Exclusive: மக்களுக்காக நிச்சயம் திமுக அமைச்சர்களை சந்திப்பேன்; மனம் திறக்கும் வானதி சீனிவாசன் MLA..!
சென்னை: கோவை தெற்கு தொகுதி வளர்ச்சிப் பணிகளுக்காகவும், மக்களுக்காகவும் திமுக அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை விடுப்பதில் தனக்கு எவ்வித தயக்கமும் கிடையாது எனக் கூறுகிறார் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
டெல்லியில் பாஜக தேசிய மகளிரணி நிர்வாகிகள் கூட்டத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய அவர் ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்திருந்தார்.

அதன் விவரம் பின்வருமாறு;
கேள்வி: தேர்தலில் உங்கள் தொகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தொடங்கிவிட்டீர்களா..?
பதில்: சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்று முதல் ஒரு மாதம் கொரோனா தடுப்பு பணிகளில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டியிருந்தது. ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குவது, அரசு மருத்துவமனைகளை ஆய்வு செய்வது, என முதல் மாதம் முழுவதுமே கொரோனா தடுப்பில் மட்டுமே கவனம் செலுத்தினேன். அதற்கு பிற்கு இப்போது கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட அனைத்து இடங்களுக்கும் பயணம் செய்து வருகிறேன். குடிநீர், தெருவிளக்கு, சாலை, கழிவுநீர் கால்வாய், என இந்த நான்கு அடிப்படை வசதிகளை மட்டும் தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். பிறகு தான் கட்டமைப்பெல்லாம். தேர்தலில் நான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் எனது நடவடிக்கைகளை தொடங்கிவிட்டேன். நான் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மக்களிடம் மனுக்களை பெற்று அதனை பின்பற்றி தீர்வு பெற்றுக் கொடுப்பதற்காக 4 பேரை பணியில் அமர்த்தியிருக்கிறேன்.
கேள்வி: தொகுதி பணிகளுக்காக திமுக அமைச்சர்களை சந்திப்பீர்களா..?
பதில்: எந்த பிரதமர் தமிழகத்திற்குள் வரக்கூடாது என கருப்புபலூன் கட்டி எதிர்ப்பு தெரிவித்தாரோ, அதே பிரதமரிடம் நேரம் கேட்டு வாங்கி நேரில் சென்று சந்தித்து வந்திருக்கிறார் ஸ்டாலின். அப்படியிருக்கும் போது எனது தொகுதி மேம்பாட்டுக்காக திமுக அமைச்சர்களை சந்தித்து கோரிக்கைகளை முன்வைக்க நான் ஏன் தயங்கவேண்டும். நகர்புறவளர்ச்சித்துறைக்கும் கோவைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால், பல்வேறு கோரிக்கைகள் இருக்கின்றன. விரைவில் அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து தொகுதி வளர்ச்சி திட்டங்கள் பற்றி பேசுவேன். இதேபோல் சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கிய பிறகு அனைத்துத் துறை அமைச்சர்களையும் சந்தித்து கோவை தெற்கு தொகுதிக்கு தேவையானதை முறையிடுவேன்.
கேள்வி: அண்மையில் பிரதமரை நீங்கள் சந்தித்தீர்கள், அப்போது அவரிடம் என்ன பேசினீர்கள் -அவர் உங்களிடம் என்ன பேசினார்..?
பதில்: நான் உட்பட தமிழக பாஜக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பிரதமர் மோடியை சந்தித்து பேசினோம். அப்போது தமிழக அரசியல் சூழல் குறித்து கேட்டார். தமிழகத்தில் அமைந்துள்ள புதிய அரசின் செயல்பாடுகள் குறித்தும் மக்கள் பணிகளில் திமுக எப்படி செயல்படுகிறது எனக் கேட்டார். நாங்கள் எங்கள் கருத்துக்களை கூறினோம், அவர் அதனைக் கேட்டுக்கொண்டார். தமிழகத்திற்கான தொலைநோக்குத் திட்டங்கள் குறித்து ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா என பிரதமர் எங்களிடம் கேட்டார். தமிழகத்தில் சுற்றுலாதுறையை மேம்படுத்துவது உட்பட இன்னும் சில தொலைநோக்குத் திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறியிருக்கிறோம்.

கேள்வி: உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட தயாராக இருக்கிறதா..?
பதில்: எந்த சூழல் எப்படி அமைகிறதோ அதற்கேற்ப அரசியல் நகர்வுகளை மேற்கொள்ளும் திறன் பாஜகவுக்கு உள்ளது. எந்தச் சூழலையும் எதிர்கொள்ள பாஜக தயாராக உள்ளது.
கேள்வி: கோவைக்கு எய்ம்ஸ் வேண்டும் என பிரதமரிடம் முதலமைச்சர் கோரிக்கை விடுத்ததை எப்படி பார்க்கிறீர்கள்..?
பதில்: கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக முதலமைச்சர் முன்வைத்துள்ள இந்த கோரிக்கையை வரவேற்கிறேன். ஆனால் அதேநேரத்தில் கோவைக்கு இ.எஸ்.ஐ. மருத்துவமனையை கொடுத்தது பிரதமர் மோடி தான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இ.எஸ்.ஐ. மருத்துவமனையானது அனைத்து வித தொழில்நுட்ப வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இன்று அவரவர் மாவட்டங்களிலேயே மக்கள் மருத்துவம் பார்த்துக் கொள்ளும் வகையில் தமிழகத்திற்கு புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகளை வழங்கியிருக்கிறார் பிரதமர் மோடி.
கேள்வி: மத்திய அரசை ஒன்றிய அரசு என்றழைப்பதில் பாஜகவுக்கு என்ன பிரச்சனை..?
பதில்: இதுவரை மத்திய அரசு என்று அழைத்து வந்த திமுக, இப்போது புதிதாக ஒன்றிய அரசு என அழைப்பதன் உள்நோக்கம் என்ன என்ற கேள்வி எழுகிறது. ஆரம்பத்திலிருந்தே ஒன்றிய அரசு என கூறிக்கொண்டு வந்திருந்தால் இதை இப்போது யாரும் கேட்டிருக்கப் போவதில்லை. திடீரென இந்த வார்த்தை பிரயோகம் மூலம் மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்தையோ, மதிப்பையோ குறைப்பதாக திமுக நினைத்தால் அதற்கு எங்கள் எதிர்வினையை காட்டுவோம். ரோஜாவை நீங்கள் எந்தப் பெயர் வைத்து அழைத்தாலும் அதன் மலரின் வாசம் மாறப்போவதில்லை.












Click it and Unblock the Notifications