ஸ்ரீதர் வேம்பு ஸ்ட்ரைட்டா உதயநிதி ஸ்டாலின் கிட்டயே கேள்வி.. தர்மத்தின் அர்த்தத்தை சொல்லுங்களேன்
சென்னை: திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான அரசியல் மோதல் தற்போது தத்துவார்த்த ரீதியிலான விவாதமாக மாறியுள்ளது.. காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை விமர்சித்த உதயநிதிக்கு, தர்மம் என்ற சொல்லின் ஆழமான பொருளை ஆராயுமாறு ஸ்ரீதர் வேம்பு அறிவுறுத்தியுள்ளார்.. செவ்வியல் தமிழ் இலக்கியங்களில் பொதிந்துள்ள அறநெறிகளை உணர வேண்டும் என்ற இந்த சவாலானது, தமிழக அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..!!
சென்னை அரசியல் களத்தில் தற்போது புதியதொரு விவாதம் எழுந்துள்ளது. திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள விரிசல், வெறும் அரசியல் விமர்சனங்களாக மட்டும் நின்றுவிடாமல், தமிழ் மொழியின் ஆழமான சொற்களான 'தர்மம்' என்ற சொல்லின் பொருளை நோக்கிய தத்துவார்த்த விவாதமாக மாறியுள்ளது.

திமுக இளைஞரணி கூட்டம்
திமுக இளைஞரணி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட விவகாரம், ஸோகோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவின் கவனத்திற்குச் சென்றதும், அவர் உதயநிதி ஸ்டாலினை நோக்கி முன்வைத்துள்ள கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
திமுக இளைஞரணி தனது ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸைக் குறித்து மிகக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியிருந்தது. குறிப்பாக, மற்றவர்களின் உழைப்பைச் சுரண்டி வாழும் ஒரு சக்தியாகவும், தேவைக்கேற்ப கொள்கைகளைத் துறந்து துரோகம் இழைப்பதாகவும் காங்கிரஸ் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
அறமில்லாத செயல்
முதுகில் குத்திவிட்டது, சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டது என்றெல்லாம் அதிருப்தி குரல்கள் வெடித்துள்ளதாக தெரிகிறது.. காங்கிரஸின் இந்தச் செயல்பாடுகளை "அறமில்லாத" செயல் என்று வர்ணித்த திமுக, அத்தகைய செயல்களுக்குத் தங்களது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்வதாகவும், இனிமேல் எப்போதுமே காங்கிரசுடன் கூட்டணி கிடையாது என்றும் தீர்மானித்திருந்தது.
அதைவிட முக்கியமாக, அடுத்தவர் உழைப்பில் ஒட்டுண்ணியாய் உண்டு கொழுப்பதும், தன் தேவைக்கேற்ப கொள்கை மறந்து துரோகம் புரிவதும் காங்கிரசுக்குப் புதிதில்லைதான். சொந்த உழைப்பில் ஒருநாளும் வெற்றி பெற முடியாமல், நம்பியவர்களுக்கு எல்லாம் துரோகமிழைக்கும் அறமில்லாத காங்கிரஸ் கட்சிக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்' என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஸ்ரீதர் வேம்பு திமுகவுக்கு கண்டனம்
இந்த கருத்துக்கள்தான் தற்போதைய விவாதத்திற்கு அடிப்படையாக அமைந்திருக்கிறது. இதற்கு ஏற்கனவே மாணிக்கம் தாகூர், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் எதிர்வினையாற்றினர்.
இப்போது ஸ்ரீதர் வேம்பு தனது சோஷியல் மீடியாவில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார்... திமுக காங்கிரஸை "தர்மம் இல்லாத கட்சி" என்று சாடுவதை மையமாக வைத்து, "தர்மம்" என்ற வார்த்தையின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொள்ளுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
ஸோகோ நிறுவனத்தின் ஸ்ரீதர் வேம்பு விடுத்துள்ள பதிவில், "திமுக, காங்கிரஸ் கட்சியை தர்மம் இல்லாத காங்கிரஸ் கட்சி என்று அழைக்கிறது. இதன் பொருள் 'தர்மம் இல்லாத காங்கிரஸ் கட்சி' அல்லது 'தர்மம் அற்ற காங்கிரஸ் கட்சி' என்பதாகும்.
தர்மம் என்ற தமிழ் வார்த்தையின் அர்த்தம்
இந்த தர்மம் என்ற தமிழ் வார்த்தையின் அர்த்தம் என்ன என்பதை ஆராயுமாறு உதயநிதியை நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். அவருக்கு ஒருவேளை தெளிவு கிடைக்கலாம். செவ்வியல் தமிழ் இலக்கியம் அனைத்திலும் பரவியிருக்கும் சனாதன தர்மத்தின் மதிப்பையும் அவர் உணரக்கூடும். தர்மம் வெல்லும்" என்று ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு ஸ்ரீதர் வேம்பு விடுத்துள்ள இந்த அழைப்பு, திமுகவின் தற்போதைய அரசியல் நிலைப்பாட்டைச் சாடுவது போன்ற தோற்றத்தைக் கொண்டிருந்தாலும், இதன் பின்னணியில் உள்ள 'தர்மம்' குறித்த விவாதம் பல பரிமாணங்களைக் கொண்டுள்ளது.
அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் விமர்சிப்பது ஜனநாயகத்தில் இயல்பானது என்றாலும், அந்த விமர்சனங்கள் பயன்படுத்தும் சொற்களின் ஆழத்தையும், அதன் தார்மீக அர்த்தங்களையும் ஆராய வேண்டும் என்பது ஸ்ரீதர் வேம்புவின் வாதமாக இருக்கிறது.
சென்னையில் தொடங்கிய இந்த விவாதம், எதிர்காலத்தில் அரசியல் மேடைகளில் தார்மீக விழுமியங்கள் பற்றிய ஆரோக்கியமான விவாதங்களுக்கு வழிவகுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..!!












Click it and Unblock the Notifications