'இந்தியா' கூட்டணி வெற்றி பெற்றால், தமிழ்நாட்டில் நீட் தேர்வு நிச்சயம் இருக்காது -ஸ்டாலின் உறுதி
சென்னை: 'இந்தியா' கூட்டணி வெற்றி பெற்றால், தமிழ்நாட்டில் நீட் தேர்வு நிச்சயம் இருக்காது என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
அதுமட்டுமல்ல ஒன்றியத்தின் புதிய ஆட்சியில் நீட் தேர்வு நிச்சயம் இருக்காது என்பதை, தேர்தல் வாக்குறுதியாகவே அளிக்க வைப்போம் எனக் கூறியுள்ளார். இது போல் ஒரு வாக்குறுதியை அ.தி.மு.க.வும் அதன் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.வும் தர முடியுமா? என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை வருமாறு;
மாணவர்களின் மருத்துவக் கல்லூரி கனவைச் சிதைக்கும் நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய அரசைக் கண்டித்தும் - அதற்குத் துணைபோகும் ஆணவம் பிடித்த ஆளுநரைக் கண்டித்தும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட உண்ணாநிலை அறப்போராட்டம் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.
காலை தொடங்கி மாலை வரையிலான இப்போராட்டத்தில் மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக உடன்பிறப்புகள், அணிகளின் செயல்வீரர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மட்டுமல்லாமல் ஏராளமான இளைஞர்கள், மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் பங்கெடுத்திருப்பதையும் ஊடகங்களின் வாயிலாகப் பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.
நீட் தேர்வை விலக்க வேண்டும் என்ற கோரிக்கையானது அரசியல் கோரிக்கையல்ல; அது கல்விக் கோரிக்கை. அதிலும் குறிப்பாக, சமூகச் சமத்துவக் கல்வியை விரும்பும் அனைவரது கோரிக்கை.நீட் தேர்வை விலக்க வேண்டும் என்ற கோரிக்கையானது திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியின் கோரிக்கையல்ல; அனைத்து மக்களின் கோரிக்கையாகவும் இன்று மாறி இருக்கிறது.
நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட காலத்தில் எதிர்த்தது நாம் சிலர்தான். ஆனால் இன்று இத்தேர்வின் கொடூரத் தன்மையை அனைவரும் அறிந்து விட்டார்கள். அதனால்தான் கட்சி எல்லைகளைக் கடந்து இத்தேர்வுக்கு எதிரான முழக்கம் நாடு முழுவதும் கிளம்பி வருகிறது. இவர்களது ஆதரவையும் சேர்த்து இப்போராட்டம் வெளிப்படுத்திவிட்டது.
மிக உறுதியாகக் கூறுகிறேன், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் பங்கெடுக்கும் 'இந்தியா' கூட்டணி வெற்றி பெற்றால், நீட் தேர்வு நிச்சயம் தமிழ்நாட்டில் இருக்காது என்ற உறுதியை நான் அளிக்கிறேன். ஒன்றியத்தின் புதிய ஆட்சியில் நீட் தேர்வு நிச்சயம் இருக்காது என்பதை, தேர்தல் வாக்குறுதியாகவே அளிக்க வைப்போம். அந்த வலிமையும் உறுதியும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு உண்டு.இப்படி ஒரு வாக்குறுதியை அ.தி.மு.க.வும் அதன் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.வும் தர முடியுமா?












Click it and Unblock the Notifications