ஸ்டாலினின் சீக்ரெட் மெசேஜ் .. திமுக கூட்டணியில் பிளவா? ஒரே அடியில் முற்றுப்புள்ளி.. கவனிச்சீங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்மைக்காலமாக திமுக கூட்டணிக்குள் விரிசல் ஏற்படுவது போல தோற்றங்கள் நிலவி வந்த நிலையில், இன்று அதற்கு பெரும் தலைகள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். 2026 சட்டசபை தேர்தலையொட்டி பல்வேறு யூகங்கள் நிலவிய நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினும், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியும் அன்பைப் பரிமாறி, மறைமுக மெசேஜ் கொடுத்துள்ளனர்.

2019 ஆம் ஆண்டு முதல் திமுகவுடன் இணக்கமாக இருந்து வரும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள், சமீபகாலமாக மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு எதிராகப் பேசத் தொடங்கியது சலசலப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில், பழனியில் நடந்த முருகன் மாநாட்டில் கல்விக்கு காவி நிறம் பூசப்பட்டதாக திமுக மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் குற்றம்சாட்டின.

mk stalin dmk rahul gandhi

கூட்டணிக்குள் சலசலப்பு: முன்னதாக, சுதந்திர தினத்துக்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்பாடு செய்திருந்த தேநீர் விருந்தை திமுகவின் கூட்டணி கட்சியினர் புறக்கணித்தனர். ஆனால் இந்த நிகழ்வில் அரசு சார்பாக முதல்வர் ஸ்டாலினும் பல்வேறு அமைச்சர்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் ஆளுநருடன் நெருக்கமாக காணப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்.

அதைத்தொடர்ந்து, சென்னையில் நடந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று, நாணயத்தை வெளியிட்டார். இந்த விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல பாஜக தலைவர்கள் பங்கேற்றனர்.

திமுக அணி: 2019 முதல் ஒவ்வொரு தேர்தலிலும் திமுக வெற்றி பெறுவதற்கு கூட்டணி கட்சிகள் பலம் முக்கியமானதாக இருந்தது. 2019 லோக்சபா தேர்தலில் 38 தொகுதிகளை தட்டிப்பறித்த இந்த கூட்டணி 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டது. இந்த கூட்டணியின் அசுர பலத்தால் திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது.

2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் விடாமல் இறுக்கமாக பிணைக்கப்பட்ட இந்த கூட்டணி தமிழகம் மற்றும் புதுவையில் 40க்கு 40 தொகுதிகளை கைப்பற்றியது. எதிர்த்து போட்டியிட்ட அதிமுக மற்றும் பாஜக பல இடங்களில் டெபாசிட் இழந்தன. தற்போது நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு திமுக களம் இறங்கியுள்ளது.

இந்த சூழ்நிலையில், தற்போது திமுகவின் கூட்டணி கட்சிகள் அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. கலைஞர் நூற்றாண்டு நாணயம் வெளியீட்டு விழாவில் பாஜகவும் திமுகவும் கை கோர்த்து சென்றதை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ரசிக்கவில்லை. முருகன் மாநாடு விவகாரமும் கூட்டணிக்குள் சலசலப்புகளை ஏற்படுத்தியது.

mk stalin dmk rahul gandhi

குறுக்கே விஜய்: இந்நிலையில், 2026 தேர்தலுக்கு விஜய் களத்தில் இறங்குகிறார். திமுகவுக்கு எதிரான அணியையே விஜய் கட்டமைக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றன. அண்மையில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவராக தேர்வான ராகுல் காந்திக்கு விஜய் வாழ்த்து தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியுடன் விஜய் இணக்கத்தை விரும்புகிறாரா என்ற விவாதங்கள் எழுந்தன. விஜய்க்கு ராகுல் காந்தியும் நன்றி தெரிவித்தார்.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் நேரம் வந்துவிட்டது என்று விசிக மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்களும் நம்புகிறார்கள். காங்கிரஸ் கட்சியும் விஜய் பக்கம் நகரலாம் என்ற பேச்சுகளும் எழுந்து உள்ளன. விஜய் அரசியல் பயணத்தை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், சமீப நாட்களாக விஜய் யாருடன் கூட்டணி அமைப்பார் என அரசியல் வட்டாரத்தில் விவாதங்கள் நடந்து வருகின்றன.

தர்ம சங்கடம்: இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை தொகுதி எம்.பி கார்த்தி சிதரம்பரம் திடீரென சென்னை மேயர் பிரியாவிற்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், கூவம் ஆறு மறுசீரமைப்பு திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கேட்டுக்கொண்டார். இது திமுக - காங்கிரஸ் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. கூட்டணி கட்சியைச் சேர்ந்தவரே ஆளுங்கட்சியை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கும் விதத்தில் நடந்து கொள்ளலாமா என விமர்சனங்கள் எழுந்தன.

காங்கிரஸ் கட்சியை அதிமுக கூட்டணிக்கு கொண்டு வர எடப்பாடி பழனிசாமி முயற்சிப்பதாகவும் கூறப்பட்டது. காங்கிரஸ் - அதிமுக கூட்டணி அமைந்தால், அது திமுகவுக்கு மிகப்பெரும் சிக்கலாக இருக்கும், பாஜகவுக்கு எதிரான ஓட்டுகளை திமுக பெறுவது தடுக்கப்படும் என்றெல்லாம் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எண்ட் கார்டு: இப்படியான சூழலில் தான் பெரும் தலைகள், இந்த கூட்டணி சர்ச்சைகளுக்கு எண்ட் கார்டு போட்டுள்ளனர். அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், சிகாகோவில் சைக்கிள் ஓட்டிய வீடியோவை எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். மு.க.ஸ்டாலின் சைக்கிள் ஓட்டும் வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி, சகோதரரே, எப்போது சென்னையில் நாம் ஒன்றாக சைக்கிள் ஓட்டுவோம் என கேள்வி எழுப்பி இருந்தார்.

ராகுல் காந்திக்கு எக்ஸ் தளத்திலேயே பதில் அளித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "உங்களுக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் சென்னைக்கு வரலாம். ஒன்றாக சைக்கிளிங் சென்று சென்னையை சுற்றுவோம். சைக்கிள் ஓட்டிய பிறகு என் வீட்டில் சுவையான தென்னிந்திய மதிய உணவை ருசிப்போம். உங்களுக்கு தர வேண்டிய ஸ்வீட் பாக்ஸ் என்னிடம் இன்னும் பாக்கி உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

mk stalin dmk rahul gandhi

கூட்டணி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி: சில மாதங்களுக்கு முன், மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காகத் தமிழகம் வந்த ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காக, தமது பயணத்தின் இடையே நெடுஞ்சாலையில் அமைந்திருந்த ஓர் கடைக்கு செண்டர் மீடியனில் ஏறிக் குதித்துச் சென்று இனிப்புகளை வாங்கினார். அப்போது அங்கிருந்த பெண் ஒருவர் "யாருக்காக ஸ்வீட் வாங்குகிறீர்கள் ?" என்று ராகுல் காந்தியிடம் கேட்டார். அதற்கு அவர், "என்னுடைய சகோதரர் ஸ்டாலினுக்காக" என்று பதிலளித்தார்.

பொதுக்கூட்டத்திற்கு வந்த ராகுல் காந்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கைகுலுக்கி, கட்டியணைத்து வரவேற்றார். அப்போது, தான் வாங்கி வந்த ஸ்வீட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொடுத்து இன்ப அதிர்ச்சி அளித்தார் ராகுல் காந்தி. அதனை மிகுந்த அன்போடு பெற்றுக்கொண்டார் ஸ்டாலின். இந்நிலையில், அதே போல, அன்பைப் பரிமாறும் வகையில் இருவரும் எக்ஸ் தளத்தில் உரையாடி உள்ளது கவனம் பெற்றுள்ளது.

மறைமுக மெசேஜ்: குறிப்பாக, தமிழ்நாட்டில் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக பல்வேறு யூகங்கள் உலவி வரும் சூழலில், அந்த பேச்சுகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ராகுல் காந்தி மற்றும் ஸ்டாலினின் எக்ஸ் தள பதிவுகள் அமைந்திருப்பதாகச் சொல்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இதன் மூலம் கூட்டணி தொடர்பாக இரு கட்சியினருக்கும் ஸ்டாலினும், ராகுலும் மறைமுக மெசேஜ் கொடுத்திருக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+