ஐஐஎம், என்ஐடியில் படிச்சவரா இப்படி? கரூர் சம்பவம் குறித்து வதந்தி பரப்பி கைதான இளைஞரின் ஷாக் பக்கம்
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வதந்தி பரப்பிய 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் கைது செய்யப்பட்ட 3 பேர் குறித்த தகவல்கள் அதிர்ச்சியடைய வைத்துள்ளன. வதந்தி பரப்பி கைதானவர்களில் ஒருவர் என்.ஐ.டியில் எம்.டெக், ஐஐஎம்மில் எம்.பி.ஏ படித்தவர் எனத் தெரியவந்துள்ளது.
தவெக தலைவர் விஜய் கடந்த சனிக்கிழமை நாமக்கல் மற்றும் கரூரில் பரப்புரை மேற்கொண்டார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த துயரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மனித உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல், பொது அதிகாரியின் உத்தரவுக்கு கீழ்படியாமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூரில் நடைபெற்ற பிரச்சார கூட்ட நெரிசல் பலி சம்பவம் தொடர்பாக பல்வேறு வதந்திகளும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. கரூர் துயர சம்பவம் தொடர்பாக எந்த வதந்திகளையும் சமூக வலைத்தளத்தில் பரப்ப கூடாது என்றும், உரிய விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பும் வகையில் கருத்துகளை பதிவு செய்த சமூக வலைதளங்களில் கணக்குகள் வைத்துள்ள 25 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கரூர் துயர சம்பவம் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய 3 நபர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த பாஜக மாநில செயலாளர் சகாயம் (வயது 38), தவெக உறுப்பினர் சிவனேசன் (36), தவெக நிர்வாகியான ஆவடியைச் சேர்ந்த சரத்குமார் (32) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை கைது செய்ய முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பி கைது செய்யப்பட்ட சரத்குமார், சகாயம் ஜேம்ஸ், சிவனேஸ்வரனை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து 3 பேரும் போலீஸ் காவலுடன் அழைத்து செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 3 பேர் குறித்த தகவல்கள் அதிர்ச்சியடைய வைத்துள்ளன. வதந்தி பரப்பி கைதானவர்களில் சரத்குமார், ஆவடியில் வசித்து வரும் யூடியூபர். சிவனேசன் என்பவர் என்.ஐ.டி கோழிக்கோட்டில் எம்.டெக், கோழிக்கோடு ஐஐஎம்மில் எம்.பி.ஏ படித்தவர் எனத் தெரியவந்துள்ளது. 30 வயதான இவர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர். உயரிய கல்வி நிறுவனங்களில் படித்து பட்டங்கள் பெற்றவர், கட்சி அபிமானத்தில் வதந்தி பரப்பி கைதாகியுள்ளதை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இதற்கிடையே பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் யாரும் சமூக வலைதளங்களில் தகவல்களை பதிவிட வேண்டாம் என்றும், மீறி செயல்படும் நபர்கள் மீது உரிய கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் பத்திரிகையாளரும், யூடியூபருமான பெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டார். காவல்துறை எச்சரிக்கையையும் தொடர்ந்து அவர் கரூர் சம்பவம் தொடர்பாக அவதூறு கருத்துகளை பதிவிட்டதால் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும், நீதிமன்ற உத்தரவு குறித்து அவதூறு பரப்பியதாக யூடியூபர் மாரிதாஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications