார்த்து 7 மாதங்கள் ஆகிவிட்டன என்று சொன்னதற்கு ஆடைகளை கழற்றி அடித்து துன்புறுத்தினார்கள் என அந்த இளம்பெண் வாக்குமூலம் அளித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இளம்பெண்ணை கொடுமைப்படுத்திய எம்.எல்.ஏவின் மகன் மற்றும் மருமகள் தலைமறைவாகியுள்ளனர். அவர்கள் இருவரையும் கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் இருவரும் பெங்களூர் சென்றிருப்பதாக தகவல் கிடைத்த நிலையில், தனிப்படை போலீசார் பெங்களூருக்கு விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications