தீபாவளிக்கு ஸ்வீட் நியூஸ் கொடுத்த ரயில்வே.. தென்மாவட்ட மக்களே நோட் பண்ணுங்க.. முக்கிய அப்டேட்
சென்னை: தீபாவளி நெருங்கி வரும் நிலையில் சொந்த ஊர்களுக்குச் செல்லும் தென்மாவட்ட மக்கள் பயனடையும் வகையில், சென்னையில் இருந்து கன்னியாகுமரி, செங்கோட்டை, மங்களூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது.
இந்தியாவில் தீபாவளி ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். புத்தாடை, இனிப்பு, பட்டாசு என ஊரே களைகட்டும். இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் வேலை, தொழில், கல்வி உள்ளிட்டவற்றுக்காக வசித்து வருபவர்கள் தீபாவளியை சொந்த ஊர்களில் கொண்டாடுவது வழக்கம்.

பண்டிகையையொட்டி அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரயில்கள் எந்தெந்த நேரங்களில் எந்தெந்த பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சார்பில் கூறியுள்ளதாவது: சென்னை சென்ட்ரலில் இருந்து கன்னியாகுமரிக்கு அக்டோபர் 29 ஆம் தேதி, நவம்பர் 5 ஆம் தேதி ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் எண்: 06001 இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் சென்னை சென்ட்ரலில் இரவு 11.45 மணிக்கு புறப்படும்.
அக்டோபர் 30 ஆம் தேதி அதாவது மறுநாள் காலை 12.15 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையவுள்ளது. மறுமாா்க்கமாக கன்னியாகுமரியில் இருந்து அக்டோபர் 30 ஆம் தேதி, நவம்பர் 6 ஆம் தேதி ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.45 மணிக்கு சிறப்பு ரயில் எண்: 06002 இயக்கப்படவுள்ளது. இந்த சிறப்பு ரயில் சென்னை எழும்பூா், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா், நாகா்கோவில் வழியாக இயக்கப்படவுள்ளது.
அதேபோல, செங்கோட்டைக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து செங்கோட்டைக்கு அக்டோபர் 30 ஆம் தேதி, நவம்பர் 6 ஆம் தேதி ஆகிய தேதிகளில் முழுவதும் ஏசி பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில் எண்: 06005 இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் சென்னை சென்ட்ரலில் இரவு 7 மணிக்கு புறப்படுகிறது. மறுநாள் காலை 9.20 மணிக்கு செங்கோட்டைக்கு ரயில் சென்றடையும். மறுமாா்க்கமாக செங்கோட்டையில் இருந்து அக்டோபர் 31 ஆம் தேதி, நவம்பர் 7 ஆம் தேதி ஆகிய தேதிகளில் இரவு 7.30 மணிக்கு சிறப்பு ரயில் எண்: 06006 இயக்கப்படுகிறது.
இந்த சிறப்பு ரயில் பெரம்பூா், திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூா், தென்காசி வழியாக இயக்கப்படவுள்ளது. இதேபோல, தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு அக்டோபர் 28 ஆம் தேதி, நவம்பர் 4, 11 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் எண்: 06049 இயக்கப்படுகிறது. இந்த ரயில் தாம்பரத்தில் நள்ளிரவு 12.05 மணிக்கு புறப்பட்டு பகல் 12.15 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையவுள்ளது. மறுமாா்க்கமாக கன்னியாகுமரியில் இருந்து அக்டோபர் 29 ஆம் தேதி, நவம்பர் 5, 12 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.35 மணிக்கு சிறப்பு ரயில் எண்: 06050 இயக்கப்படுகிறது.
இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா், நாகா்கோவில் வழியாக இயக்கப்படும். அதேபோல, கேரளம் மற்றும் கா்நாடகத்துக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து கா்நாடக மாநிலம், மங்களூருக்கு நவம்பர் 2ஆம் தேதி இரவு 11.50 மணிக்கு சிறப்பு ரயில் எண்: 06037 இயக்கப்படும்.
மறுமாா்க்கமாக மங்களூரில் இருந்து சென்னைக்கு நவம்பர் 3 ஆம் தேதி மாலை 6 மணிக்கு சிறப்பு ரயில் எண்: 06038 இயக்கப்படும். இந்த ரயில் பெரம்பூா், திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, பாலக்காடு, ஷோரனூா், கோழிக்கோடு, கண்ணூா், காசா்கோடு வழியாக இயக்கப்படவுள்ளது.
கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து கா்நாடக மாநிலம் பெங்களூருக்கு நவம்பர் 4 ஆம் தேதி மாலை 6.05 மணிக்கு முன்பதிவில்லா பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில் எண்: 06039 இயக்கப்படும். மறுமாா்க்கமாக பெங்களூரில் இருந்து நவம்பர் 5 ஆம் தேதி பகல் 12.45 மணிக்கு சிறப்பு ரயில் எண்: 06040 இயக்கப்படும். இந்த ரயில் கொல்லம், காயன்குளம், செங்கனூா், கோட்டயம், எா்ணாகுளம், திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படுகிறது.
கன்னியாகுமரி, செங்கோட்டை, மங்களூருக்கு இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் முன்பதிவு தொடங்கியுள்ளதாக ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications