ராஜா ராஜா தான்.. சிறப்பு தபால் தலை வெளியீடு.. இளையராஜாவுக்கு ஆஸ்திரேலியாவில் கிடைத்த கவுரவம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய சினிமாவின் இசை உலகில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தனக்கென தனி முத்திரை பதித்த இசைஞானி இளையராஜாவுக்கு ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் சிறப்பு கவுரவம் வழங்கப்பட்டுள்ளது. திரையுலகில் அவரது 50 ஆண்டுக்கால பயணத்தை பாராட்டும் வகையில் சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் பண்ணைப்புரம் கிராமத்தில் தொடங்கிய இளையராஜாவின் இசை பயணம் இப்போது ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் வரை சென்றுள்ளது. ஏற்கனவே அவரது இசைக்கு பல்வேறு சர்வதேச அங்கீகாரங்கள் கிடைத்துள்ள நிலையில், அதில் இந்த தபால் தலையும் இணைந்துள்ளது.

Ilaiyaraaja Australia

இளையராஜா

கடந்த 50 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் இளையராஜா தவிர்க்கவே முடியாத ஒரு ஆளுமையாக இருக்கிறார். 1,000க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள அவர், 7,000க்கும் அதிகமான பாடல்களை உருவாக்கியுள்ளார். அவரது இசை வெறும் சினிமா இசையாக மட்டும் நின்றுவிடாமல், பல தலைமுறைகளை சேர்ந்த மக்களின் உணர்வுகளோடும் வாழ்க்கை அனுபவங்களோடும் இணைந்துள்ளது.

இசை பயணம்

1970களின் பிற்பகுதி மற்றும் 1980களில் இளையராஜா திரைப்பட இசையில் பல புதிய விஷயங்களை அறிமுகப்படுத்தினார். சிக்கலான இந்திய ராகங்களையும், தமிழ்நாட்டின் நாட்டுப்புற இசையின் தனித்துவமான தாளங்களையும் சிம்பொனி இசைக்கோர்வையுடன் இணைத்தார். இதன் மூலம் தென்னிந்திய திரைப்படங்களில் சிம்பொனி இசைக்குழுவின் பிரம்மாண்டத்தை கொண்டு வந்தார். தனது தனித்துவமான இசை அமைப்புகள் மூலம் திரைப்பட பாடல்களிலும் பின்னணி இசையிலும் புதுமையை கொண்டு வந்தார்,

அவரது பின்னணி இசை என்பது சினிமாவில் வெறும் பேக் கிரவுண்டாக மட்டும் இல்லாமல்.. திரைப்படத்தின் உணர்வை மேலும் ஆழப்படுத்தும் முக்கியமான அம்சமாக மாறியது. சில படங்களில் அவரது இசையே கதையின் உணர்வுப்பூர்வமான ஆன்மாவாகவும் கூட மாறியிருந்தது.

தபால் தலை

அவரது திரை பயணத்தை பாராட்டி இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளிவிலும் அவருக்கு பல விருதுகள், அங்கீகாரங்கள், கவுரவங்கள் தொடர்ந்து குவிந்து வருகிறது. அப்படி தான் இப்போது ஆஸ்திரேலிய நாடாளுமன்றமும் அவரை கவுரவித்துள்ளது. இளையராஜாவின் 50 ஆண்டு இசை பயணத்தை பாராட்டி சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது.

இளையராஜாவின் இசை இந்திய எல்லைகளை கடந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த ரசிகர்களையும் சென்றடைந்துள்ளது. அவரது இசை உலகம் முழுவதும் உள்ள இசை ரசிகர்களை ஈர்த்து வருவதையே இது மீண்டும் காட்டுகிறது. இந்த தபால் தலையை வெளியிடும் நிகழ்வு ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நடந்த நிலையில், அதில் இளையராஜாவும் கலந்து கொண்டார். அப்போது தான் கடந்து வந்த பாதை குறித்து சில உணர்வுப்பூர்வமான நினைவுகளை அவர் பகிர்ந்து கொண்டார்.

காலம் கடந்து நிற்கும்

இன்றைய மியூசிக் உலகில் இசையை தொழில்நுட்பம் தான் பிரதானமாக இருக்கிறது. டிரெண்டிங், ரீல்ஸ், லூப் மோடில் இருப்பது ஆகியவற்றை மனதில் வைத்த ஒவ்வொரு பாடலும் தயாரிக்கப்படுகிறது. இந்த பாடல்கள் ஹிட் அடித்து பல மில்லியன் வியூஸ்களை பெற்றாலும் கூட அவை மக்கள் மனதில் சில மாதங்களுக்கு மேல் நீடிப்பதில்லை.

ஆனால், இளையராஜாவின் பாடல்கள் இன்றும் தொடர்ந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. காலத்தையும் கடந்து பல்வேறு தலைமுறையினர் மத்தியிலும் மிக பெரிய தாக்கத்தை இளையராஜாவின் பாடல்கள் ஏற்படுத்தியுள்ளன. இன்றும் கூட ஒவ்வொரு நாளும் இளையராஜாவின் பாடல்களை கேட்கும் பல கோடி ரசிகர்கள் இருக்கவே செய்கிறார்கள்.

சினிமாவை தாண்டி இசை உலகில் முடி சூடாத சக்கரவர்த்தியாக இருக்கும் இளையராஜாவை கவுரவிக்கும் விதமாகவே ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் இந்த சிறப்பு தபால் தலையை இப்போது வெளியிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+